பெருங் கடனுக்கும் பெருந்தொற்று நோய்க்குமிடையே தடுமாறுகிறது இலங்கை தீவு. யுத்தம் காரணமாக கடனாளியாக மாறிய இலங்கை தீவு 2009 இற்குப் பின்னரும் அதன் கடன் சுமையிலிருந்து மீள முடியவில்லை. அதனால் தான், அது கடனை அடைக்க கடன் வாங்கும் ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டது.

அதன் விளைவாகவே அது சீனாவிடம் நெருங்கிச் சென்றது. இப்போது சீனாவின் முதலீடுகளாகக் காணப்படும் அம்பாந்தோட்டைத் துறைமுகம் போன்ற பல விடயங்களை இந்தியா உட்பட ஏனைய நாடுகளுக்குத் தருவதற்கு சிறீலங்கா தயாராகக் காணப்பட்டது. ஆனால், அந்த முதலீடுகளைச் செய்வதற்கு இந்தியா போன்ற நாடுகள் தயாராக இல்லாத ஒரு பின்னணியில்தான் சீனா அங்கே முதலீடு செய்தது.

எனவே, இலங்கை தீவின் கடன் சுமையைக் குறைக்க உதவக்கூடிய ஒரே நாடாக அதிலும் குறிப்பாக மனித உரிமைகளை ஒரு முன் நிபந்தனையாக வைக்காத ஒரே நாடாக சீனாவை காணப்படுகிறது. இப்படித்தான் இலங்கை தீவு சீனாவின் கடன் பொறிக்குள் விழுந்தது.

சீனாவிடம் கடன் வாங்க முன்பே இலங்கை தீவு ஒரு கடனாளியாகதான் இருந்தது என்பதனை பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். முடிவில் சீனக் கடன் ஒரு பொறியாக மாறிய பொழுது இலங்கை தீவு அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்குக் குத்தகைக்கு எழுதிக் கொடுக்க வேண்டிய நிலைமைகள் தோன்றின.

இவ்வாறாக கடனில் மூழ்கியிருந்த இலங்கை தீவை கொரோனா வைரஸ் தாக்கிய பொழுது அது ஒரே நேரத்தில் கடனையும் வைரசையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கடந்த ஓராண்டு கால அனுபவத்தைத் தொகுத்துப் பார்த்தால் இரண்டிலுமே இலங்கை தீவு எதிர்பார்த்த வெற்றிகளைப் பெற முடியவில்லை என்று தெரிகிறது.

இதனால்தான், பொருளாதார அம்சங்களைக் கவனத்தில் எடுத்து நாட்டை முடக்குவதற்கு அரசாங்கம் தயங்குகிறது. வைரஸை வெற்றி கொள்வது என்றால் நாட்டை முடக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்கள் வற்புறுத்துகிறார்கள். ஆனால், நாட்டை முடக்கினால் கடன் சுமை மேலும் அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

இது தவிர, தனது வெளியுறவுக் கொள்கை காரணமாக அதாவது சீனச் சாய்வு வெளியுறவுக் கொள்கை காரணமாக அமெரிக்காவிடமிருந்தும் இந்தியாவிடமிருந்தும் கிடைக்கக்கூடிய உதவிகளும் வரையரைக்குட்பட்டு விட்டன. குறிப்பாக தடுப்பூசி விடயத்தில் இந்தியா இலங்கைக்கு உதவத் தயாரில்லை என்று தெரிகிறது. இந்தியா ஒப்புக்கொண்ட நிதி உதவிகளையும் அந்நாடு தற்பொழுது செய்யத் தயாராக இல்லை என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது.

மேலும், இலங்கை இப்பொழுது நடுத்தர வருமானத்தைப் பெறும் நாடாக மாறி வருவதால் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றிடமும் உதவி பெற முடியாத ஒரு நிலை உண்டு. இவ்வாறானதொரு பின்னணியில்தான் அண்மையில் பங்களாதேஷிடம் இலங்கை கடன் வாங்க வேண்டி வந்தது.

இலங்கை தீவின் பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றோடு ஒப்பிடுகையில் பங்களாதேஷ் மிகவும் இளைய நாடு. அது 1971ஆம் ஆண்டுதான் உருவாக்கப்பட்டது. ஆனால், அரை நூற்றாண்டு காலத்தில் அமோக வளர்ச்சி கண்டிருக்கிறது. அதன் விளைவாக சில தசாப்தங்களுக்கு முன்பு கடன் வாங்கும் நாடாக இருந்த பங்களாதேஷ் இப்பொழுது கடன் கொடுக்கும் நாடாக எழுச்சி பெற்றிருக்கிறது.

இவ்வாறாக ஒருபுறம் கடன், இன்னொருபுறம் வைரஸ் இரண்டையும் ஒரே நேரத்தில் சமாளிப்பதற்கு இலங்கை தீவால் முடியாதிருக்கிறது. இது காரணமாக அரசாங்கத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அதிருப்திகள் அதிகரித்து வருகின்றன. அரசாங்கத்தின் மீது சாதாரண சனங்கள் கொண்டிருந்த மாயை தகரத் தொடங்கிவிட்டதாக தென்னிலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்துக்கு உள்ளேயும் அதன் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர்கள், உழைத்தவர்கள் அதை விமர்சிக்கக் காணலாம். ஆனால், இவை எல்லாவற்றையும் தொகுத்து அரசாங்கம் ஈடாடிக்கொண்டிருக்கிறது என்று கூறுவது சற்று மிகைப்படுத்தப்பட்ட ஓர் ஆய்வு முடிவு.

அரசாங்கம் கடனை அடைக்க முடியவில்லை என்பது உண்மை. ஆனால், இலங்கை தீவின் பொருளாதாரம் ஒரு மிகச்சிறிய பொருளாதாரம். அது கீழே போகும்போது அதை தாங்கிப் பிடிக்கவும் தூக்கி நிறுத்தவும் சீனாவைப் போன்ற மிகப்பெரிய பொருளாதாரங்களால் முடியும். மு.திருநாவுக்கரசுவின் வார்த்தைகளில் சொன்னால் இலங்கை தீவின் சிறிய உண்டியலை நிரப்ப சீனாவின் சில்லறைகளே போதும்.இவ்வாறு கடனையும் வைரசையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் அரசாங்கம் வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முற்றுமுழுதாக முடக்கத் தயங்குகிறது.

போதாக்குறைக்கு, அண்மையில் கொழும்புத் துறைமுகத்தில் இரசாயனங்களுடன் தரித்து நின்ற கப்பல் தீப்பிடித்து மூழ்கியது. இது சுற்றுச்சூழலுக்கு மட்டும் கேடாக அமையவில்லை, அதோடு சேர்த்து இலங்கை தீவின் கடற்றொழில் வாணிபத்தையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். இலங்கைக்கு வருமானம் ஈட்டித் தரும் துறைகளில் முக்கியமானது உல்லாசப் பயணத்துறை.

இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் அம்சங்களில் ஒன்று இங்குள்ள கடல் உணவுகள் ஆகும். ஆனால், கப்பல் எரிந்து உருவாக்கிய மாசாக்கம் கடல் உணவுகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது. உல்லாசப் பயணிகள் கடல் உணவுகளைத் தவிர்க்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வைரஸ் தொற்றுக்கு உல்லாசப் பயணிகளும் ஒரு காரணம்தான். இது விடயத்தில் அரசாங்கம் ரிஸ்க் எடுத்து உல்லாசப் பயணிகளை உள்ளே வரவிட்டது. ஆனால், இப்பொழுது கப்பல் எரிந்து மூழ்கியதால் அந்தத் துறையிலும் வீழ்ச்சிக்கான வாய்ப்புகள் தெரிகின்றன.

இப்படிப்பட்டதோர் அரசியல் பொருளாதாரப் பின்னணியில்தான் முழு அளவிலான சமூக முடக்கத்தின்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை முடக்குவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. எனவே, பயணத்தடை என்று கூறி ஒருவித அரைச் சமூக முடக்கம்தான் தற்பொழுது நாட்டில் அமுலில் உள்ளது. இந்த அரை முடக்கத்திற்குள் உற்பத்தித் துறைகள் யாவும் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேலும் கடனில் மூழ்குவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கலாம். இது காரணமாக அரசாங்கம் சமூக முடக்கத்தைப் பயணத் தடை என்ற பெயரில் அரைகுறையாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் விளைவாக பிரதான சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி பொலிசாரும் படைத்தரப்பும் போக்குவரத்தைக் கண்காணித்து வருகிறார்கள்.

ஆனால், சமூகத்தின் செல்வாக்குமிக்க பிரிவினரும் வசதி வாய்ப்புகள் அதிகமுடைய பிரிவினரும் தடையை இலகுவாககக் கடந்து விடுகிறார்கள். அவர்களிடம் பயண அனுமதி உண்டு. இப்படிப் பார்த்தால் பயணத் தடை எனப்படுவது ஏழைகளுக்கு மட்டுமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், ஏழைகள் நாட்டின் உட்சாலைகளில் தாராளமாகத் திரிகிறார்கள். வீட்டுக்கு வெளியே வந்தால்தான் அவர்களுக்கு உழைப்பிருக்கும், பொருள் கிடைக்கும். எனவே அவர்கள் வீட்டுக்கு வெளியே வரவேண்டிய தேவை இருக்கிறது.

நாட்டின் குக்கிராமங்களில் உள்வீதிகளில் கடைகள் அரைக் கதவில் அல்லது முழுக்கதவும் திறந்திருக்கின்றன. இல்லையென்றால் கடைகளுக்கு முன்னே விலைப்பட்டியல் வைக்கும் இடத்தில் பின்கதவால் பொருட்களைப் பெறலாம் என்று எழுதப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் இந்த இடத்தில் அபத்தமான ஒரு கேள்வியைக் கேட்கலாம். வைரஸ் முன் கதவால் தான் வருமா, பின்கதவால் வராதா? அல்லது வைரஸ் பிரதான சாலைகளின் வழியாகத்தான் வருமா? ஒழுங்கைகளின் வழியே வராதா?

எனினும், இந்த அரைச்சமூக முடக்கம் கூட எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்பதைத்தான் ஆகப்பிந்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பயணத் தடைகளின் மூலம் நோய்த்தொற்றுச் சங்கிலியை முழுமையாக உடைக்க முடியவில்லை. அதேபோல நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கையையும் பெரியளவிற்குக் குறைக்க முடியவில்லை.

இவ்வாறு கடனுக்கும் வைரசுக்கும் இடையே தடுமாறும் இலங்கை தீவில் வடக்கு, கிழக்கில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு உதவ லண்டனை மையமாகக் கொண்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் முன்வந்தன. உதவியை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனூடாகத் தருவதற்கு முயற்சித்தன.

ஆனால், புலம்பெயர்ந்த தமிழர்களிடம் இருந்து வரக்கூடிய உதவிகளை தமிழ் மாவட்டங்களுக்கு மட்டும் என்று கேட்டுப் பெறுவது சரியல்ல என்றும் ஒரு பெரும் தொற்றுநோய் காலத்திலும் உதவிகளை இன ரீதியாகப் பாகுபடுத்தக் கூடாது என்றும் சுமந்திரன் லண்டன் வாழ் தமிழர்களுக்கு கூறியிருக்கிறார்.

எனவே முழு இலங்கை தீவுக்கும் என்று அந்த உதவிகளைத் தந்தால்தான் அரசாங்கத்தோடு அது தொடர்பாக உரையாடலாம் என்றும் தெரிவித்திருக்கிறார். அதற்குப் புலம்பெயர்ந்த தமிழர்களும் சம்மதித்திருக்கிரார்கள். எனவே, அந்த வேண்டுகோளை சுமந்திரன் உத்தியோகபூர்வமாக அரசாங்கத்திடம் முன்வைத்திருக்கிறார். ஆனால், அரசாங்கம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவ்வாறு புலம்பெயர் தமிழர்களிடமிருந்து உதவிகளைப் பெற்றால் அது ஒரு விதத்தில் அவர்களை அங்கீகரிப்பதாக அமைந்துவிடும் என்று அரசாங்கம் கருதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதோடு கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்கு புலம்பெயர்ந்த தமிழ் தரப்புக்கள் முயற்சிக்கலாம் என்றும் அரசாங்கம் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது. எனவே, மேற்படி உதவியை அரசாங்கம் நிராகரித்து விட்டது.

அதேசமயம் லண்டனை மையமாகக் கொண்ட புலம்பெயர்ந்த சிங்கள மக்கள் வழங்கிய உதவிகளை அரசாங்கம் நிபந்தனைகளின்றிப் பெற்றிருக்கிறது. இது தொடர்பாக லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நிறுவனங்களாகவும் தனி நபர்களாகவும் யார் யார் என்ன உதவிகளைச் செய்தார்கள் என்ற விவரம் காட்டப்பட்டிருக்கிறது.

ஒருபுறம் கடனில் தத்தளிக்கும் அரசாங்கம் பங்களாதேஷ் போன்ற நாடுகளிடம் கையேந்துகிறது. அதேசமயம் புலம்பெயர்ந்த தமிழர்கள் தர முன்வந்த உதவிகளை வேண்டாம் என்று கூறிவிட்டு புலம்பெயர்ந்த சிங்கள மக்கள் தரும் உதவிகளைப் பெற்றுக் கொள்கிறது. அதாவது, அரசாங்கம் இனவாதம் என்ற ஒரு வைரஸை தன்னோடு வைத்துக்கொண்டு கொவிட்-19 என்ற ஒரு வைரசுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறது?

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி