உலகை உலுக்கிய ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு 22½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியா பொலிஸ் நகரை சேர்ந்தவர் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட். லாரி டிரைவரான இவர் கடந்த ஆண்டு மே மாதம் 25-ந் தேதி மினியா பொலிஸ் நகரில் உள்ள ஒரு கடைக்கு சென்று பொருட்களை வாங்கினார்.‌

அப்போது அவர் வழங்கிய பணத்தில் 20 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,500) கள்ளநோட்டு இருந்ததாக கடையின் ஊழியர் பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

அதன் பேரில் பொலிஸ் அதிகாரி டெரெக் சாவின் தலைமையில் 4பொலிசார் அங்கு விரைந்தனர்.‌ பின்னர் அவர்கள் புகார் தொடர்பாக விசாரிக்க அழைத்த போது ஜார்ஜ் பிளாய்ட் பொலிஸ் வாகனத்தில் ஏற மறுத்ததாக தெரிகிறது.

இதையடுத்து பொலிஸ் அதிகாரி டெரெக் சாவின் ஜார்ஜ் பிளாய்ட்டை தரையில் கிடத்தி அவர் கழுத்தை கால் முட்டியால் அழுத்தினார். ‘‘என்னால் மூச்சுவிட முடியவில்லை எழுந்திருங்கள்’’ என ஜார்ஜ் பிளாய்ட் கெஞ்சிய போதும் விடவில்லை. சிறிது நேரத்தில் பிளாய்ட் உயிரிழந்தார். ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணம் அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதையும் உலுக்கியது.

இனவெறிக்கு எதிராகவும் பொலிசாரின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்தும் அமெரிக்கா முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன.

இதையடுத்து டெரெக் சாவின் உள்பட 4பொலிசாரும் பணிநீக்கம் செய்யப்பட்டு, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். டெரெக் சாவின் மீது இரண்டாம் நிலை படுகொலை, மூன்றாம் நிலை படுகொலை மற்றும் மனித உயிர் இழப்பை ஏற்படுத்தியது ஆகிய 3 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

அதனைத் தொடர்ந்து டெரெக் சாவின் மீதான வழக்கு விசாரணை கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வழக்கு விசாரணையை எதிர்கொண்ட டெரெக் சாவின் ஏப்ரல் மாதம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த 12 நீதிபதிகளை கொண்ட அமர்வு டெரெக் சாவினுக்கான தண்டனை விவரங்களை நேற்று முன்தினம் அறிவித்தது.

அதன்படி ஜார்ஜ் பிளாய்ட்டை கொலை செய்த குற்றத்துக்காக டெரெக் சாவினுக்கு 22 ஆண்டுகள் 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.

டெரெக் சாவினுக்கான இந்த தண்டனை நம்பிக்கை மற்றும் அதிகாரத்தின் ஒரு நிலையை துஷ்பிரயோகம் செய்ததன் அடிப்படையிலும், ஜார்ஜ் பிளாய்ட்டுக்கு காட்டப்பட்ட குறிப்பிட்ட கொடூரத்தின் அடிப்படையிலும் வழங்கப்பட்டது என நீதிபதிகள் தனது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

நீதிபதிகள் தீர்ப்பை அறிவித்த பின்னர் கோர்ட்டில் பேசிய டெரெக் சாவின், ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்துக்கு தனது இரங்கலை தெரிவித்தார். அதே சமயம் அவர் மன்னிப்பு கோரவில்லை.

ஜார்ஜ் பிளாய்ட்டின் குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

அதேபோல் ஜனாதிபதி ஜோ பைடன், ‘‘டெரெக் சாவினுக்கான இந்த தண்டனை பொருத்தமானதாக தெரிகிறது’’ என கூறி தீர்ப்பை வரவேற்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி