தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 200 கோடி ரூபாய் மதிப்பிலான துவரம் பருப்பு டெண்டரை தமிழ்நாடு அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

"உயர் பொறுப்புகளில் நேர்மையான அதிகாரிகளை நியமித்ததால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது" என்கிறார் `அறப்போர்' இயக்கத்தின் ஜெயராம். என்ன நடக்கிறது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில்?

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா 4,000 ரூபாய் நிதி உதவியை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதில் முதல்கட்டமாக ரூ.2,000 வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 13 வகையான மளிகைப் பொருள்களையும் ரேசன் கடைகள் மூலமாக தமிழக அரசு விநியோகிக்க உள்ளது. முன்னதாக, புதிய அரசு பொறுப்பேற்பதற்கு 2 நாள்களுக்கு முன்னர் (மே 5 ஆம் தேதி) 20,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் திறக்கப்பட்டுள்ளது.

இதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து உணவுத்துறை அமைச்சர் அர.சக்ரபாணியின் கவனத்துக்கு அறப்போர் இயக்கத்தினர் சில தகவல்களைக் கொண்டு சென்றனர். இந்நிலையில், இன்று துவரம் பருப்பு டெண்டர் ரத்து செய்யப்பட்டு, புதிய டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் சிவில் சப்ளை அதிகாரிகளும் சில தனியார் நிறுவனங்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

என்ன நடந்தது?

"தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) மூலமாக 20,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு வாங்குவதற்காக ஏப்ரல் 26 ஆம் தேதி டெண்டர் ஒன்று கோரப்பட்டது. இந்த டெண்டரை மே 5 ஆம் தேதி திறந்துள்ளனர். இந்த டெண்டரில் மூன்று நிறுவனங்கள் பங்கெடுத்தன. இதில், ஒரு கிலோ துவரம் பருப்பின் விலை 143 ரூபாய் என ஒரு நிறுவனம் விலை குறிப்பிட்டுள்ளது. மற்ற 2 நிறுவனங்கள் முறையே 145 ரூபாய், 146 ரூபாய் என விலையைக் குறிப்பிட்டுள்ளன. எனவே, `143 ரூபாய் என்பதே சிறந்த விலை' என சிவில் சப்ளை துறையின் உயர் அதிகாரிகள் முடிவு செய்து அந்த நிறுவனத்துக்கே டெண்டர் கொடுக்க முடிவு செய்கின்றனர்.

ஜெயராம்

ஆனால், மொத்த விலையில் 50 கிலோ துவரம் பருப்புக்கான விலையே 5,000 ரூபாய்தான் என்பதற்கான ரசீதை நான் வாங்கியுள்ளேன். அதிலும், இது தரமான பருப்புக்கான விலையாக உள்ளது. ரேஷன் கடைகளில் என்ன மாதிரியான பருப்பு கிடைக்கிறது என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தரமான துவரம் பருப்பு என்றாலும் கிலோ 100 ரூபாய்க்கு கிடைக்கிறது. அரசின் அமுதம் பல்பொருள் அங்காடியின் சில்லறை விற்பனையில் கிலோ 106 ரூபாய்க்கு துவரம் பருப்பு கிடைக்கிறது. இந்த ரசீதையும் அரசுக்கு அனுப்பிய புகாரில் நான் இணைத்துள்ளேன். அரசின் பல்பொருள் அங்காடியில் லாபத்தோடு சேர்த்தே 106 ரூபாய்க்குத்தான் விற்கப்படுகிறது" என்கிறார் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ்.

1,500 கோடி ஊழலா?

தொடர்ந்து பேசுகையில், `` மொத்த விற்பனையிலும் லாபத்தை சேர்த்துதான் வியாபாரிகள் விற்கின்றனர். சென்னை என்பதால் துவரம் பருப்பு கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சேலம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 95 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதைக் கணக்கிட்டால், கிலோவுக்கு 40 ரூபாய் வரையில் அதிக விலைக்கு நுகர்பொருள் வாணிபக் கழகம் வாங்குவதை அறிய முடிகிறது. இதனை 20,000 மெட்ரிக் டன்னுக்கு எனக் கணக்கிட்டால் 80 கோடி முதல் 100 கோடி வரையில் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது.சக்ரபாணிடெண்டரில் பங்கேற்ற மூன்று நிறுவனங்களில் ஒரு நிறுவனம் நாமக்கல்லைச் சேர்ந்தது. இந்த டெண்டரில் சில பொதுத்துறை நிறுவனங்களும் பங்கெடுத்துள்ளன. இவர்களும், நாமக்கல் நிறுவனத்துடன் இணக்கமான நட்பில் உள்ளனர். இந்த முறைகேட்டுக்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். தற்போது இந்த டெண்டருக்கு அனுமதி கொடுக்க வேண்டிய இடத்தில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்ரபாணி இருக்கிறார்.

`இந்த டெண்டரை ரத்து செய்யுங்கள்' என அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். இதே டெண்டர் அடிப்படையில் கடந்த நான்கு ஆண்டுகளில் 1,500 கோடி ரூபாய் வரையில் முறைகேடு செய்துள்ளனர். இந்தத் தவறுகளுக்கு எல்லாம் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த சுதா தேவிதான் காரணம். டெண்டருக்கு ஒப்புதல் அளிக்கும் சப்-கமிட்டியில் அவர்தான் 20,000 மெட்ரிக் டன் துவரம் பருப்புக்கு அனுமதி கொடுத்தார்" என்கிறார்.

மேலும், "எங்களின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து துவரம் பருப்புக்கான டெண்டரை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், டெண்டர் விதிகளில் சில தளர்வுகளையும் கோரியிருந்தோம். குறிப்பாக, `டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் அரசுக்கு சப்ளை செய்யும் அனுபவங்களை மட்டும் கணக்கில் கொள்ளாமல், தனியாருக்கு அவர்கள் சப்ளை செய்யும் அனுபவங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தோம்.

13 மளிகைப் பொருள்கள்

காரணம், அரசின் டெண்டர் விதிகளைக் கவனித்தால் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்குச் சாதகமாகவே விதிகள் வளைக்கப்பட்டிருப்பது தெரியவரும். நாங்கள் கோரிய தளர்வுகளில் 80 சதவிகிதத்தை ஏற்றுக் கொண்டு மாற்றங்களைச் செய்துள்ளனர். துவரம் பருப்புக்கு புதிய டெண்டரை இன்று கோரியுள்ளனர். இது வரவேற்கத்தகுந்த முடிவு. உயர் மட்டத்தில் நேர்மையான அதிகாரிகளை நியமித்ததால் ஏற்பட்ட மாற்றம் இது. இதேபோல், கொரோனா நிவாரண பொருள் டெண்டரிலும் செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும்" என்றவர், அடுத்ததாக, கொரோனா நிவாரண பொருள் டெண்டர் தொடர்பான தகவல்களை விவரித்தார்.

"தமிழ்நாட்டில் 2.11 கோடி ரேசன் அட்டைதாரர்கள் உள்ளனர். கொரோனா காலத்தையொட்டி ஒவ்வொரு ரேசன் கார்டுக்கும் துவரம் பருப்பு, சோப்பு, சர்க்கரை என 13 பொருள்களை அரசு கொடுக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. இதில், 13 பொருள்களின் விலை 397 ரூபாய் என அமுதம் பல்பொருள் அங்காடியின் விலைப்பட்டியல் கூறுகிறது. 397 ரூபாய் என்பது சில்லறை விற்பனைக்கான விலை. அதுவே, மொத்த விலையில் 320 முதல் 340 ரூபாய் வரையில் விலை போகும். அரசு கொடுக்கும் 13 பொருள்களுக்கான மதிப்பு இது.

இதனை 2.11 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு எனக் கணக்கிட்டால் 670 கோடி ரூபாய் வரும். சிவில் சப்ளை கார்ப்பரேஷனின் டெண்டர் விதிகளைப் பார்த்தால் ஒரு நிறுவனம் மட்டும்தான் இந்த டெண்டரில் பங்கேற்க முடியும். இதனை ரத்து செய்துவிட்டு மாவட்டவாரியாக டெண்டர் போட்டால், மாவட்டத்துக்கு 5 ஒப்பந்ததாரர்கள் வருவார்கள். 38 மாவட்டங்களுக்கு 198 ஒப்பந்ததாரர்கள் வருவார்கள்.

200 கோடி இழப்பா?

கொரோனா காலத்தில் சிறு வியாபாரிகள் பெரிதும் சிரமத்தில் இருப்பதால் மொத்த விற்பனைக்கே அவர்களும் கொடுப்பார்கள். ஒரே ஒரு நிறுவனம் மட்டும் பங்கேற்றால் அவர்கள் 397 ரூபாய்க்கு சப்ளை செய்வார்கள். இதனால் அரசுக்கு 150 முதல் 200 கோடி இழப்பு ஏற்படும். இதனைத் தடுத்து டெண்டர் விதிகளைத் தளர்த்தி மாவட்டவாரியாக டெண்டர் போடுவதற்கு அரசு முன்வர வேண்டும். இதன்மூலம் அரசு நிர்ணயித்துள்ள ஜூன் 5 ஆம் தேதிக்குள் 50 சதவிகித மளிகைப் பொருள்களை ரேசன் குடோன்களுக்கு கொண்டு வந்துவிட முடியும். இதையும் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம் " என்கிறார்.

உணவுத் துறை அமைச்சரின் பதில் என்ன?

`துவரம் பருப்பு டெண்டர் குளறுபடிக்கு நீங்கள்தான் காரணம் என்கிறார்களே?' என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த சுதா தேவியிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். "நான் பணிமாறுதல் செய்யப்பட்டுவிட்டேன். இதுதொடர்பாக, தற்போதுள்ள நிர்வாக இயக்குநரிடமே கேளுங்கள்" என்றார்.

நுகர்பொருள் வாணிபக் கழகம் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்ரபாணியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். "இந்த விவகாரத்தில் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. சுதா தேவி உள்ளிட்ட மூன்று முக்கிய அதிகாரிகளை முதல்வர் இடமாற்றம் செய்துள்ளார். தற்போது நல்ல அதிகாரிகளை நியமித்துள்ளோம். நீங்கள் கூறும் புகார்களை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்று அவர்களின் கருத்தையும் கேட்போம். இறுதியாக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்போம்" என்கிறார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி