அண்மையில் விடுதலை செய்யப்பட்ட பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளில் பெரும்பாலானோர் எதிர்வரும் ஒரு வருட காலத்திற்குள் விடுதலை செய்யப்பட இருந்தவர்களாவர் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பேசும்போது சில முக்கிய விடயங்களைக் கருத்திற்கொள்ள வேண்டும். தற்போது விடுவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் எதிர்வரும் ஒருவருடகாலத்திற்குள் விடுதலை செய்யப்பட இருந்தவர்களாவர்.

சிலர் தண்டனைக்காலத்தை விடவும் இரண்டு மடங்கான அல்லது அதனைவிடவும் அதிகமான காலத்தைத் தடுப்புக்காவலில் செலவிட்டுள்ளனர். மேலும் பலர் தடுப்புக்காவலில் இருந்தபோது சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் பல்வேறு ஆவணங்களில் கையெழுத்திடுமாறு வற்புறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த காலத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பலரைச் சந்தித்தது. அதுமாத்திரமன்றி மரணதண்டனைக் கைதிகளுடனும் சந்திப்புக்களை மேற்கொண்டது. அவர்களில் பெருமளவானோர் தாம் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு சில மாதங்களின் பின்னரே நீதிமன்ற மருத்துவ அதிகாரியிடம் அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் எதிர்கொண்ட சித்திரவதைகள் தொடர்பில் நீதிமன்ற மருத்துவ அதிகாரியிடம் எதுவும் கூறக்கூடாது என்று தடுப்புக்காவல் அதிகாரிகள் தம்மை மிரட்டியதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதே வேளை நீதிமன்ற மருத்துவ அதிகாரிகளும் தமிழ்க்கைதிகளுடன் சீராகப்பேசவோ அல்லது கேள்விகளைக் கேட்கவோ இல்லை. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சட்டத்தரணிகளை நாடுவதற்கோ அல்லது வேறு வழிகளில் சட்ட உதவிகளைப் பெறுவதற்கோ வசதியுடையவர்களாக இருந்தார்களா என்பது கேள்விக்குரிய விடயமாகும். “

அது மாத்திரமன்றி அவர்களுடைய வழக்கு விசாரணைகள் பெரும்பாலும் சிங்களமொழி மூலம் இடம்பெற்றமையினால், அதுகுறித்து பெருமளவிற்கு அறியாதவர்களாகவே இருந்தார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த 16 பேர் அண்மையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் 7 பேரின் தண்டனைக்காலம் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஜுன் மாதத்துடன் முடிவடைய இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி