ஒழிப்பு ஆணைக்குழு நேற்று (30ஆம் திகதி) முறைப்பாட்டாளரிடம் மூன்று மணித்தியாலங்களுக்கும் மேலாக வாக்குமூலம் பெற்றுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் ஐந்து அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ஒரு பிரதி அமைச்சர் சொத்துக்களை ஈட்டிய விதம் குறித்து விசாரணை நடத்துமாறு கோரி, ‘இலஞ்சம், ஊழல் மற்றும் வீணடிப்புக்கு எதிரான சிவில் அதிகாரம்’ அமைப்பின் தலைவர் ஜாமுனி காமந்த துஷார செய்த முறைப்பாட்டிற்கு அமையவே இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
அமைச்சரவை அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, வசந்த சமரசிங்க, குமார ஜயகொடி, சுனில் ஹந்துன்னெத்தி, நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஆகியோர் சொத்துக்களை ஈட்டிய விதம் குறித்து முறையற்ற சொத்துக் குவிப்பு விசாரணையை நடத்துமாறு அந்த முறைப்பாட்டின் மூலம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கோரப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாடு தொடர்பில் அழைக்கப்பட்டதற்கிணங்க, நேற்று (30ஆம் திகதி) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த பின்னர், ஜாமுனி காமந்த துஷார ‘திவயின’ பத்திரிகைக்கு இவ்வாறு தெரிவித்தார்:
"இந்த முறைப்பாடு குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சுயாதீனமான விசாரணையை முன்னெடுக்கும் என நம்புகிறேன். அதேபோல், இந்த அமைச்சர்களிடமும் இது குறித்து வாக்குமூலம் பெறப்படும் என எதிர்பார்க்கிறேன். அமைச்சர்களின் சொத்துக்கள் தொடர்பாக இதற்கு முன்னர் கூறப்பட்ட கருத்துக்கள் குறித்து மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைச் சிதைக்காமல் செயற்படுவது அவர்களின் கடமையாகும்.
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின்படி, சொத்துக்கள் எவ்வாறு ஈட்டப்பட்டன, அவர்கள் கூறிய தகவல்கள் உண்மையானவையா, அல்லது மோசடியான முறையில் சொத்துக்களைக் காண்பித்து எதிர்காலத்தில் மேலும் முறையற்ற வகையில் சம்பாதிப்பதற்கு முற்படுகிறார்களா என்ற சந்தேகம் உள்ளது."
இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவிக்கையில், தமது கட்சியின் எவருக்கும் சொத்து விபரங்கள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வருமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இதுவரை அறிவிக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.
மேலும், தமது கட்சியைச் சேர்ந்த எவரும் இதுவரை முறையற்ற வகையில் பணம் சம்பாதிக்கவில்லை எனவும், எதிர்காலத்திலும் அவ்வாறு செய்யமாட்டார்கள் எனவும் பொதுச் செயலாளர் உறுதிப்படத் தெரிவித்தார்.


