லண்டன் உயர்நிலை தீர்ப்பாயம் ஒன்று வழங்கியுள்ள மிக முக்கியமான தீர்ப்பொன்றை அடுத்து ஆஸ்திரேலியா தனது அகதிகள் தஞ்சக் கோரிக்கை தொடர்பான கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

இரண்டு இலங்கை தமிழர்கள் தொடர்பாக வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பில் `` அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால், அங்கு பரந்துபட்ட அளவில் வியாபித்திருக்கும் சித்திரவதைகளுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது`` என்று கூறப்பட்டுள்ளது.

அந்தத் தீர்ப்பாயமே பிரிட்டனில் குடியுரிமை மற்றும் அகதித் தஞ்சம் குறித்த வழக்குகளை  விசாரிக்கும் உயர்மட்ட அமைப்பாகும்.

இலங்கைத் தமிழ் அகதிகளின் புகலிட கோரிக்கையை முடிவு செய்ய ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டிஷ் அரசுகள் கையாண்ட விதம் குறித்து நீதிபதிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

அந்த இரு அரசுகளும் இலங்கையிலுள்ள சூழல்கள் பற்றி மதிப்பீடு செய்த ஒரு அறிக்கையை  அளவுகோலாகக் கொண்டு அகதித் தஞ்சக் கோரிக்கைகளைக் கையாண்டு அதன் மீதான முடிவுகளை எடுத்தன என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

அந்த அறிக்கை நம்பகத்தன்மை கொண்டது அல்ல அன்று அந்தத் தீர்ப்பாயத்தின் மூன்று நீதிபதிகளும் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். நம்பகத்தன்மை இல்லாத அந்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கையிலிருந்து தப்பி ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களுக்கு குறிப்பாகத் தமிழர்களுக்கு பாதுகாப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இரு நாட்டு அரசுகளும் அமைத்த `உண்மையைக் கண்டறியும் குழுக்கள்` இலங்கை சென்று ஆய்வுகளைச் செய்து அளித்த அறிக்கையை நம்பி அதன் அடிப்படையில் தஞ்சக் கோரிக்கைகளை நிராகரிப்பது பிழையானது என்பதே அந்தத் தீர்ப்பின் மையக் கருத்துமாகவுள்ளது.

இதன் மூலம் இலங்கையிலிருந்து உயிராபத்திலிருந்து தப்பித்து அகதித் தஞ்சம் கோரி விண்ணப்பித்து அது பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு ஒரு புதுவாழ்வு கிடைக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

இது தொடர்பில் ஆஸ்திரேலிய வெளி விவகாரம் மற்றும் வர்த்தக (DFAT), அமைச்சுக்கு எழுதியுள்ள கடிதத்தில், உண்மை மற்றும் சமாதானத்திற்கான செயல் திட்ட அமைப்பும் (ITJP) சர்வதேச நீதிக்கான ஆஸ்திரேலிய மையம் (ACIJ) ஆகியவை இலங்கையில் நிலவும் சூழல் தொடர்பாக ஆஸி அமைச்சு வெளியிட்ட `நாட்டறிக்கையின்`[ Country Information Report Sri Lanka 4 November 2019.] துல்லியத்தன்மை, கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறைகள்,நம்பகத்தன்மை மற்றும் முடிவுகள் ஆகியவை குறித்து கவலைகளையும் கேள்விகளையும் எழுப்பியிருந்தன.

தாங்கள் தெரிவித்திருந்த கருத்துக்கள் மற்றும் கவலைகள் இப்போது உண்மையாகியுள்ளன என்று அந்த இரு அமைப்புகளும் இப்போது சுட்டிக்காட்டியுள்ளன.

ஆஸ்திரேலியாவை போலவே பிரிட்டிஷ் அரசின் உள்துறை அமைச்சு தயாரித்து வெளியிட்ட இலங்கை குறித்த` நாட்டறிக்கையும்` கடுமையாக விமர்சிக்கப்பட்டு தீர்ப்பாயத்தால் நிராகரிக்கப்பட்டது. உயர்நிலை தீர்ப்பாயத்தின் தீர்ப்பையடுத்து சர்ச்சைக்குரிய குறிப்பிட்ட பகுதிகளை நீக்கும் நிலைக்கு பிரிட்டிஷ் உள்துறை அமைச்சு தள்ளப்பட்டது.

பிரித்தானிய தீர்ப்பாயத்தின் இந்தத் தீர்ப்பை அடுத்து ஆஸ்திரேலிய அரசு அகதித் தஞ்சம் அளிப்பது தொடர்பான தமது கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் கோரியுள்ளன. அப்படிச் செய்யும் போது, அகதித் தஞ்சம் கோருபவர்கள் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால், அவர்கள் உயிருக்கு ஆபத்துள்ளது என்று பிரித்தானிய தீர்ப்பாயம் கூறியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அந்த அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

இலங்கை அகதிகள் வலிந்து மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர்கள் சித்திரவதை செய்யப்படும் அபாயம் உண்மையில் யதார்த்தமாக உள்ளது. நம்பகத்தன்மை இல்லாத அறிக்கைகளின் அடிப்படையில் ஏராளமான இலங்கை அகதிகளின் நிலையை தீர்மானிக்க முடியாது; அப்படிச் செய்தால் சர்வதேச கடப்பாடுகளை மீறியதான குற்றச்சாட்டுக்கு ஆளாகும். இவை உயிராபத்துடன் விளையாடும் பாரதூரமான விஷயங்களாகும் என்று தேசிய நீதி செயல்திட்டத்தின் தலைமை சட்டத்தரணியும் பணிபாளருமான ஜார்ஜ் நியூஹவுஸ் கூறியுள்ளார்.

குடியுரிமை மற்றும் அகதித் தஞ்சம் குறித்த கோரிக்கையைப் பரிசீலிக்கும் உள்துறை அமைச்சு,குடியுரிமை மதிப்பீட்டு அதிகார சபை மற்றும் மேல் நிர்வாக மேல்முறையீட்டு ஆணையம் ஆகியவை ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சின் `நாட்டறிக்கை` மற்றும் அதிலுள்ள அம்சங்களை பரிசீலித்து கவனத்தில் எடுக்கும்.

ஏசிஐஜே மற்றும் ஐடிஜேபி ஆகியவை ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சின் 2019ஆம் ஆண்டுக்கான இலங்கை குறித்த அறிக்கை மிகவும் பிழையானது மற்றும் அடிப்படை ஆதாரங்களற்றது என்று கூறியுள்ளன.

நம்பகத்தன்மையற்ற அந்த அறிக்கை புறந்தள்ளப்பட வேண்டுமென்று இந்த இரு

அமைப்புகளுடன் இணைந்து பல அமைப்புகள் குரல் கொடுத்துள்ளன. அந்த அறிக்கை மற்றும் பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை ஆகிய இரண்டின் அடிப்படையில் குடிவரவு முடிவுகள் எடுக்கப்படுவது இடைநிறுத்தப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் கோருகின்றன. ஆவணங்களிலுள்ள தவறுகள் திருத்தப்படும் வரை அந்த அறிக்கையைச் சார்ந்து முடிவுகள் எடுக்கப்படக் கூடாது என்று அந்த அமைப்புகள் கேட்டுள்ளன.

அதுமட்டுமின்றி அகதித் தஞ்சம் கோரியுள்ள தமிழர்களின் வழக்குகள் அனைத்தும் மீண்டும் பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் தஞ்சக் கோரிக்கைகள் தொடர்பில் இனியும் ஆஸ்திரேலிய அமைச்சகத்தின் அந்த அறிக்கையை அதிகாரிகள் சார்ந்திருக்கக் கூடாது என்பதற்கு பிரிட்டனின் உயர்நிலை

தீர்ப்பாயத்தின் தீர்ப்பு ஒரு எடுத்துக்காட்டு என்கிறார் சர்வதேச நீதிக்கான ஆஸ்திரேலிய மையத்தின் செயல் இயக்குநர் ரவான் ஆராஃப்.

இலங்கையில் அரச ஆதரவில் சித்திரவதைகள் நடைபெறுவதில்லை என்று உள்துறை அமைச்சகம் கூறுவது அதிர்ச்சியளிக்கிறது. சுயாதீனமாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து கிடைக்கும் ஆதாரங்கள் அவை தொடருவதாகக் கூறும் போது அரசு அதை அடக்கி வாசிப்பது மிகவும் கவலையாக உள்ளது. இலங்கையில் பாதுகாப்பு படையினரால் மக்கள் கைது செய்யப்பட்டு சட்ட விரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவது பரந்துபட்ட அளவில் நடைபெறுவதற்கான ஆதாரங்கள் பெருமளவில் உள்ளன``.

இதனிடையே ஜெர்மனியிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான பத்து பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மார்ச் மாதம் சுமார் 30 பேர் வலிந்து ஜெர்மனியிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி