பால் பண்ணையாளர்களுக்குரிய வசதி வாய்ப்புகளை அரசாங்கம் உருவாக்கித் தரவேண்டும் என்று கூறுகின்றார் கல்முனை பிரதேசத்தில் கால்நடைவளர்ப்பில் ஈடுபட்டு வரும் உதயகுமார்.

தற்போது நிலவும் கொரோனா தொற்றுப் பரவல், பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை நம்பி தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வரும் பண்ணையாளர்கள் மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியிலே தமது குடும்ப சீவியத்தை நடத்தி வருகின்றனர்.

பெருந்தொற்றுக் காலத்தில் கூட பண்ணையாளர்கள் தங்களது பால் உற்பத்தியை விற்பனை செய்ய முடியாதுள்ளனர். தூர இடங்களில் இருந்து வருகை தரும் வியாபாரிகள் கூட வருகை தருவதில்லை. எல்லாப் பொருட்களுக்கும் விலை ஏறியுள்ள போதிலும் பாலின் விலையில் மட்டும் மாற்றம் ஏற்படாதுள்ளது. ஒரு லீற்றர் பாலை 75 ரூபாவுக்கே விற்கின்றனர். இவர்களிடம் பால் பெறுகின்றவர்கள் அதனை 105 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றனர்.

இதனால் நியாய விலையில் பாலை விற்பனை செய்ய முடியாதுள்ளனர். பண்ணையாளர்களது பாலை கொள்வனவு செய்யும் அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் உற்பத்தி செலவினை கருத்தில் கொண்டு நியாய விலையில் பாலை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கால்நடை வளர்ப்பாளர்கள் கோருகின்றனர்.

இயந்திரங்கள் மூலம் வயல் நிலங்களில் நெல் அறுவடை நடைபெறுவதனால் மாட்டுக்குரிய போதியளவு வைக்கோலைக் கூட பெற முடியாதுள்ளனர். முன்னர் இலவசமாகவும், குறைந்த விலைக்கும் பெற்று வந்த வைக்கோலை தற்போது 8000 ஆயிரம் ரூபா கொடுத்து பெற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை கால்நடைகளைப் பராமரிக்கின்ற செலவுகள் அதிகரித்துள்ளன.

மாடுகளுக்கு நோய் ஏற்படுகின்ற நிலையில் அதற்குரிய ஊசி மற்றும் மருந்துகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. தற்போது பராமரிப்புச் செலவுகள் அதிகரித்துள்ளதால் பரம்பரை பரம்பரையாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்ட பலர் தங்களால் தொடர்ந்தும் கால்நடைவளர்ப்பில் ஈடுபட முடியாது இத்தொழிலை கைவிட்டுச் செல்லும் நிலையிலுள்ளனர்.

பண்ணையாளர்களுக்கு உதவிகள், சலுகைகள் வழங்கப்படுவதாக கூறப்படுகின்ற போதிலும் அவை எதுவும் தமக்கு கிடைப்பதில்லை என இங்குள்ள பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.

கொரோனா தொற்றுக் காரணமாக கால்நடைகளை பராமரிக்கவும், உற்பத்தி செய்யப்படும் பாலை விற்பனை செய்யவும் முடியாது மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியில் வருமானத்தை இழந்து வாழ்ந்து வரும் பண்ணையாளர்களின் குடும்பத்திற்கு உதவிகளைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கமும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கால்நடை வளர்ப்பாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி