கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவைக் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், முன்னாள் அமைச்சரைக் கைது செய்ய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அவர் இருக்குமிடம் இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, அவரைக் கைது செய்வதற்காக 5 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மேலதிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் ஜொஹான் பெர்னாண்டோ, பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) இன்று கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தற்போதைய செயற்பாட்டுத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொசவிற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தனக்குச் சொந்தமான எதனோல் (Ethanol) நிறுவனத்தின் பணிகளுக்காகப் பயன்படுத்தியதாகக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. இச்சம்பவம் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் இரண்டரை இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த விசாரணை தொடர்பில், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது புதல்வர் ஜொஹான் பெர்னாண்டோ ஆகியோரைக் கைது செய்யுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். அதனடிப்படையில், ஜொஹான் பெர்னாண்டோ குருநாகலில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார்.
பணமோசடி தடுப்புச் சட்டம், பொதுச் சொத்துச் சட்டம், அரச சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்தல் மற்றும் குற்றவியல் மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதே குற்றச்சாட்டுகளின் கீழ் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவைக் கைது செய்ய விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், அவர் இருக்குமிடத்தை தற்சமயம் கண்டறிய முடியவில்லை என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாளை (31) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


