தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிக்கும் கடந்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் இருந்தே திமுக முன்னிலை பெற்றது. தி.மு.க. கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்று வாகை சூடியது. தி.மு.க. மட்டும் 126 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

இதனைத்தொடர்ந்து மறைந்த தி.மு.க.தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் கொளத்தூர் தொகுதியின் வெற்றி சான்றிதழை சமர்ப்பித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழக மக்கள் வழங்கி உள்ளனர். இந்த மகத்தான வெற்றிக்கு வழிவகுத்து தந்திருக்கும் அனைவருக்கும் தி.மு.க. சார்பில் இதயபூர்வமான நன்றி.

தமிழகம் ஒரு பாதாளத்திற்கு போயிருக்கிறது என்பதை நாட்டு மக்கள் அறிந்து அதை சரி செய்ய தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வுடன் மிகப்பெரிய வெற்றியை எங்களுக்கு வழங்கி உள்ளனர்.எந்த எதிர்பார்ப்போடு எந்த நம்பிக்கையுடன் அந்த வெற்றியை தந்துள்ளனரோ அதற்கேற்ற வகையில் பொறுப்பை உணர்ந்து எங்கள் ஆட்சி அதை நிறைவேற்றி தரும்.எங்களை எல்லாம் ஆளாக்கிய கருணாநிதி ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்து தமிழக மக்களுக்கு ஆற்றிய பணிகளை உணர்ந்துஉள்ளோம். அவர் வழி நின்று ஆறாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்கக் கூடிய தி.மு.க. ஆட்சியில் அதை நிறைவேற்றுவோம்.

கருணாநிதி இருந்த காலத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வர வேண்டும் என எண்ணியிருந்தோம். அது நிறைவேறாமல் போய்விட்டது. அது ஒரு ஏக்கமாக இருந்தது. அந்த ஏக்கம் இன்று ஓரளவுக்கு போயிருக்கிறது.மக்கள் அளித்திருக்கும் தீர்ப்பை ஏற்று எங்களுக்கு வாக்களித்தவர்கள் 'இவர்களுக்கு வாக்களித்தது தான் நல்லதே' என மகிழும் வகையில் வாக்களிக்காதவர்கள் 'இவர்களுக்கு வாக்களிக்காமல் சென்று விட்டோமோ' என நினைக்கும் வகையில் எங்கள் பணி தொடரும்.

தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நாங்கள் பொறுப்பேற்ற நாளில் இருந்து படிப்படியாக நிறைவேற்றும்முயற்சியில் ஈடுபடுவோம். ஐந்து ஆண்டு காலத்திற்கு தேர்தல் அறிக்கை தந்துள்ளோமோ அதேபோல தொலைநோக்கு பார்வையுடன் ஏழு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளோம். அதை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடுவோம். எங்கள் கடமையை நிச்சயம் நிறைவேற்றுவோம்.

நாளை எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி முறையாக தலைவரை தேர்வு செய்வோம். அதன்பின் அதிகாரிகளுடன் கலந்து பேசி பதவியேற்பு திகதியை முடிவு செய்து அறிவிப்போம். கொரோனா காலத்தை மனதில் வைத்துபதவிப் பிரமாண நிகழ்ச்சியை எளிமையாக கவர்ணர் மாளிகையில் நடத்த முடிவு செய்துள்ளோம். தேதியை இன்று அல்லது நாளை அறிவிப்பேன்” என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி