வடகொரியாவில் "மோசமான நிகழ்வு" ஏற்படக் காரணமான தவறுகளுக்காக மூத்த தலைவர்களையும் அதிகாரிகளையும் அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் கடிந்து கொண்டிருக்கிறார். பலரை நீக்கியிருக்கிறார். இந்தத் தகவலை அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டிருக்கிறது.

வடகொரியாவில் கொரோனா தொற்று ஏதுமில்லை என்று தொடர்ந்து கூறப்பட்ட நிலையில் இந்தத் தகவல் வெளியாகி இருக்கிறது.

அந்த நாட்டில் கொரோனாவின் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கான அரிதான அறிகுறிகளில் ஒன்றாக இது கவனிக்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்

வடகொரியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாட்டின் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டிருக்கின்றன.

ஆனால் சில சர்வதேசத் தடைகள் காரணமாக நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதுடன் பொருளாதாரமும் முடங்கியிருக்கிறது.

ஒரு கட்டத்தில் நாட்டில் உணவுப் பற்றாக்குறை இருப்பதை அதிபர் கிம் ஜோங் உன் ஒப்புக் கொண்டார். உணவு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும் மக்கள் அனைவரும் அதற்குத் தயாராகும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

கிம் ஜோங் உன்னின் இந்த அறிவிப்பு வடகொரியாவில் 1990களில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்துடன் ஒப்பிடப்பட்டது.

சில நாள்களுக்கு முன்னதாக கிம் ஜோங் உடல் மெலிந்து விட்டதால் மக்கள் கவலையடைந்திருப்பதாக சாதாரண மக்களில் ஒருவர் பேசுவது போன்ற காணொளியை அரசுத் தொலைக்காட்சி வெளியிட்டது.

இந்த நிலையில் மோசமான நிகழ்வு ஒன்று நடந்திருப்பதாகவும் அதற்குக் காரணமான அதிகாரிகளை கிம் ஜோங் உன் கண்டித்திருப்பதாகவும் அரசு ஊடகம் கூறியிருக்கிறது. கட்சியின் உயர் நிலைக் கூட்டத்தின்போது இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.

Kim

அந்த மோசமான நிகழ்வு காரணமாக நாட்டுக்கும் மக்களுக்கும் பேரபாயம் ஏற்பட்டிருப்பாதகவும் அரசு ஊடகத்தின் செய்தியில் கூறப்பட்டிருக்கிறது.

கட்சியின் மூத்த உறுப்பினர்களில் பலர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களில் ஒருவர் அதிகாரம்மிக்க நிலைக் குழுவைச் சேர்ந்தவர் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலைக்குழுவில் கிம் ஜோங் உன்னையும் சேர்த்து மொத்தமே 5 பேர்தான். அவர்களில் ஒருவர் நீக்கப்பட்டிருப்பது நிலைமையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது.

எனினும் கவலை தரும் வகையிலான அந்த "மோசமான சம்பவம்" என்னவென்று அந்தச் செய்தியறிக்கையில் கூறப்படவில்லை.

நாட்டில் கொரோனா தனிமைப்படுத்தும் நடைமுறைகளில் பெரிய அளவிலான விதிமீறல்கள் ஏதேனும் நடந்திருக்கலாம் என்பதே கிம் ஜோங் உன்னின் கூற்றுக்குப் பொருளாக இருக்கலாம். இல்லையெனில் சீனாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே புதிதாக கடத்தல் வழிகள் ஏதேனும் கண்டறியப்பட்டிருக்கலாம்.

நாட்டில் கொரோனா பெருந்தொற்று பெருஞ் சவாலாக இருக்கும் என்று பொதுக்குழுவில் கூறப்பட்டிருந்த நிலையில், 11 நாள்களுக்குப் பிறகே அரசியல் தலைமைக் குழுவின் கூட்டம் நடந்திருக்கிறது.

அரசியல் ரீதியாக விரிசல்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே அரசியல் தலைமைக் குழுவில் இருந்து யார் நீக்கப்பட்டார் என்பது பொதுவெளியில் அறிவிக்கப்படவில்லை.

வடகொரியாவில் நிலைமை எந்த அளவுக்கு மோசம்?

வடகொரியாவில் கொரோனா தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. முறையான முன்னெச்சரிக்கை தகவல்கள் ஏதும் வழங்கப்படுவதில்லை.

மாறாக சீனாவில் இருந்து மஞ்சள் தூசுக் காற்று அடிக்க இருக்கிறது; மக்கள் அனைவரும் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்பது போன்ற செய்திகள் கூறப்படுகின்றன. ஆனால் மஞ்சள் தூசுக் காற்றுக்கும் கொரோனா வைரஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

வடகொரியாவில் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டிருப்பதால் சீனாவுடனான வர்த்தகம் வெகுவாகக் குறைந்துவிட்டது. உணவுப் பொருள்களும் மருந்தும்கூட கிடைக்கவில்லை.

நாட்டில் பொருளாதார நெருக்கடியும் உணவுப் பஞ்சமும் ஏற்படக்கூடும் என தன்னார்வ அமைப்புகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.

வடகொரியா முழுவதும் உணவுப் பொருள்களின் விலை உயர்ந்து விட்டதாகவும், பசியால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாகவும் கடந்த சில மாதங்களாகத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. உணவுக்காக மக்கள் பிச்சையெடுக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

நாட்டில் சுகாதார நிலைமை மோசமடைந்துவிட்டது என்பதை உணர்த்தும் குறியீடே அரசு ஊடகத்தில் வெளியாகி இருக்கும் அறிக்கை என்று சோல் பெண்கள் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லீப் எரிக் ஈஸ்லி கூறுகிறார்.

"இந்த நிலைக்கு "பலிகடா" ஆக்குவதற்கு கிம் ஜோங் உன் சிலரைத் தேடிக் கொண்டிருக்கலாம், விசுவாசமற்ற சிலரை அழிக்கவும் திட்டமிடலாம்" என்கிறார் அவர்.

"வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளைப் பெறுவதற்கு அரசியல் ரீதியாகத் தயார்படுத்தும் உத்தியாகவும்கூட இது இருக்கலாம்"

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி