பாரமாக இருந்தது. ராமையா தேநீர் தயாரித்துக் கொண்டு வந்து, அதில் ஒரு கோப்பையை ராசம்மாவிடம் நீட்டினார். அவள் எவ்வளவு ஆழமான சிந்தனையில் இருந்தாள் என்றால், ராமையா தேநீர் கோப்பையுடன் அருகில் நிற்பதைக்கூட அவள் கவனிக்கவில்லை. ராமையா ஒரு கணம் அவளை உற்றுப் பார்த்தார். அவள் சிந்தனையிலிருந்து விடுபடுவதாகத் தெரியவில்லை. இறுதியில் அவரே பேசத் தொடங்கினார்.
"ராசம்மா"
ராமையா மெதுவாகக் கூப்பிட்டார். ஆனால் ராசம்மா திடுக்கிட்டாள்.
"உனக்கு உடம்பு ஏதும் சரியில்லையா?"
"இல்லை" என்று புன்னகைத்தவாறு அவள் தேநீர் கோப்பையைப் பெற்றுக் கொண்டாள்.
"தோட்டத்தில் யாராவது ஏதும் சொன்னார்களா?"
"அப்படியெல்லாம் இல்லை."
"பின் ஏன் இவ்வளவு யோசனை? நமது ஆட்களுக்கு ஏதும் கஷ்டம் வந்துவிட்டதா?"
"எங்களுடன் கொழுந்து பறிக்கும் ரத்னவள்ளியின் தங்கை புஷ்பவள்ளிக்கு ஒரு கஷ்டம் வந்துவிட்டது. அதைப்பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன்."
"புஷ்பவள்ளிக்கு என்ன நடந்தது?"
"புஷ்பவள்ளியைத் திருமணம் செய்ய ஒருவன் இருந்தான். அவன் புஷ்பவள்ளியை கர்ப்பமாக்கிவிட்டுப் போய்விட்டான். கொழும்புக்குச் சென்றுவிட்டதாகத் தகவல். அவர்களின் உறவினர்கள் அங்கே இருக்கிறார்களாமே."
"ராக்ஷாவையைச் சேர்ந்தவனா?"
"அப்படித்தான் சொல்கிறார்கள்."
"அப்படியென்றால் அவனது தாய் தந்தையருக்கு இந்த விபரம் தெரியாதா?"
"புஷ்பவள்ளியையும் அழைத்துக்கொண்டு ரத்னவள்ளி அந்தப் பையனின் வீட்டுக்குச் சென்றிருக்கிறாள்."
"பிறகு?"
"அந்தப் பெண் (பையனின் தாய்) திட்டியிருக்கிறாள். 'நீங்கள் செய்யும்போது ரகசியமாகச் செய்தீர்கள், தவறு நடந்ததும் தாய் தந்தையைத் தேடி வருகிறீர்களா? அவனுக்குக் கொழும்பில் ஒரு பொண்டாட்டி இருக்கிறாள். அவன் இனி இங்கே வரமாட்டான்' என்று சொல்லிவிட்டாள்."
ராமையா கவலையுடன் பார்த்தார்.
"புஷ்பவள்ளி அழகான பெண்."
"அதற்காக அந்தப் பையனுக்கு இரண்டு பெண்களையும் வைத்துக்கொள்ள முடியாதா? நமது ஆட்கள் செய்யாத ஒன்றா என்ன? மூத்த மனைவி இதற்கெல்லாம் தடை போடமாட்டாளே."
அந்தப் பேச்சு ராசம்மாவின் மனதைச் சற்று நோகடித்தது. அவள் தேநீர் கோப்பையின் மிச்சத்தை முற்றத்தில் ஊற்றிவிட்டு, தண்ணீரில் கோப்பையைக் கழுவி அதையும் முற்றத்திலேயே ஊற்றினாள்.
"வழக்கம் இருக்கிறது என்பதற்காக எல்லாப் பெண்களும் இதற்குச் சம்மதிக்க மாட்டார்கள்" என்று ராசம்மா முகத்தைத் திருப்பிக் கொண்டு கூறினாள்.
"எல்லாப் பெண்களும் சம்மதிக்க மாட்டார்கள் என்பது போலவே, எல்லா ஆண்களும் இதைச் செய்வதில்லை. நான் உன் மனதை நோகடிக்கச் சொல்லவில்லை, அந்த அப்பாவிப் பெண், பிள்ளையுடன் அனாதையாகி விடுவாளே என்பதற்காகச் சொன்னேன்."
அவரது பேச்சைக் கேட்டு ராசம்மாவுக்குச் சிரிப்பு வந்தாலும், அதை ராமையாவுக்குக் காட்டாமல் மறைத்துக் கொண்டாள்.
புஷ்பவள்ளியின் விதி எப்படித் தீர்மானிக்கப்பட்டது என்பதைப் பல மாதங்களுக்குப் பிறகு ரத்னவள்ளி மூலமாகவே ராசம்மா தெரிந்துகொண்டாள்.
கொழுந்து பறிக்க வந்த ரத்னவள்ளி, வழக்கத்தை விட அமைதியாக இருந்தாள். அவளது அமைதியைப் பற்றி ராசம்மா லெட்சுமியிடம் சொன்னாள்.
"தங்கையின் பிரச்சினையால் ரத்னவள்ளி மனக்கஷ்டத்தில் இருக்கிறாள். குழந்தை பிறக்கப்போகும் நேரமும் நெருங்கிவிட்டது."
மாலையில் வேலை முடிந்து கொழுந்தை ஒப்படைத்துவிட்டு வீட்டிற்குச் செல்லத் தயாராகும்போது, ரத்னவள்ளி லெட்சுமியைத் தேடி வந்தாள். ராசம்மாவும் லெட்சுமியுடன் இருந்தாள்.
"லெட்சுமி அக்கா, எனக்கு நாளைக்கு ஒரு லீவு (விடுமுறை) வேண்டும்."
"ஏன் ரத்னவள்ளி?"
ரத்னவள்ளி சற்று மௌனமாக இருந்தாள்.
"உனக்கு ஏதும் கஷ்டமா?" லெட்சுமி சந்தேகத்துடன் கேட்டாள்.
"அப்படியுமில்லை. உங்களுக்குத் தெரியும்தானே, புஷ்பவள்ளி அழுதுகொண்டே இருக்கிறாள். அம்மா இறந்த நாள் முதல் நான்தான் அவளைப் பார்த்துக் கொண்டேன். அவள் பூப்படைந்து ஒரு வருடம் போனதும், அவளைத் திருமணம் செய்ய எமது அம்மாவின் தம்பி செல்லையா ஆசைப்பட்டார். முறைக்கு மாமனாக இருந்தாலும் அவர் என்னை விட இரண்டு வயது இளையவர்."
"செல்லையா இப்போது எங்கே?"
"அவர்கள் ராக்ஷாவையில் இல்லை, நாவலப்பிட்டியில். தோட்டத்தில் வேலை செய்யும்போது பாம்பு கடித்து இறந்துவிட்டார். ஆனால் புஷ்பவள்ளிக்குத் தெரியாது செல்லையா தன்னைத் திருமணம் செய்யக் காத்திருந்தார் என்று. நாங்கள் அதை அவளிடம் சொல்லவில்லை. அதன்பிறகு சில வருடங்கள் கழித்துத்தான் இந்தப் பையனுடன் பழகினாள். பகலில் வீட்டில் புஷ்பவள்ளி தனியாகத்தான் இருப்பாள். என் பிள்ளைகள் பாடசாலை சென்றுவிடுவார்கள். அந்த நேரத்தில்தான் இவன் வீட்டிற்குள் புகுந்திருக்கிறான்."
லெட்சுமியும் ராசம்மாவும் ரத்னவள்ளியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அடுத்து அவள் ஒரு துயரமான கதையைச் சொன்னாள்.
ரத்னவள்ளிக்கு ஐந்து பிள்ளைகள். ஒரு படிவரிசை போல ஒரு வருட இடைவெளியில் பிறந்த பிள்ளைகள். அவர்களைப் பகல் நேரத்தில் கவனித்துக் கொள்வதும் ரத்னவள்ளிதான். தங்கையைப் பாதுகாக்கும் பொறுப்பை முழுமையாக ஏற்றிருந்தும், நினைத்தது போல அவளைப் பாதுகாக்க முடியாமல் போய்விட்டதைச் சொல்லும்போது ரத்னவள்ளியின் கண்களில் கண்ணீர் மல்கியது.
"நேற்று இரவு என் கணவர் தூக்கமில்லாமல் யோசித்துக் கொண்டிருந்தார். பிள்ளைகளுடன் புஷ்பவள்ளி நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். என் கணவர் ஏதோ பேச வேண்டும் என்று என்னை முற்றத்திற்கு அழைத்தார்."
"என் கணவர் என்னிடம் கேட்கிறார், 'நான் புஷ்பவள்ளியை மனைவியாக (சஹேட) ஏற்றுக்கொண்டால் உனக்கு விருப்பமில்லையா?' என்று."
லெட்சுமி ராசம்மாவைப் பார்த்தாள். ராசம்மா லெட்சுமியைப் பார்த்தாள். இருவரும் மீண்டும் ரத்னவள்ளியைப் பார்த்தனர். அவளது கண்கள் கண்ணீரால் மின்னின.
"உனக்கு வருத்தமா?" லெட்சுமி கருணையுடன் கேட்டாள்.
"வழக்கங்கள் எதுவாக இருந்தாலும், தன் கணவர் இன்னொரு பெண்ணுடன் படுப்பதற்குச் சம்மதிக்கும் பெண் யார் லெட்சுமி அக்கா? அதுவும் என் கணவர் நல்லவர். என்னையும் பிள்ளைகளையும் நன்றாகப் பார்த்துக் கொள்கிறார். ஆனாலும் என் கணவர் தங்கையை ஏற்க நான் இடமளித்தேன். நாளை அவர்கள் இருவரும் லயத்தில் வேறொரு வீட்டிற்குப் போகிறார்கள். அதற்காகத்தான் நான் லீவு கேட்டேன்."
"அப்படியென்றால் அவர்கள் இருவர் மட்டும்?" லெட்சுமி மீண்டும் கேட்டாள்.
"ஆமாம். அவர்கள் குடும்பம் நடத்தப் போகும் இடத்தில் நாம் போய் இருக்க முடியாதுதானே? பிள்ளைகளுடன் நான் இருப்பேன். தங்கை எங்களைப் பிரிந்து தனியாகப் போவது எனக்கு வருத்தம்தான்."
"உன்னால் இதை எப்படித் தாங்க முடிகிறது? கெட்ட மனிதனாக இருந்தால் போனால் போகட்டும் என்று மனதைத் தேற்றிக் கொள்ளலாம்" என்று ராசம்மா ராமையாவை நினைத்துக் கொண்டு சொன்னாள்.
"அந்த மனுஷனால் ஐந்து பிள்ளைகள் வயிற்றில் வந்ததே போதும். என் கணவர் பாயில் என் பக்கம் வரும்போது, இன்னொரு பிள்ளை வந்துவிடுமோ என்று என் உடம்பு நடுங்கும். அதுவுமில்லாமல் பகல் முழுதும் மலைகளில் ஏறி கொழுந்து பறித்துவிட்டு மாலை வீட்டிற்குப் போகும்போது உயிர் போயிருக்கும். அதற்குப் பிறகு எதையாவது வயிற்றுக்குள் தள்ளிவிட்டு பாயில் விழுவதே சொர்க்கம். உடலில் ஆயிரம் வலிகளை வைத்துக்கொண்டு ஒரு ஆணுடன் மல்லுக்கட்டுவதில் என்ன சுவை இருக்கிறது? அது ஒரு உபாதைதான். எமது ஆட்கள் என்ன வயதா ஆகிவிட்டார்கள்? கிழவனானாலும் ஆண்களின் ஆசை போகாது என்பார்கள். என் கணவர் வெளிப் பெண்களிடம் போகாமல் என் தங்கையையே ஏற்றுக் கொள்வது எனக்கு மகிழ்ச்சிதான். தங்கையின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்குத் தகப்பனாக அவர் சம்மதித்ததும் பெரிய விஷயம். தங்கை அனாதையாக மாட்டாள். அவர் என்னையும் பிள்ளைகளையும் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாளைக்கு எனக்கொரு லீவு கேட்டுத் தாருங்கள் லெட்சுமி அக்கா" என்று கூறிவிட்டு ரத்னவள்ளி நடக்கத் தொடங்கினாள்.
லெட்சுமி தலையசைத்தாள்.
மற்றொரு பாகத்தில் மீண்டும் சந்திப்போம்.


