கடந்த மாத தொடக்கத்தில், வேதிப் பொருள்களைக் கொண்டு வந்த ஒரு சரக்குக் கப்பல் இலங்கைக் கடற்கரையில் தீப்பிடித்தது - இதனால் ஏற்பட்டிருக்கும் சுற்றுச்சூழல் பேரழிவின் தாக்கத்தை இந்தத் தீவு இன்னும் பல தசாப்தங்கள் தாங்க வேண்டியிருக்கும்.

சில நாட்களாக அது இலங்கைக் கடற்கரையில் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட கரும் புகை மண்டலம் பல மைல்களுக்கு அப்பாலும் பரவியது. ஆனால் எக்ஸ்-பிரஸ் பர்ல் என்ற இந்தக் கப்பல் இப்போது பாதி மூழ்கிய நிலையில் இலங்கை கரையோரத்தில் அமைதியாக இருக்கிறது. அதன் அடிப்பகுதி, ஆழமற்ற கடல் படுகையில் அழுந்தியுள்ளது.

இப்போது தீப்பிழம்புகள் அணைந்திருந்தாலும் - பிரச்சினைகள் இப்போது தான் தொடங்கியுள்ளன.

கப்பலில், ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கொள்கலன்கள் மலையெனக் காட்சியளிக்கின்றன. அவற்றில் உள்ள பல வேதிப் பொருள்கள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தானவை - இவற்றில் சில ஏற்கனவே கசிந்துள்ளன. இது கடல் வாழ் உயிரினங்களைப் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

அருகிலுள்ள உள்ளூர் கடற்கரைகளை நோக்கி டன் கணக்கில் சிறிய பிளாஸ்டிக் துகள்கள் ஏற்கனவே அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. நூற்றுக்கணக்கான டன்கள் எஞ்சின் எரிபொருள் மூழ்கியிருக்கும் அடிப்பகுதியில் சேமிக்கப்பட்டுள்ளது. அதுவும் கடலில் கசியும் வாய்ப்புள்ளது.

சுற்றுச்சூழல் ஆபத்துகளைத் தாண்டி, உள்ளூர் சமூகங்களும் ஒரே நாளில் வேலையிழந்து தவிக்கும் மீனவச் சமூகமும், ஏற்பட்டுள்ள இழப்புகளிலிருந்து மீள இன்னும் பல காலம் ஆகும்.

கடல் மாசு

கடல் மாசு

"நாங்கள் சிறிய மீனவர்கள், நாங்கள் தினமும் கடலுக்குச் செல்கிறோம். நாங்கள் கடலுக்குச் சென்றால் தான் எங்களுக்கு வருமானம். இல்லையெனில் எங்கள் குடும்பம் முழுவதும் பட்டினி கிடக்க வேண்டியது தான்" என்று ஓர் உள்ளூர் மீனவர் டேனிஷ் ரோட்ரிகோ  தெரிவித்தார்.

கோடிக்கணக்கில் பிளாஸ்டிக் துகள்கள்

இந்தப் பேரழிவுச் சம்பவத்தின் புகைப்படங்களைப் பார்க்கும்போது ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. சிறிய உருண்டை பிளாஸ்டிக் துணுக்குகள் கண்ணுக்குத் தெரிந்தவரை கடல்பரப்பில் பரவியுள்ளன.

இந்த பிளாஸ்டிக் துகள்கள், நர்டில்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றன, பெரும்பாலான பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிக்க இவை பயன்படுத்தப்படுகின்றன.

"அந்தக் கப்பலில் சுமார் 46 வகை வேதிப் பொருள்கள் இருந்தன. ஆனால் இதுவரை அதிகம் கண்ணுக்குத் தெரியும் பாதிப்பு இந்த பிளாஸ்டிக் உருண்டைகள்தான்." என்று இலங்கையின் சுற்றுச்சூழல் ஆர்வலரும் தலைநகர் கொழும்பில் உள்ள சுற்றுச்சூழல் நீதி மையத்தின் நிறுவனருமான ஹேமந்தா விதானகே தெரிவித்தார்.

உயிரற்ற மீன்

உயிரற்ற மீன்

மே மாதத்தின் பிற்பகுதியில் இருந்து, எக்ஸ்-பிரஸ் பர்ல் கப்பலில் இருந்து கசிந்த இந்தத் உருண்டைகள், நெகம்போ கடற்கரைகளில் வந்து படிந்தன. அங்குள்ள மீன்கள் வயிறு வீங்கியும் அவற்றின் உடல்களில் இந்த பிளாஸ்டிக் குண்டுகள் ஒட்டிக்கொண்டும் காணப்பட்டன.

இலங்கை கடலில் எரிந்து மூழ்கும் கப்பல்: மிக ஆபத்தான அமிலங்கள் சிந்தும் அபாயம்

கொழும்பு அருகே கப்பலில் பரவிய தீ: சாம்பல் மேடாய் காட்சியளிக்கும் கடற்கரை

பிளாஸ்டிக் மட்குவதற்கு 500 முதல் 1000 ஆண்டுகள் வரை ஆகலாம், மேலும் கடல் நீரோட்டங்களால் இலங்கையைச் சுற்றியுள்ள கரையோரங்களுக்கும், கப்பல் எரிந்த இடத்திலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடற்கரைகளுக்கும் இவை கொண்டு செல்லப்படலாம்.

கண்ணுக்குத் தெரியும் பாதிப்பாக இது இருந்தாலும், இது சித்தரிக்கப்படும் அளவுக்கு ஆபத்தானது அன்று.

"இந்த பிளாஸ்டிக் உருண்டைகள், நாம் உண்ணும் மீன்களுக்குள் இருந்தால், அவை வழக்கமாக மீனின் செரிமான மண்டலத்தில் இருக்கும். ஆனால் ஒரு சில வகைகளைத் தவிர பொதுவாக நாம் முழு மீன்களை உட்கொள்வதில்லை. பிளாஸ்டிக் பெல்லட்டுகள் குறித்துப் பொதுவாக அதிக பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. பிளாஸ்டிக் உட்கொண்ட மீன்களை மனிதர்கள் சாப்பிடுவதால் தீங்கு விளையும் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லை" என்கிறார் அவுஸ்திரேலியாவின் சி.எஸ்.ஐ.ஆர்.ஓ பெருங்கடல்கள் மற்றும் வளிமண்டலம் என்ற அமைப்பைச் சேர்ந்த பிரிட்டா டெனிஸ் ஹார்டஸ்டி.

குடும்பமே பசியால் வாடும்

மீன்கள்

ஆனால் நீர்கொழும்பு மீனவர்கள் மீனின் உடலுக்குள் இருப்பது என்ன என்பது பற்றிக் கவலை கொள்வதில்லை. மீன் பிடிக்க முடியாமல் போய்விடக்கூடுமோ என்பது தான் அவர்களது அச்சம்.

பாதிக்கப்பட்ட பகுதியில் மீன்பிடித்தல் இப்போது தடைசெய்யப்பட்டுள்ளது - அதாவது அவர்களில் பலர் ஒரே இரவில் வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்துவிட்டார்கள்.

மீன்கள்

"இப்பகுதியில் உள்ள பவளப்பாறைகளில் மீன்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. ஆபத்தான இரசாயனங்கள் காரணமாக அந்த இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன என்று அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த 35 ஆண்டுகளாக மீன் பிடிக்கும் தொழில் செய்யும் டியுலின் ஃபெர்னாண்டோ, கடலில் குதித்து இறப்பதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறுகிறார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த கப்பல் உரிமையாளர்களிடமிருந்து இழப்பீடு மற்றும் காப்பீட்டுப் பணத்தை அரசாங்கம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், அந்தப் பணத்தின் பெரும்பகுதி தங்களுக்கு உதவப் பயன்படும் என்று உள்ளூர்வாசிகள் நம்பவில்லை.

மீனவர்கள் மற்றும் அவர்களை சார்ந்த சமூகத்தினருக்கும் அதிக உதவி தேவை என்று மீனவர் சங்கம் கூறியது.

"நாங்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. தொடர்புடைய பல தொழில்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. வலைகள், என்ஜின்கள், படகுகள், எரிபொருள் எனப் பல தேவைகள் உள்ளன. படகு வலிப்பவர்கள் உள்ளனர். மீன்பிடித் தொழிலுடன் பின்னிப்பிணைந்த ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உள்ளன" என்று குழுவின் தலைவரும் ஒரு மீனவருமான டென்சில் ஃபெர்னாண்டோ கூறுகிறார்.

உள்ளூர் மீனவர்

உள்ளூர் மீனவர்

பல தசாப்தங்களுக்கு நாட்டை பாதிக்கக்கூடிய மிக நீண்டகால தாக்கம், இரசாயன மாசுபாடு.

கப்பலில் நைட்ரிக் அமிலம், சோடியம் டை ஆக்சைடு, தாமிரம் மற்றும் ஈயம் ஆகிய ஆபத்தான வேதிப் பொருட்கள் உள்ளன என்று திரு விதானகே கூறுகிறார்.

தண்ணீரில் கலந்து விட்ட இந்த வேதிப் பொருள்கள் அங்குள்ள கடல் வாழ் உயிரினங்களின் வயிற்றில் நுழைகின்றன. நச்சுத்தன்மையின் விளைவாக சிறிய மீன்கள் விரைவாக இறக்கக்கூடும், ஆனால் பெரிய வகை மீன்கள் பெரும்பாலும் பிழைத்துக் கொள்ளும். ஆனால், சிறிய மீன்களை இரையாகக் கொள்வதனால், அவற்றின் உடலிலும் நச்சுத் தன்மை கலந்துவிடுகிறது.

மீன், ஆமைகள் மற்றும் டால்பின்கள் ஏற்கனவே கடற்கரைகளில் இறந்து கிடந்துள்ளன என்று திரு விதானகே கூறுகிறார். அவற்றில் சில பச்சை நிறமாக மாறியிருந்தன. உலோக, வேதி மாசு கலந்திருப்பதை இது உறுதிப்படுத்துகிறது என்றும் இவர் கூறுகிறார்.

இலங்கைக்கு புதிய சவாலை ஏற்படுத்தி இருக்கும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து

"எனவே சில ஆண்டுகள் கழித்து நீங்கள் ஒரு டுனா மீனைப் பிடித்தால், அதிலும் இந்த நச்சு கலந்திருக்கலாம். இந்த பயோ அக்யுமுலேஷன் ஒரு கடுமையான பிரச்சினையாக இருக்கும்." என்கிறார்.

அதாவது, இப்பகுதியில் இருந்து வரும் மீன்கள் மனிதர்களுக்கு ஆபத்தானதாக இருக்கும் - இப்போதைக்கு மட்டுமல்ல, இன்னும் பல ஆண்டுகளுக்கு

"இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இது இப்போது முற்றிலும் நச்சுக் கப்பலாக மாறியுள்ளது. இதிலிருந்து கரைக்கு வரும் எந்தவொரு பொருளும் நச்சுத் தன்மையுடன்தான் இருக்கும். மக்கள் அதைத் தொடக்கூடக்கூடாது." என்று இவர் எச்சரிக்கிறார்.

இந்த விபத்து நடந்துள்ள இலங்கையின் மேற்கு கடற்கரையில் மட்டும் தான் இந்தப் பிரச்சினை என்றில்லை. "கழிவுகள், நச்சுகள் அல்லது பிளாஸ்டிக்குகள் எல்லைக் கோடுகளுக்கு கட்டுப்பட்டவை அல்ல" என்று அவுஸ்திரேலியாவின் சி.எஸ்.ஐ.ஆர்.ஓ பெருங்கடல்கள் மற்றும் வளிமண்டல அமைப்பின் பிரிட்டா டெனிஸ் ஹார்டஸ்டி தெரிவித்தார்.

சுத்தப்படுத்தும் பணி

"அவை காற்று, அலைகள், நீரோட்டங்கள் ஆகியவற்றால் அடித்துச் செல்லப்பட்டு, கால நிலை மாற்றத்தால் மாற்றம் அடைகின்றன" என்கிறார் இவர்.

சுத்தப்படுத்தும் பணி

இதற்கு முன்னர் கப்பல் விபத்துக்கள் பல ஏற்பட்டிருந்தாலும், இலங்கை இதுபோன்ற நச்சுத் தன்மை கொண்ட விபத்தை ஒருபோதும் எதிர்கொண்டதில்லை - இது போன்ற கடினமான நிலைமைக்கு அந்நாடும் தயார் நிலையில் இல்லை.

இந்தப் பிரச்சினையை சமாளிப்பதில் சர்வதேச வல்லுநர்கள் முக்கியமானவர்களாக இருப்பார்கள் என்று ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

எக்ஸ்-பிரஸ் பர்ல்-ன் கப்பல் நிறுவனம் ஏற்கனவே ஒரு சர்வதேச நிறுவனத்தை இந்நெருக்கடிக்கு எதிர்வினையாற்ற நியமித்துள்ளது, மேலும் அதன் வல்லுநர்கள் இலங்கையில் களத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளது.

ஆனால் ஒரு இலாப நோக்குள்ள நிறுவனம் உண்மையில் இந்த நிலைமையில் உதவ முடியுமா என்று சந்தேகிக்கிறார் விதானகே. கப்பல் விபத்து ஒரு உயர் காப்பீட்டு வழக்காக மாறியுள்ளது என்றும் ஒரு பெரிய தொகை வழங்கப்படுவதால், கடல் வாழ்வின் மீதான தாக்கத்தைக் குறித்த குரல்களும் நசுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் நீதி மையம் இந்த நிலைமை தொடர்பாக, இலங்கை அரசு மற்றும் கப்பல் நிறுவனம் இரண்டின் மீதும் வழக்குத் தொடுத்துள்ளது, ஆனால் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சிறந்த வழி என்று இந்தக் குழு ஒப்புக்கொள்கிறது.

இப்போதைக்கு, விதானகேவின் மிகப்பெரிய நம்பிக்கை என்னவென்றால், இந்தப் பேரழிவு குறைந்தபட்சம் இதுபோன்ற மற்றொரு பேரழிவைத் தடுக்க ஒரு பாடமாக இருக்கும் என்பதே.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி