அமெரிக்காவில் தடுப்பூசி போட்டவர்கள் முக கவசம் அணியத் தேவையில்லை என்ற அறிவிப்பால், பல இடங்களில் குழப்பம் நிலவி வருகிறது.

அமெரிக்காவில் 3-ல் ஒரு பங்கு மக்கள் தொகையினருக்கு கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களும் போடப்பட்டுள்ளது. தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டுக் கொண்டவர்கள், இனி பொது இடங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை எனவும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.

இந்த திடீர் அறிவிப்பிற்கு அமெரிக்காவில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், முகக்கவசம் அணிவதில் அங்கு பெரும் குழப்பம் நிலவி வருகிறது. அதே சமயம் மருத்துவமனைகள், பொது போக்குவரத்து, விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இவற்றைத் தவிர பிற இடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளி போன்றவற்றை கடைப்பிடிக்க தேவையில்லை என வெளியான அறிவிப்பிற்கு அமெரிக்க செவிலியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. இது மருத்துவ பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல் என செவிலியர்கள் சங்கம் கூறியுள்ளது.

அமெரிக்க அரசின் முகக்கவசம் தொடர்பான இந்த அறிவிப்பிற்கு, பல்வேறு மாகாணங்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஒரு சில மாகாணங்கள் மற்றும் நகராட்சிகள் இதனை ஏற்க மறுத்துள்ளன. இதற்கிடையில் வணிக நிறுவனங்கள் முகக்கவசம் தொடர்பாக சுயமாக முடிவு செய்து கொள்ளலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளது மேலும் குழப்பத்தை அதிகரித்துள்ளது.

சில வணிக நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் என்றும் சில வணிக நிறுவனங்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்றும் அறிவித்துள்ளன. இதனால் முகக்கவசம் அணிய வேண்டுமா, இல்லையா என்பது குறித்த குழப்பம் தற்போது அமெரிக்கா முழுவதும் நிலவி வருகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி