பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது என்பது, மனிதகுலம் இதுவரை சந்தித்த சவால்களில் மிகப்பெரியதாக இருக்கலாம். அதிர்ஷ்டவசமாக, உலகம் எங்கிலும் இந்தப் பிரச்சனை குறித்து எல்லாக் கோணங்களிலும் தொடர்ந்து சிந்திக்கும் அதிசய மனங்கள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. பிபிசி-யின் புவியைக் காக்க 39 வழிகள் என்ற தொடரிலிருந்து சிறந்த, மாறுபட்ட ஆறு தீர்வுகள் இதோ.

1.பெண் கல்வி

பெண்கள்

உலகெங்கிலும் கல்வியை மேம்படுத்துவது என்பது எங்கும் பேசுபொருளாக உள்ளது. ஆனால் குறிப்பாகச் சிறுமிகளுக்கான கல்வியை மேம்படுத்துவது வெறும் சமூக, பொருளாதார நன்மைகளை மட்டும் செய்வதில்லை. அது பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

சிறுமிகள் அதிக காலம் பள்ளிக்கல்வியில் ஈடுபடுவதால், குழந்தைப் பேறு இளம் வயதில் நடப்பதைத் தவிர்க்கலாம். அனைத்துச் சிறுமிகளும் மேல்நிலைப் பள்ளியை நிறைவு செய்திருந்தால், 2050 வாக்கில் தற்போது கணிக்கப்பட்டதை விட உலக மக்கள் தொகை சுமார் 84 கோடி குறைவாக இருக்க வாய்ப்புண்டு.

பருவநிலை மாற்றத்துக்கும் மக்கள் தொகைக்கும் என்ன சம்பந்தம் என்ற சர்ச்சை எழலாம். ஏழை நாடுகளில் உள்ள மக்கள் பணக்கார நாடுகளின் மக்களுடன் ஒப்பிடும்போது குறைந்த அளவு கார்பனையே வெளியிடுகிறார்கள். ஆனால் புவியின் வளங்கள் அருகி வருவதால், பெருகி வரும் மக்கள் தொகை முக்கிய சிக்கலாகிறது.

பெண் கல்வி என்பது மக்கள்தொகை புள்ளிவிவரங்களை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயம். வேலை, வணிகம் மற்றும் அரசியலில் பங்கேற்கக்கூடிய பெண்கள் பருவநிலைப் பாதுகாப்பை அதிகரிக்கக் கூடிய ரகசிய காரணிகளாக இருக்கலாம்.

அதிக அளவில் பெண்கள் பொறுப்பேற்பது, சிறந்த பருவநிலைக் கொள்கைகளுக்கு வழிவகுக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எப்படி? பெண் தலைவர்கள் விஞ்ஞான ஆலோசனையைக் கேட்க அதிக விருப்பம் கொண்டுள்ளனர் - கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் சர்வதேச அளவில், எழுந்த எதிர்வினைகளே இதற்குச் சான்று.

இன்று, பல தொண்டு நிறுவனங்கள் கல்விக்குக் குறிப்பிடத்தக்க நிதியை வழங்குகின்றன - அது வெற்றிகரமாகவும் செயல்படுகிறது. உலகெங்கிலும், கல்வியில் சிறுமிகளின் விகிதம் அதிகரித்து வருகிறது, வங்கதேசம் போன்ற நாடுகளில் 1980களில் 39 சதவீதமாக இருந்த மேல் நிலைப்பள்ளிச் சேர்க்கை இன்று 70% ஆக அதிகரித்துள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது.

2. மூங்கில்: இது பாண்டாக்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும்

மூங்கில்

மூங்கில்

உலகிலேயே வேகமாக வளரக்கூடிய தாவரம் மூங்கில்தான். நாள் ஒன்றுக்கு ஒரு மீட்டர் உயரம் வரை இது வளரும். மரங்களை விட அதிவேகமாக கார்பனை உறிஞ்சிக் கொள்ளும் திறன் கொண்டது மூங்கில். திறன் வடிவமைப்பு செய்யப்பட்ட மூங்கில் இரும்பைக் காட்டிலும் வலுவானது. கட்டடங்களையும் தளவாடங்களையும் உருவாக்க, இது ஒரு மிக வலுவான நிலையான பொருளாகச் செயல்படுகிறது.

சீனாவில், மூங்கில் ஏழைகளின் மரம் என்று கொண்டாடப்பட்ட காலம் ஒன்று இருந்தது. இப்போது அதற்கு மவுசு கூடியிருக்கிறது. மூங்கில் பொருட்கள் நிலையான இரும்பு, பிவிசி, அலுமினியம், கான்க்ரீட் ஆகியவற்றை விடக் குறைந்த கார்பன் தடம் பதிக்கக்கூடியவையாக உள்ளன.

மூங்கில் வளர்ப்பதால் சுற்றுச்சூழலுக்கு வேறு சில நன்மைகளும் உள்ளன: இது பூச்சி அரிப்புக்கு உள்ளாகாது, மண் வளத்தை மேம்படுத்தும், மண் சரிவைத் தடுக்கும், வெள்ள அபாயத்தைக் குறைக்கும்.

ஆரிஃப் ரபிக் என்பவர் இந்தோனீசியாவில், என்விரோன்மென்டல் பாம்பூ ஃபௌண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். ஆயிரம் மூங்கில் கிராமங்களை உருவாக்கி, நில மீட்பு மற்றும் கார்பனைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

ஒவ்வொரு குடியிருப்புப் பகுதியைச் சுற்றியும் 20 சதுர கிலோமீட்டர்களுக்கு மூங்கில் காடுகள், ஊடுபயிர்கள் மற்றும் கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தை இன்னும் ஒன்பது நாடுகளுக்கு விரிவாக்க அவர் விரும்புகிறார்.

ஒவ்வோர் ஆண்டும் ஒரு பில்லியன் டன் கரியமில வாயுவை இவை உள்வாங்கி, சுற்றுச்சூழலைத் தூய்மைப்படுத்தும் என்று இவர் கூறுகிறார்.

3. பெருமளவு மாசுபடுத்துவோரைச் சட்ட ரீதியாக எதிர்த்தல்

சட்ட திட்டங்கள்

சட்ட திட்டங்கள்

சட்டம் என்னும் இரும்புக்கரம் கொண்டு பருவநிலை மாற்றத்துக்கு எதிரான அம்சங்களை எதிர்க்க கால நிலை வழக்கறிஞர்கள் முனைந்துள்ளனர். சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்களையும் அரசாங்கங்களையும் கட்டுக்குள் வைத்திருக்க மிக சக்திவாய்ந்த ஆயுதங்களில் ஒன்று சட்ட அமைப்பு.

சமீபத்தில், நெதர்லாந்தில் உள்ள ஒரு நீதிமன்றம், ஷெல் எனும் எண்ணெய் நிறுவனம், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் நோக்கங்களுக்கு ஏற்ப, அதன் கொள்கைகளை சீரமைத்து, அதன் கார்பன் உமிழ்வைக் குறைக்க வேண்டும் என தீர்ப்பளித்தது - இது ஒரு முக்கியமான முன்னுதரணமான வழக்கு.

சூழலைக் காக்க, இந்தச் சட்டங்கள் மட்டும் போதுமா? அதனை புத்தாக்கத்துடன் பயன்படுத்தும் வழக்கறிஞர்களையும் பாராட்டித்தான் ஆகவேண்டும். பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் மனித உரிமைச் சட்டங்கள், வேலைவாய்ப்புச் சட்டங்கள் மற்றும் நிறுவனச் சட்டங்களைப் பயன்படுத்தி வெற்றிக்கு வழிவகுப்பவர்கள் இவர்கள்.

2020 ஆம் ஆண்டில், வெறும் 35 டாலர் பங்குகளை வைத்திருக்கும் ஒரு முதலீட்டாளர் குழு போலந்தில் ஒரு நிலக்கரி ஆலையை நிறுத்த முடிந்தது. எப்படி? சுற்றுச்சூழல் ஆர்வலர் குழு கிளையண்ட் எர்த், போலந்து எரிசக்தி நிறுவனமான எனியாவில் தனக்கிருந்த பங்குகளையும், பெருநிறுவன சட்டத்தின் சக்தியையும் பயன்படுத்தி, ஆஸ்ட்ரோலேகா சி நிலக்கரி மின் நிலையத்தை கட்டும் அந்த நிறுவனத்தின் முடிவை எதிர்த்து வழக்கு தொடுத்தது.

புதிய நிலக்கரி மின் நிலையம் கட்டுவது சட்டவிரோதமான மோசமான வணிகம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

4. வளியை வெளியிடும் சாதனங்களைக் கண்டறிதல்

குளிர்சாதனப் பெட்டி

குளிர்சாதனப் பெட்டி

ஒவ்வொரு குளிர்சாதன பெட்டியிலும், உறைவிப்பான் மற்றும் குளிர்ப்பதன அலகிலும் ஹைட்ரோ ஃப்ளூரோ கார்பன்கள் ( HFC) போன்ற ரசாயன குளிர்பதனப் பொருட்கள் உள்ளன.

ஆனால் குளிர்சாதன பெட்டிகளில் எச்.எஃப்.சி-களை உருவாக்கும் இன்சுலேடிங் சக்தி அவற்றை உலகிற்கு ஆபத்தான போர்வையையும் உருவாக்கும் ஒன்றாகவும் ஆக்கியுள்ளது.

உண்மையில், எச்.எஃப்.சி கள் மிகவும் வலுவான பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுகின்றன. அவை கரியமில வாயுவை விட ஆபத்தானவை. 2017 ஆம் ஆண்டில் உலகத் தலைவர்கள் அவற்றை மெல்ல தடை செய்ய ஒப்புக்கொண்டனர்.

இந்த நடவடிக்கை மட்டுமே புவி வெப்பமடைதலை 0.5 டிகிரி குறைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஏற்கனவே இருக்கும் குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகளின் எண்ணிக்கை மிக அதிகம். தம் வாழ்நாளின் முடிவில், பெரும்பாலான சாதனங்கள் இந்த கேடான வாயுக்களை அதிகம் வெளியிடுகின்றன. எனவே, இவற்றை மறுசுழற்சி செய்வதும் பாதுகாப்பாக அகற்றுவதும் மிகவும் முக்கியமாகிறது.

அதிர்ஷ்டவசமாக, உலகம் முழுவதும், நிபுணர் குழுக்கள் ஆபத்தான குளிர்பதன வாயுக்களைக் கண்டுபிடித்து அழிக்கின்றன.

இப்படிப்பட்ட வாயுக்களைக் கண்டறிந்து, அவற்றைப் பாதுகாப்பாகக் கையாள முயற்சிக்கும் ஒரு நிறுவனம் ட்ரேட் வாட்டர். அதன் சர்வதேசத் திட்டங்களின் இயக்குநராக இருக்கிறார் மரியா குட்டரெஸ். இந்நிறுவனம், பெரும்பாலும் பழைய கிடங்குகள் மற்றும் கழிவுகளை அகற்றும் இடங்களைத் தேடி அங்கு உள்ள பாழடைந்த குளிர்சாதனங்களைக் கைப்பற்றுகிறது.

5. கப்பல்களை வழுவழுப்பாக்குதல்

சரக்கு கப்பல்கள்

சரக்கு கப்பல்கள்

உலக வர்த்தகத்தைப் பொருத்தவரை, சிறிய விஷயங்கள் கூட பெரும் தீங்கை ஏற்படுத்தக்கூடும்.

கப்பல் போக்குவரத்து நமது உலகளாவிய பொருளாதாரத்திற்கு இன்றியமையாதது - உலகின் அனைத்து வர்த்தகப் போக்குவரத்துகளிளும் 90% கடல் வழியாகவே செய்யப்படுகின்றன. மேலும் இந்தப் போக்குவரத்து, மனிதர்களால் உருவாக்கப்படும் உமிழ்வுகளில் கிட்டத்தட்ட 2 சதவீத்துக்கு காரணமாகிறது. மேலும் இது வரும் தசாப்தங்களில் உயரவே செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போக்குவரத்தை நாம் அதிகம் சார்ந்திருக்கும் சூழலில், ஒரு சிறிய கடல்வாழ் உயிரினம் - பார்னகிள் - ஒரு பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது.

பர்னக்கிள்ஸ், லிம்பெட்ஸ் மற்றும் மஸ்ஸல்ஸ் போன்ற கடல் வாழ் உயிரினங்களால் சூழப்படும் போது இந்தக் கலங்கள் அதிக எரிபொருளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.

படகுகளின் வெளிப்புறப்பரப்பு வழுவழுப்பாக இருந்தால் 25% டீசல் பயன்பாடு குறைகிறது. இது ஓராண்டுக்கு 31 பில்லியன் டாலர் எரிபொருள் செலவைக் குறைக்கிறது.

இந்த உயிரினங்களால் ஏற்படும் கார்பன் உமிழ்வைக் குறைக்க, வல்லுநர்கள், கப்பல்களை அதிக வழுவழுப்புத் தன்மை கொண்டவையாக மாற்றும் தனித்துவமான வழிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

அவை, புற ஊதா வண்ணப்பூச்சு, சிறிய அளவிலான மின்சார குளோரினேஷன், கப்பல்களின் அடிப்பகுதிகளைச் சீர்ப்படுத்தும் ரோபோக்கள் ஆகியவையாகும்.

இவை அனைத்திற்கும் பின்னால் உள்ள முக்கிய கருத்து: வரும்முன் காப்பதே நல்லது என்பதுதான். கப்பல்களின் பக்கங்களில் இந்த உயிரினங்கள் ஒட்டிக்கொண்டு எரிபொருளை அதிகம் பயன்படுத்தும் சூழல் ஏற்படவிடாமல், கப்பல்களை எளிமையாக வழுக்கிக் கொண்டு செல்ல வைப்பது முக்கிய வழி.

பிளேக் உருவாவதைத் தடுக்க நாம் தொடர்ந்து பல் துலக்குவது போலத்தான் இதுவும்.

6. சூப்பர் அரிசி வகையை உருவாக்குதல்

நெல் வயல்கள்

நெல் வயல்கள்

அரிசி பயிரிடுவது அதிக கார்பன் உமிழ்வுக்குக் காரணமாகிறது என்பது வியப்பான விஷயம்.

உண்மையில், அரிசி பயிரிடுவது விமானப் போக்குவரத்து ஏற்படுத்தும் அளவுக்கு கார்பன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஏனென்றால், நம்முடைய நெல் வயல்களில் தேவையற்ற களைகளை மூழ்கடிக்கும் வண்ணம் நீர் வெள்ளமாகப் பாய்ச்சப்படுகிறது. இந்த நீர் ஆக்சிஜன் மண்ணை அடைவதைத் தடுக்கிறது, மீத்தேன் உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்களுக்கு ஏற்ற நிலையை உருவாக்குகிறது.

மீத்தேன், கார்பன் டை ஆக்சைடை விட 25 மடங்கு அதிக வெப்பமயமாதலை ஏற்படுத்தும் ஒரு வாயு.

இந்த பருவநிலை மாற்றம் என்ற அச்சுறுத்தலை எதிர்த்து, விஞ்ஞானிகள் ஒரு அரிசிப் புரட்சியை முன்னெடுத்துள்ளனர். அவர்கள் உலர்ந்த வயல்களில் செழித்து வளரக்கூடிய புதிய வகை நெல் பயிர்களை பெருக்குகிறார்கள். இதன் மூலம் தண்ணீரை சேமித்து, விவசாயிகளுக்கு உதவி, மீத்தேன் வெளியேற்றத்தையும் கட்டுப்படுத்த முடிகிறது.

சுற்றுச்சூழல் தினம்: நோக்கம் என்ன? 2021ஆம் ஆண்டின் கருப்பொருள் என்ன?

தமிழகத்தில் காற்றலையில் நடக்கும் ஒரு சமூக வானொலிப் புரட்சி

அவர்கள் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து 650 புதிய அரிசி வகைகளை ஆய்வு செய்து, சிறந்த திரிபுகளை, இனப்பெருக்கம் செய்யும் திட்டத்தில் இருக்கிறார்கள்.

ஒரு தசாப்தத்திற்குள், நமது பெரும்பாலான அரிசி இந்த முறையில் பயிரிடப்பட்டு, உமிழ்வைத் தடுக்கும் என்று நம்பப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி