அலுவலகத்தின் கீழுள்ள வீதிகளைப் புனரமைக்கும்போது, 3 முதல் 4 இலட்சம் கியூப் வரையான மண் தேங்கியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான மஞ்சுள சுரவீரஆரச்சி தெரிவித்துள்ளார்.
“டித்வா சூறாவளியுடன் நுவரெலியா மாவட்டத்தில் பெய்த கடும் மழை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக பாரிய சுற்றுச்சூழல் பிரச்சினையொன்று உருவாகியுள்ளது. மண்சரிவுகள் மற்றும் மலைச்சரிவுகள் காரணமாக RDA மற்றும் PRDA வீதிகளில் சுமார் 3-4 இலட்சம் கியூப் மண் வீழ்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
“தற்போது அதில் ஒரு பகுதி அவ்விடங்களிலேயே உள்ளது. சரியாகச் சொன்னால், சுமார் ஒன்றரை இலட்சம் கியூப் மண் வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் அகற்றப்பட்டு வருகின்றது. அவை வீதியோரங்களில் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ளன. சில இடங்களில் தரம் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றாமல் இம் மண் கொட்டப்பட்டு வருகின்றது.
"தற்போது சரிந்து விழுந்த மண் மலைகள் பாரிய சமூக மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினையாக மாறியுள்ளன. இதற்கு முக்கிய காரணம் இம்மண்ணைக் கொட்டுவதற்கு முறையான இடவசதி இல்லாமையாகும். சில இடங்களில் தேயிலை தோட்டங்கள் மற்றும் தாழ்நிலங்களில் மண் கொட்டப்படுகிறது. பலத்த மழையின் போது இம்மண் மீண்டும் ஆறுகள் மற்றும் ஓடைகள் வழியாக நீர்த்தேக்கங்களைச் சென்றடைகின்றது.
"நீண்ட காலமாக நீர்த்தேக்கங்களிலுள்ள வண்டல் மண் (Silt) அகற்றப்படவில்லை. இதன் காரணமாக 100-150 மிமீ போன்ற சிறிய அளவிலான மழையின் போது கூட, நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு தாண்டி நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இது மீண்டும் ஒரு பாரிய பேரழிவிற்கு வழிவகுக்கக்கூடும். தற்போது நீர்த்தேக்கங்கள் வண்டல் மற்றும் மணலால் நிறைந்துள்ளன, அதேநேரம் வீதியோரங்களில் இலட்சக்கணக்கான கியூப் மண் தேங்கியுள்ளது.
“இது எமக்குள்ள ஒரு விசேட சுற்றுச்சூழல் பிரச்சினையாகும். இதனை அறிவியல் ரீதியாகத் தீர்க்க வேண்டும். எனவே, அரசாங்கம் என்ற ரீதியில் நாம் சுற்றுச்சூழுல் அமைச்சர் மற்றும் புவியியலாளர்களுடன் கலந்தாலோசித்து வருகிறோம். இம்மண்ணை மீண்டும் ஒரு பயனுள்ள பொருளாதார நடவடிக்கைக்கு எவ்வாறு முறைப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து அவதானம் செலுத்தி வருகிறோம்.
“ரம்பொட மற்றும் கரடியல்ல போன்ற மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மண்ணில் மணல் செறிவு அதிகமாக உள்ளது. முன்னதாக வீதித் திட்டங்களை மேற்கொண்ட சீன நிறுவனங்கள் கூட, இம்மண்ணைச் சுத்திகரித்து மணலாக மாற்றியுள்ளன. எதிர்காலத்தில் வீதிகளைப் புனரமைக்கும் போது மேலும் பல இலட்சம் கியூப் மண் சேரக்கூடிய வாய்ப்புள்ளது.
“இந்த மண்ணை நாட்டின் பொருளாதாரத்திற்கும் நுவரெலியா மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கும் பயன்படுத்தக்கூடிய வகையில், முறையான அறிவியல் திட்டமிடல் மற்றும் ஆழமான கலந்துரையாடல் ஒன்றின் தேவை எமக்கு உள்ளது. அரசாங்கம் என்ற ரீதியில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அமைச்சுக்களுடன் கலந்தாலோசித்து, அகற்றப்படும் இந்தப் பாரிய மண் மலைகளை எவ்வாறு முறையாக முகாமைத்துவம் செய்து பயன்படுத்துவது என்பது குறித்து ஆழமாக விவாதிக்கத் தயாராக உள்ளோம்.”


