இந்திய அரசின் பிரதிநிதியாக லட்சத்தீவில் நிர்வாகியாக இருக்கும் பிரஃபுல் படேல் எடுக்கும் நடவடிக்கைகள் கவலையளிப்பதாக பிரதமர் மோதிக்கு ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். 'பெருநிறுவனங்களின் வளர்ச்சிக்குத் துணை போவதாகவும் உள்ளூர் மக்களை அவர்களுடைய நிலத்தில் இருந்து விரட்டக் கூடிய வகையிலும் அவருடைய செயல்கள் உள்ளன' எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளினல் உயர் பொறுப்புகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள், `அரசியலமைப்புச் சட்டத்தின்வழி நடக்க வலியுறுத்தும் குழு (constituition conduct group)' என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர்.

இந்த அமைப்பில் இந்திய ஆட்சிப் பணி, வெளியுறவுத் துறைப் பணி, காவல் பணி, வனத்துறைப் பணி, வருவாய் பணி என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக வருகின்றனர். விவசாயிகள் போராட்டம், கொரோனா பேரிடர் என ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்திய அரசின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி இந்த அமைப்பு அரசுக்கு கடிதம் எழுதி தங்களுடைய யோசனைகளைத் தெரிவிக்கும்.

அந்த வகையில், லட்சத்தீவில் அண்மைக்காலமாக நடக்கும் செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோதிக்கு விரிவான கடிதம் ஒன்றை இந்த அமைப்பினர் சமீபத்தில் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் செயலர் பி.எஸ்.எஸ்.தாமஸ், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலராக இருந்த மீனா குப்தா, இந்தியாவின் முதல் தலைமை தகவல் ஆணையரும் லட்சத் தீவுகளில் நிர்வாகியாகப் பணிபுரிந்தவருமான வஜாகத் ஹபிபுல்லா, மேற்கு வங்க அரசில் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஜி.பாலச்சந்திரன், மகாராஷ்டிரா மாநிலத்தில் மின் ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவரான வி.பி.ராஜா உட்பட 93 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.

``சிசிஜி அமைப்பு, கடந்த 5ஆம் தேதி இந்திய பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தின் நகல் உள்துறை அமைச்சருக்கும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

மத்திய அரசிலும் மாநில அரசுகளிலும் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அதிகாரிகளால் எழுதப்பட்ட கடிதம் இது. ஒரு குழுமம் என்ற அளவில் எந்தவிதமான அரசியல் தொடர்போ, அரசியல் உறவோ எங்களுக்குக் கிடையாது. நாங்கள் நடுநிலைமை, ஒருபுறம் சாராமை போன்ற கொள்கைகளை நம்புகின்றோம். அரசின் எல்லாச் செயல்களும் இந்திய அரசியலமைப்பின்கீழ் நடப்பதாக இருக்க வேண்டும் என்று நம்புகின்றவர்கள் நாங்கள். இன்று லட்சத்தீவு என்ற யூனியன் பிரதேசத்தில் முன்னேற்றம் என்ற பெயரில் நிகழ்கின்ற, பலத்த எதிர்மறை விளைவுகளை லட்சத்தீவுவாசிகளுக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் ஏற்படுத்தப்போகும் சில குழப்பமான செயல்களைப் பற்றிய எங்களின் ஆழ்ந்த கவலைகளைத் தெரிவித்துக் கொள்வதற்காக இந்த கடிதத்தை எழுதியுள்ளோம்" என்கிறார், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஜி.பாலச்சந்திரன்.

இக்கடிதத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பின்வருமாறு:

லட்சத்தீவின் பாரம்பரியம்

லட்சத்தீவு

இந்தியாவின் பூகோளம் மற்றும் கலாசார பன்முகத்தன்மையின் எடுத்துக்காட்டாக விளங்குகின்ற தனித்துவமான தீவுக்கூட்டமாக லட்சத் தீவு உள்ளது. இது சூழலியல் தன்மையில் மிகவும் மிருதுவான பவளத் தீவுக்கூட்டம். இது மலபார் கடற்கரையில் இருந்து ஏறத்தாழ 130 கி.மீட்டர் தள்ளி அமைந்திருக்கின்ற 32 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் 36 தீவுகளைக் கொண்ட ஒரு நிலப்பரப்பாக உள்ளது.

இந்த 36 தீவுகளில் 10 தீவுகள் மனிதர்கள் வசிப்பதாக உள்ளது. ஒரு தீவு சுற்றுலாப் பயணிகளுக்கான தீவாகத் திகழ்கிறது. இது இந்துமகா சமுத்திரத்தில் அமைந்துள்ள ஒரு தீவுக்கூட்டம். இங்குள்ள மக்கள் தொகையில் 95 சதவிகிதத்துக்கும் மேல் இஸ்லாமியர்களாக உள்ளனர்.

தாய்வழி அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட மனிதக் கூட்டம் என்று இவர்கள் அடையாளப் படுத்தப்படுகிறார்கள். இவர்கள் இனவழியாக, கேரளத்தில் வாழ்பவர்களுக்கு நெருங்கியவர்கள். கேரளத்தில் இருந்துதான் வரலாற்றில் அறியப்பட்ட வரையில் பல காலம் லட்சத்தீவுகள் ஆளப்பட்டன.

1956 ஆம் ஆண்டு வெளியான இந்திய அரசின் (List) பட்டியல் மற்றும் பழங்குடியின மக்கள் தொகுப்பில் லட்சத்தீவில் வாழ்கிறவர்கள் அனைவரும் பழங்குடி மக்களாகக் குறிக்கப்படுகிறார்கள். அரபிக் கடலில் அமைந்துள்ள அந்தமான் நிகோபார் தீவுகளும் இந்து மகா சமுத்திரத்தில் அமைந்துள்ள லட்சத்தீவுகளும் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவை என்ற காரணத்தால் இதனை நிர்வகிப்பதற்காக ஒன்றிய அரசில் இருந்து நிர்வாகி ஒருவர் அனுப்பப்படும் நடைமுறை உள்ளது.

1988 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசின் பிரதமரை தலைவராகக் கொண்டு தீவு மேம்பாட்டு ஆணையம் இயங்கி வருகிறது. அதன் வழிகாட்டுதல் வழிநடப்பவராக ஒரு நிர்வாகியை ஒன்றிய அரசில் இருந்து அனுப்புவது என நெறிமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. `இந்த தீவுகளின் முன்னேற்றத்துக்கான நிர்வாகி எப்படிச் செயல்பட வேண்டும்?' என்பதற்கும் தெளிவான வரைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

பலமிழக்கும் பவளப் பாறைகள்

பவளப் பாறைகள்

பவளப் பாறைகள்

அது என்னவென்றால், அந்தமான் நிக்கோபார் மற்றும் லட்சத் தீவுகளின் முன்னேற்றம், வளர்ச்சி என்பது சுற்றியுள்ள கடல் வளங்களின் மூலம் தங்கள் செல்வத்தைப் பெருக்கிக் கொள்வதும் இங்கு மிக மிக அருகிய அளவில் இருக்கின்ற நில வளங்களை மிகவும் கவனமாகக் கையாள்கின்ற வகையிலும் இருக்க வேண்டும். அதுதான் சுற்றுப்புறச் சூழலுக்குத் தகுந்த திட்டமாக இருக்கும் என தீவு மேம்பாட்டு ஆணையம் வரையறுத்துள்ளது.

இந்தத் தீவுகளின் நிலம், பருவநிலை, கலாசாரம் மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வுமுறை அனைத்தையும் உள்ளடக்கியதாக இந்தத் தீவுகளின் வளர்ச்சி பற்றிய திட்டம் அமைய வேண்டும் என ஒன்றிய அரசு எண்ணியது. அதற்காக சுற்றுப்புறச் சூழலுக்குத் தகுந்த, லட்சத்தீவு மக்களை மையமாகக் கொண்ட கொள்கையோடு இந்தத் தீவுகளை நிர்வகிக்க வேண்டும் என்ற காரணத்தால் ஒன்றிய அரசால் அனுப்பப்படுகிற நிர்வாகி இந்தத் தீவை நிர்வகிப்பார் என்பது ஒன்றிய அரசால் வகுக்கப்பட்ட நடைமுறை.

`இந்தத் தீவுகளின் வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும்?' என்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்ட பிறகு அத்தகைய கொள்கை முடிவு எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என்பதை விஞ்ஞானிகளும் பருவநிலை வல்லுநர்களும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்தத் தீவுகளின் பாதுகாப்பாக அமைந்திருக்கின்ற பவள அணுக்கள் மனித நடமாட்டத்தின் காரணமாகவும் பருவநிலை மாறுதல் காரணமாகவும், உயர்ந்து வருகின்ற கடல் மட்டத்தின் காரணமாகவும் மாறிக் கொண்டிருப்பதை ஆராய்ந்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக இங்கு கவரட்டி என்ற பெரிய தீவைச் சுற்றி வளைத்து பாதுகாத்துக் கொண்டிருக்கும் பவளப் பாறைகள் பலமிழந்து கொண்டிருப்பதையும் கவனித்து வருகின்றனர். பொதுவாக, இத்தகையை கால ஓட்டத்தில் பவளப் பாறைகள் மீள் உருவாக்கம் பெறும் வல்லமை பெற்றவை. ஆனால், அத்தகையை மீள் உருவாக்கம் செய்கின்ற சக்தி குறைந்து கொண்டே போகின்றது. அந்தப் பவளப் பாறைகளின் வாழ்வு நீடித்துக் கொண்டிருக்கும் தன்மை குறைந்து போவதைப் பற்றி அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த எச்சரிக்கை மிகவும் முக்கியமானது.

பிரதமரின் வார்த்தைகள்

PRAFUL PATEL

United Nations Framework Convention on Climate Change (UNFCC) அமைப்பின் 26ஆவது கூட்டம் நடைபெற்றபோது, `இந்தியா பருவநிலை மாறுதல்களை கவனிக்கும். இதன் காரணமாக விளைகின்ற சுற்றுப்புறச் சூழல் மாறுதல்களை நன்றாகக் கவனித்து, இத்தகையை தீவுகளின் பாதுகாப்புக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்வோம்' என நமது பிரதமர் வலியுறுத்தியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்து போன பல வருடங்களில், `இந்தத் தீவின் வளர்ச்சி எத்தகையதாக இருக்க வேண்டும்?' என்று தீவு மேம்பாட்டு ஆணையம் வரையறை செய்த பின்னரும்கூட, சில சமயங்களில் வேகமாக வளர்ச்சி பெற வேண்டும் என்ற மிகு ஆர்வத்தினால். சில நிர்வாகிகள் எடுத்த சில நடவடிக்கைகள் இந்தத் தீவின் ஸ்திரத்தன்மையை பாதிப்பதாக இருந்ததாக அச்சம் எழுப்பின. ஆனால், பொதுவாக இதுவரையில் இந்தத் தீவுகளின் வளர்ச்சி முறை ஒட்டுமொத்தமாக மீறப்படவில்லை என்பது உண்மை.

தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகிய ஒன்றிய பிரதேசங்களின் நிர்வாகியாக உள்ள பிரஃபுல் படேல், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கூடுதல் பொறுப்பாக லட்சத்தீவின் நிர்வாகியாக பொறுப்பெடுத்துக் கொண்டதற்குப் பின்னால், இங்குள்ள மக்கள் ஏற்றுக் கொள்ளத்தக்க, சுற்றுப்புறத்துக்கும் சூழலியலுக்கும் தகுந்தாற்போல் கடலில் இருந்து வளங்களைப் பெறுவோம், தீவின் வளங்களைக் காப்போம் என்பதை அடிநாதமாகக் கொண்ட வளர்ச்சி முறை இன்று அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. இவர் பொறுப்பேற்றுக் கொண்டதற்குப் பிறகு 3 சட்ட ஒழுங்கு முறைகளைக் கொண்டு வர விரும்பிய பி.கே.படேல், அதற்கான வரைவை உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளார்.

3 சட்ட வரைவுகள்

சட்டம்

லட்சத்தீவு வளர்ச்சி ஆணையம்-ஒழுங்கு முறை எனப்படும் LDAR என்ற ஒன்று, இரண்டாவது, லட்சத்தீவு-சட்ட விரோதச் செயல் தடுப்பு ஒழுங்குமுறை (Lakshadweep Prevention of Anti-Social Activities Regulation), மூன்றாவதாக, லட்சத்தீவு விலங்கு பாதுகாப்பு ஒழுங்கு முறை (Lakshadweep Animal Preservation Regulation (LAPR) என்ற மூன்று ஒழுங்குமுறைகளுக்கான சட்ட வரைவை அனுப்பியுள்ளார்.

இதுதவிர, லட்சத் தீவு பஞ்சாயத்து ஒழுங்கு முறையில் (Lakshadweep Panchayat Regulation) ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்டத்தில் சில மாறுதல்களைப் புகுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். இவை லட்சத்தீவு மக்களிடம் மட்டுமல்லாமல் இது பற்றி அறிந்த சுற்றுப்புறச் சூழல் அறிந்த வல்லுநர்கள் மத்தியிலும் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வரைவுத் திட்டம் உள்ளூர் மக்களிடம் ஆலோசிக்காமல் வரையப்பட்டவை என்பது கவலைக்குரிய விஷயம். பிரஃபுல் படேல் அனுப்பியுள்ள ஒழுங்குமுறைகள் இந்தத் தீவுக்கும் இங்கு வசிக்கும் மக்களின் தேவைகளுக்கும் எதிரான திட்டமாகக் காணப்படுகிறது.

`கடந்த 70 ஆண்டுகளாக இந்தத் தீவுகளில் எந்தவிதமான முன்னேற்றமும் நடக்கவில்லை' என அறிவித்துக் கொண்டு எல்.டி.ஏ.ஆர் என்ற வரைவுத் திட்டமானது ரிசார்ட்கள் மற்றும், விடுதிகள் என மாலத்தீவுகள் எப்படி வளர்ச்சி பெறத் தொடங்கினவோ அதுபோன்ற வளர்ச்சியை இங்கும் கொண்டு வர வேண்டும் என்கின்றன. இந்த அணுகுமுறை மாலத்தீவுகளுக்கும் லட்சத் தீவுகளுக்கும் இடையே உள்ள மக்கள் தொகை உட்பட எதையுமே சரியாகக் கணிக்காமல், `மாலத்தீவுக் கூட்டத்தைப் போல் இங்கு வளர்ச்சித் திட்டம் அமைய வேண்டும்' என்ற வகையில் அமைகின்றது.

சூழல் ஆர்வலர்களின் அச்சம்

சுற்றுச்சூழல்

உதாரணமாக, இந்த வரைவுத் திட்டமானது கட்டடங்கள், பொறியியல் பணிகள், சுரங்கப் பணிகள், குவாரிகள் மற்றும் தீவுக் கூட்டத்துக்கு மேலேயோ உள்ளேயோ மாற்றங்களை மேற்கொள்வது, மலைகளைப் பிளப்பது, அதையும் தவிர இந்தத் தீவுகளில் உள்ள எந்தவொரு நிலப் பகுதியையும் ஒரு யூனிட்டாக இருந்தால் மேலும் பிரிப்பது என- நீண்ட நெடுஞ்சாலைகளை அமைப்பதற்காக இவற்றையெல்லாம் செய்யலாம் எனக் கூறுகிறது. இந்தத் தீவுகளில் எந்தத் தீவுமே 3 அல்லது 4 கிலோமீட்டருக்கு மேல் நீளம் உள்ளதாக இல்லை. அப்படிப்பட்ட தீவுக்கூட்டத்தில் இப்படிப்பட்ட மாறுதல்களைக் கொண்டு வருவது என்பது பலவீனமான சுற்றுப்புறச் சூழலினைச் சீர்குலைப்பதாக அமைகிறது என்பது வெளிப்படை.

எல்.டி.ஏ.ஆரில் உள்ள இன்னொரு கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இங்குள்ள எந்தக் கட்டடத்தையோ சொத்துகளையோ நிர்வாகியின் பெயரில் மாற்றுவதற்கு, தீவு மக்களை அவர்கள் வசிக்கும் இடங்களில் இருந்து வேறு இடத்துக்கு அமர்த்துவதற்கும் அதிகாரம் கோரப்பட்டுள்ளது.

இவையெல்லாம் நகர் மேம்பாட்டுத்திட்டம் (Town planning) எனப்படும் வளர்ச்சி நடவடிக்கைகள் என வரைவு அறிக்கை கூறுகிறது. இதனால் இந்தத் தீவில் வாழும் மக்களின் சொத்துகளை நிர்வாகி வாங்கலாம், சொத்துகளை நிர்வாகத்தின் உரிமையாக வைத்துக் கொள்ளலாம் என்பதை இந்த ஒழுங்குமுறை தெரிவிக்கிறது.

ஏற்கெனவே, கடற்கரையில் உள்ள சிறு குடிசைகள் படகு, உபகரணங்கள் போன்றவற்றை வைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த குடிசைகள், சுற்றுலா வளர்ச்சிக்கு எதிராக உள்ளதாகக் கூறி இந்த நிர்வாகி இடித்துத் தள்ளியதாகத் தெரிகிறது. `அவைகள் எல்லாம் அரசு நிலத்தை ஆக்ரமித்துக் கட்டப்பட்டுள்ளன, மேலும் கடற்கரை ஒழுங்குமுறை சட்டத்துக்கு எதிரானதாக உள்ளன' எனவும் அந்த நிர்வாகி விளக்கம் அளித்திருக்கிறார். இந்தக் கடற்கரை ஒழுங்கு முறை சட்டத்தில் மீனவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே, நிர்வாகியின் இத்தகைய செயல்பாடுகள் எதுவும் சட்டத்தின்கீழ் செய்யப்படவில்லை என்பது தெளிவு.

என்ன சொல்கிறது `பாசா?'

அடுத்து, தடுப்புக் காவல் தொடர்பான சட்ட வரையறையை அனுப்பி வைத்துள்ளார். இந்த சட்டவரைமுறை மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்டால், லட்சத்தீவில் வசிக்கும் எவரையும் ஓராண்டு காலத்துக்கு சமூக விரோதச் செயல்கள், கள்ளக்கடத்தல், சட்டவிரோத கடத்தல், சைபர் கிரைம், பாலியல் குற்றங்கள், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் செயல்கள் போன்றவற்றில் ஈடுபட்டதாகக் கூறி சிறைப்படுத்த முடியும்.

இதுதான் தீவின் நிர்வாகியாக இருப்பவரால் அனுப்பப்பட்ட வரைவு அறிக்கையான `பாசா'வின் (PASA) அம்சங்கள்.

`இதனால் மக்கள் தாங்கள் வசிக்கும் நிலங்களில் இருந்து விரட்டப்படுவதற்கும் சிலர் பெரு லாபம் காணத் துணை போகும் பெருநிறுவன வளர்ச்சிக்கும், சுற்றுச்சூழலின் அழிவுக்கும் வித்திடும்' என்று சூழல் ஆர்வலர்களால் உணரப்படுகிறது. எதற்காக இப்படிப்பட்ட கடுமையான சட்டவரைவை இவர் அனுப்பியிருக்கிறார் என்றால், `இந்தத் தீவுக் கூட்டத்தின் பாதுகாப்பு அம்சங்கள் மிகக் கவனமாகக் கையாளப்பட வேண்டும். பயங்கரவாதிகள் மற்றும் ஆயுதங்கள் ஊடுருவிடக் கூடாது' என்ற காரணம் முன்வைக்கப்படுகிறது.

ஆனால், உண்மை என்ன?

தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி (NCRB) பார்த்தால், இந்தத் தீவுகளில் குற்றம் என்பது மிக மிகக் குறைவு. உண்மை இப்படியிருக்கும்போது, `பயங்கரவாதிகள் வரக் கூடாது' என்றெல்லாம் காரணங்களைக் கூறி இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டால், ஜனநாயக ரீதியில் மக்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினால் கூட அதை அடக்க வேண்டும் என்பதற்காகவே நிர்வாகி இப்படியொரு அறிக்கையை அனுப்பியுள்ளார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

லட்சத்தீவு நிர்வாகி பரிந்துரைக்கும் மற்ற ஒழுங்கு முறைகளைக் கவனித்தால், இந்தத் தீவில் உள்ளவர்களின் உணவு மற்றும் உணவுப் பழங்கங்கள், மதநம்பிக்கைகள் ஆகியவற்றைப் பறிப்பதாக உள்ளன.

மாட்டு இறைச்சிக்கு சிக்கல்?

மாட்டு இறைச்சி

இந்தத் தீவில் வசிக்கும் 95.6 சதவிகித மக்கள் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள். மாடுகளை வதை செய்வதைத் தடுக்கவும் மாட்டு இறைச்சி உண்பதையும் அதை சேமித்து வைப்பது அல்லது விற்பனைக்காக கொண்டு செல்வது இந்த வரைவின்படி தடை செய்யப்படும்.

இந்தத் தீவுகளில் உள்ள மக்கள் விலங்குகளை வளர்ப்பது, அதன்மூலம் வருவாய் ஈட்டுவது என வாழ்ந்து வருகின்றனர். அந்த வாழ்க்கை முறைக்கு வேட்டு வைப்பதாக இவருடைய அறிக்கை அமைந்துள்ளது. இப்படிப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் வடகிழக்கு மாகாணங்களில் இருப்பதில்லை. இந்தத் தீவுக் கூட்டத்துக்கு அருகில் உள்ள கேரளாவில் கூட இருப்பதில்லை.

இந்த நிர்வாகி வந்த பின்னர் அரசினால் நடத்தப்படும் மாடுகளைப் பராமரித்து, அவற்றின் பாலை தீவு மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்ததுவும் நிறுத்தப்பட்டுவிட்டது.

விலங்குகளின். இறைச்சிக்கென அமைக்கப்பட்டுள்ள இறைச்சிக் கூடங்களின் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இங்குள்ள எந்தவொரு தீவுக் கூட்டத்திலும் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் கேரளா மூலம் வருகின்ற காரணத்தால், பெரும்பாலும் புத்தம் புதிதாக இருப்பதில்லை. எனவே இந்த மக்களின் அன்றாட உணவுப் பழக்கத்தில் இறைச்சி ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் இப்போது குழந்தைகளுக்கான மதிய உணவில் அசைவம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

தேவையற்ற பதற்றத்துக்கு வாய்ப்பு

இந்த மக்களின் மத நம்பிக்கைக்கு எதிரானதாக இருந்ததால் மது வகைகள் இங்கு தடை செய்யப்பட்டிருந்தன. தற்போது அந்தத் தடையும் நீக்கப்பட்டுவிட்டது. சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பதற்காக மது அனுமதிக்கப்பட்டதாக விளக்கம் கூறுகிறார்கள். மது விற்பனையைத் திறந்துவிடுவதும் மாட்டு இறைச்சியைத் தடை செய்வதும் இஸ்லாமிய மக்கள் வசிக்கும் தீவில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும். எந்தவித பிரச்னைகளும் இல்லாத இடத்தில் மத ரீதியான பிளவு ஏற்படுவது தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சமூட்டுவதாகத்தான் இருக்கும்.

லட்சத்தீவில் பஞ்சாயத்து ஒழுங்கு முறை 2021 என்ற சட்ட வரைவினை நிர்வாகி அனுப்பியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளோம்.

அதில் கிராம ஊராட்சிகளில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் போட்டியிட முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரைவுத் திட்டத்தை ஒன்றிய அரசுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னால் இது தொடர்பாக உள்ளூர் மக்களிடம் ஆலோசிக்கவும் இல்லை, இதைப் பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள் என எண்ணவும் இல்லை. இதைத் தவிர லட்சத்தீவில் நடந்து கொண்டிருந்த சில பள்ளிகள் பொது செலவினத்தைக் குறைக்க வேண்டும் என்ற காரணத்தைக் காட்டி மூடப்பட்டுள்ளன.

லட்சத்தீவின் அரசு நிர்வாகத்தில் தற்காலிகமாக வேலை பார்த்துக் கொண்டிருந்த பல இளைஞர்கள் பணிக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவே நீக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் உட்பகுதியில் உள்ள கோழிக்கோடு, மங்களூர், கொச்சின் ஆகிய துறைமுகங்களில் இருந்து மக்களுக்குத் தேவையானவற்றைக் கொண்டு வருவதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இப்போது கோழிக்கோடு தடை செய்யப்பட வேண்டும் என வரைவுத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக வடக்கு, தெற்கு ஆகியவற்றில் உள்ள தீவுகள் போக்குவரத்திலிருந்து துண்டிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

யாருக்காக சட்ட வரைவுகள்?

சட்டம்

மத்திய அரசில் இருந்து அனுப்பப்படும் பல நிர்வாகிகள் பல சமயங்களில் லட்சத்தீவு மக்கள் பேசுகின்ற மலையாளத்தை அறியாதவர்களாக இருந்தனர். இதன் காரணமாக இந்த மக்களுக்கும் நிர்வாகிக்கும் மொழித்தடை இருந்தது. மாவட்ட தீவுப் பஞ்சாயத்து (District deep panchayat) என்ற அமைப்பு இங்குள்ளது. இதில் தலைவர் மற்றும் முக்கிய ஆலோசகர்கள் உள்ளனர். இந்தத் தீவுக் கூட்டத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரே அமைப்பு இதுதான். இந்த அமைப்பு இந்த மக்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. ஒன்றிய அரசின் நிர்வாகி, இந்த ஊராட்சியின் தலைவருடன் பேசுவதால் மக்களின் எண்ணங்கள், ஆசைகள், தேவைகளை உணர முடிந்தது.

இந்த ஊராட்சியின் தலைவருடன் மேற்கண்ட 3 சட்ட வரைவுகள் குறித்தும் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். அப்படி நடத்தியிருந்தால் தங்களை மீறிய செயல்கள் நடைபெறுவதாக எண்ணும் நிலைக்கு அந்த மக்கள் தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள். மக்களால் தேர்வு செய்யப்பட்ட உள் அமைப்புகளுடன் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல் புதிய வரையறையைக் கொண்டு வந்தால் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்?

8,479 பேருக்கு கொரோனா!

கொரோனா

மக்களுக்குச் சொந்தமான நிலத்தைப் பறிப்பதற்கும் புதிதாகக் கட்டங்களும் மக்களுக்குத் தொடர்பில்லாத சுற்றுலா சம்பந்தப்பட்ட சிலருக்காகாகவுமே இவை ஏற்படுத்தப்படுகின்றன என்ற எண்ணம் மக்கள் மத்தியில் தோன்றும். இன்னொரு கவலைக்குரிய விஷயம் என்றால், இந்த நிர்வாகி வருவதற்கு முன் டிசம்பர் 2020 வரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர்கூட கிடையாது என்ற நிலைமை இருந்தது. இவர் வந்த பின்னர் மாறிவிட்டது. இங்கு புதிதாக வருகின்ற சுற்றுலாப் பயணிகள், `கொரோனா இல்லை' என்ற சான்றுடன் வந்தாலும் 7 நாள்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது கட்டாயமாகப் பின்பற்றப்பட்டு வந்தது. இவர் வந்தவுடன் இந்த விதிமுறை நீக்கப்பட்டுவிட்டது.

இதன் காரணமாக 2021 ஜனவரி மாதம் ஒரு கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார். பிப்ரவரி மாதம் முதல் கொரோனா மரணம் நிகழ்ந்தது. இன்று வரையில் 8,479 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அமைதியாக இருந்த இந்தத் தீவில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிர்வாகி அனுப்பியுள்ள ஒவ்வொரு சட்ட வரைவும் லட்சத்தீவின் சுற்றுச்சூழல் மற்றும் தீவின் அமைப்பு ஆகியவை குறித்துக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் வளர்ச்சி என்ற பெயரில் லட்சத்தீவுக்கு சம்பந்தம் இல்லாத எந்த வகையிலும் நன்மை பயக்காத தன் இஷ்டம்போல எழுதப்பட்ட வரைவாகத்தான் பார்க்கப்படுகிறது.

இவரது செயல்கள், `இந்தத் தீவுகளும் இந்த மக்களும், கவர்ந்து கொள்ளக் கூடிய மக்கள் மற்றும் நிலப்பரப்பு எனவும், சுற்றுலாவுக்காகப் பணம் முதலீடு செய்பவர்களின் லாபத்துக்காகவே லட்சத்தீவுகள் உள்ளன' என்ற தோற்றத்தை அளிக்கின்றன என்பது மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த சட்ட வரைவுகளைக் கொண்டு வருவதற்கு முன்னால் உள்ளூர் மக்களுடன் பேசவும் இல்லை. இவைகள் எப்படி ஒரு தாக்கத்தை லட்சத்தீவு மக்களின் மேல், அதன் பரப்பின் மேல், பொருளாதாரத்தின் மேல் உருவாக்கும் என்பதைப் பற்றி சற்றும் கவலைப்படவில்லை என்பது தெளிவாகிறது.

வெளியில் இருந்து வருவோருக்கும் பெரு லாபம் காணத்துடிக்கும் பெருநிறுவன வளர்ச்சிக்கும் உள்ளூர் மக்களை அவர்களுடைய நிலத்தில் இருந்தும் வாழ்வாதாரத்தில் இருந்து விரட்டக் கூடிய வகையில் இவரின் வரைமுறைகள் காணப்படுகின்றன. இவை வெளியில் இருந்து வருகிறவர்களுக்கு நிச்சயம் பலன் அளிக்கும். இதன் காரணமாக, இந்த வரைமுறை நடைமுறைப்படுத்தப்பட்டால், உள்ளூர் மக்கள் இனிமேல் வரப் போகின்ற பொருளாதாரத்தில் ஏணியின் கீழே நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

அவர்களின் வாழ்வுமுறை, பாரம்பரிய உணவுப் பழக்கங்கள், இங்கு காணப்படுகின்ற சமுதாயம், சமுதாய ஒருங்கிணைப்பு ஆகியவற்றை சீர்குலைத்துவிடும். வெளியில் இருந்து வந்தவர்களின் வாழ்வு முறைகள், பலவீனமான இந்த தீவுகளின் சுற்றுப்புறச் சூழலை நேர் செய்ய முடியாத அளவுக்குப் பாழாக்கிவிடும். இந்தத் தீவுகளில் காணப்படுகின்ற அமைதி மற்றும் அழகு ஆகியவை இல்லாமல் போய்விடும். ஏற்கெனவே இந்த வரைமுறைகளுக்கு மாறாக இந்தத் தீவு மக்களும் அரசியல் அமைப்பும் அண்மையில் இருக்கின்ற கேரள மக்களும் கேரள அரசியல் கட்சிகளும் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நிர்வாகி இதுவரையில் காட்டிய அணுகுமுறைகள், அவர் அனுப்பியுள்ள 3 வரைவுச் சட்டங்கள் மற்றும் இருக்கின்ற பஞ்சாயத்து சட்டத்தில் கொண்டு வரும் திருத்தங்கள் எதுவுமே சரியானவை அல்ல.

அமைதியாக வாழும் இந்தத் தீவு மக்களை, சுய லாபம் மட்டுமே கருதும் பெருநிறுவன வளர்ச்சி என்ற போக்குக்கு அழைத்துச் செல்வதாக உள்ளது. அதன் காரணமாக, அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள், தங்கள் வாழ்வு முறையில் இருந்து மாற்றப்பட்டு விடுவார்கள் என்ற அச்சம் இங்கு உள்ளது.

பிரதமருக்கு வேண்டுகோள்

மோதி

எனவே, பிரதமர் அவர்களே, எங்களின் ஒரே வேண்டுகோள். லட்சத்தீவு நிர்வாகி அனுப்பியுள்ள வரைவுச் சட்டங்கள், பஞ்சாயத்து சட்டத்தில் இவர் கொண்டு வர நினைக்கும் திட்டங்களை உடனடியாகக் கைவிட வேண்டும். அதைத்தவிர இந்த ஒன்றிய பிரதேசத்துக்கு கூடுதல் பொறுப்பில் இல்லாத, முழுப் பொறுப்பில் உள்ள, மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளக் கூடிய ஒருவரைத் தேர்ந்தெடுத்து, ஏற்கெனவே இங்கு எப்படிப்பட்ட வளர்ச்சித் திட்டம் உள்ளதோ அதற்கு ஏற்ப மக்களுக்குத் தகுந்த சுகாதார வசதிகளை வழங்குதல், கல்வியை ஊக்குவித்தல், நேர்மையான நிர்வாகம், உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் அமைப்புடன் ஒத்ததாக உள்ள அவர்களின் வாழ்வியல் முறை ஆகியவை குறித்து மக்களுடன் கலந்து ஆலோசித்து மேலும் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

இதன்மூலம், பவள அணுக்களால் பாதுகாக்கப்பட்ட இந்தத் தீவுகளைப் பாதுகாக்க நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும். மனித வாழ்வு மண்ணுடன் இறுகப் பிணைக்கப்பட்டுள்ளது என்ற எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடாகத்தான் இந்தக் கடிதத்தை சுற்றுச்சூழல் தினத்தன்று அனுப்புகின்றோம் என்று அமைப்பினர் கூறியுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி