கருத்திற்கொண்டு, இலங்கையின் வெளிநாட்டுக் கடன்களை உடனடியாகத் தள்ளுபடி செய்யுமாறு ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் மற்றும் ஜெயதி கோஷ் உள்ளிட்ட 121 சர்வதேச பொருளாதார நிபுணர்கள் விடுத்த கோரிக்கை தற்போது சமூகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருதரப்பு கருத்துக்கள்: நீதியா? யதார்த்தமா?
பொருளாதார நிபுணர்களின் தரப்பு (Debt Justice): ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் தலைமையிலான குழுவினர், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் அனர்த்தங்களின் போது கடன் பொறுப்புகள் "மரணகரமானவை" என்று கூறுகின்றனர். 2024 இல் மேற்கொள்ளப்பட்ட கடன் மறுசீரமைப்பின் போது, தனியார் கடன் வழங்குநர்கள் அமெரிக்க அரசாங்கத்திற்கு கடன் வழங்குவதை விட 40% அதிக லாபத்தை இலங்கையிடமிருந்து பெறுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
யதார்த்தமான நிதித் தரப்பு: சர்வதேச நாணய நிதியம் (IMF) வழங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது என்று இவர்கள் வாதிடுகின்றனர். ஏனெனில் அது அனைத்து உறுப்பு நாடுகளின் பொது நிதியமாகும். அவ்வாறு தள்ளுபடி செய்ய வேண்டுமானால் அனைத்து உறுப்பு நாடுகளும் உடன்பட வேண்டும். அவ்வாறு இல்லாது கடன் தள்ளுபடி கோருவது இலங்கையை சர்வதேச சந்தையில் இருந்து தனிமைப்படுத்தக்கூடும்.
கடன் தள்ளுபடி செய்யும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
கடன் தள்ளுபடி செய்யும் அதிகாரம் கடன் வழங்கியவர்களுக்கே (Creditors) உள்ளது, கடன் பெற்றவர்களுக்கு (Debtor) அல்ல. கடன் பெற்றவர் செய்யக்கூடியது கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பது (Default) மாத்திரமே. 2022 இல் இலங்கை ஒரு எரிபொருள் கப்பலைக்கூட கடனுக்குப் பெற முடியாமல் போனது இத்தகைய முடிவின் விளைவாலேயே ஆகும். தற்போதைய சர்வதேச நிதி நடைமுறை 'கடன் மறுசீரமைப்பு' (Debt Restructuring) தானேயன்றி, ஒருதலைப்பட்சமான கடன் தள்ளுபடி அல்ல.
IMF இன் 'துரித நிதி வசதி' (RFI) மற்றும் யத்தார்த்தம்
டிட்வா அனர்த்தத்தை அடுத்து, IMF கடன்களைத் தள்ளுபடி செய்வதற்குப் பதிலாக 206 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக 'துரித நிதி வசதி' (RFI) திட்டத்தின் கீழ் 2025 டிசம்பர் 19 அன்று அங்கீகரித்தது. இதன் சிறப்பு என்னவென்றால், இது எவ்வித கடுமையான சீர்திருத்த நிபந்தனைகளுமின்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வழங்கப்பட்ட உடனடி கடனாகும். இந்த அனர்த்தத்தினால் ஏற்கனவே நடைமுறையில் இருந்த 'விரிவாக்கப்பட்ட நிதி வசதி' (EFF) திட்டத்தின் 5 வது மீளாய்வு 2026 இன் ஆரம்பம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நிதி ஸ்திரத்தன்மைக்கு ஏற்படும் அச்சுறுத்தல் (தொழில்நுட்ப பகுப்பாய்வு)
வங்கி அமைப்பின் மூலதனம் அரிப்புண்ணுதல்: இலங்கையின் பிரதான வர்த்தக வங்கிகள் (HNB, Sampath, Commercial போன்றவை) தமது சொத்துக்களில் கணிசமான பகுதியை அரசாங்கப் பிணையங்களில் முதலீடு செய்துள்ளன. ஒருதலைப்பட்சமாக கடன் தள்ளுபடி (Haircut) செய்யப்பட்டால், அந்த வங்கிகளின் சொத்து மதிப்பு உடனடியாக வீழ்ச்சியடையும். இது வங்கியின் ஸ்திரத்தன்மையை அளவிடும் 'மூலதனப் போதுமான விகிதத்தை' (CAR) பாதிப்பதோடு, பொதுமக்களின் வைப்புகளுக்கான பாதுகாப்பையும் இல்லாது செய்யும்.
கடன் தரப்படுத்தல் (Credit Rating) வீழ்ச்சி: 2025 செப்டம்பரில் இலங்கை 'CCC+' நிலைக்கு மிகவும் சிரமப்பட்டு முன்னேறியது. கடன் தள்ளுபடி கோருவது என்பது மீண்டும் 'D' (Default) நிலைக்கு வீழ்வதாகும். அத்தகைய நிலையில், சர்வதேச வர்த்தகத்திற்குத் தேவையான 'கடன் கடிதங்களை' (LC) சர்வதேச வங்கிகள் ஏற்க மறுக்கும் என வர்த்தக சமூகம் அச்சம் தெரிவிக்கிறது.
சர்வதேச அனுபவங்கள் மற்றும் பாடங்கள்
கிரெனடா (2024): அவர்கள் கடனைத் தள்ளுபடி செய்யவில்லை, மாறாக "சூறாவளி விதிமுறை" (Hurricane Clause) ஊடாக கடன் தவணைகளைத் தற்காலிகமாக நிறுத்தி நிவாரணம் பெற்றனர்.
அர்ஜென்டினா மற்றும் ஹைட்டி: ஒருதலைப்பட்சமாக கடனைத் செலுத்த மறுத்ததால் அல்லது தள்ளுபடி செய்ததால், இந்த நாடுகள் பல வருடங்களாக நிதித் தனிமைப்படுத்தலுக்கும் பொருளாதார ஸ்திரமின்மைக்கும் உள்ளாகின.
முடிவுரை
கடன் தள்ளுபடி என்பது மனிதாபிமான ரீதியில் ஒரு 'அழகான கனவாக' இருக்கலாம். ஆனால் அதைச் செயற்படுத்த முயல்வது என்பது வங்கி முறையைச் சீர்குலைத்து, நாட்டை மீண்டும் 2022 இன் அதலபாதாளத்திற்குள் தள்ளுவதாகும். டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவைப்படுவது கடன் தள்ளுபடி பற்றிய கனவுகள் அல்ல, மாறாக IMF RFI போன்ற விரைவான நிதி உதவிகளும் ஸ்திரமான பொருளாதாரமுமே ஆகும்.


