சுற்றுலாப் பொதிகளின் மறைவில் இடம்பெறும் சட்டவிரோதச் செயற்பாடு
இலங்கையின் பிரதான தேசிய சரணாலயங்களை இலக்காகக் கொண்டு, முறையான அனுமதியின்றித் தனிப்பட்ட வணிக ரீதியான புகைப்படப் பிடிப்பு வியாபாரமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சுற்றுச்சூழல் துறையில் கடும் விவாதங்கள் எழுந்துள்ளன.
வெளிநாட்டு வடிவழகிகளை (Models) லுணுகம்வெஹெர, யால மற்றும் குமண போன்ற உணர்திறன் மிக்க சூழல் தொகுதிகளுக்குத் திறந்தவெளி சஃபாரி வாகனங்கள் ஊடாக அழைத்துச் சென்று, அரைநிர்வாணப் புகைப்படங்களைப் பெறும் சுற்றுலாப் பொதிகள் சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பகிரங்கமாக விளம்பரப்படுத்தப்பட்டு வருவதாக விலங்குக்காட்சி சாலையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஷர்மிளா ராஜபக்ஷ அம்பலப்படுத்தியுள்ளார்.
இதுவொரு சாதாரண பொழுதுபோக்குச் சுற்றுலா அல்ல எனவும், அரச பாதுகாப்பிலுள்ள காப்பக நிலங்களைத் துஷ்பிரயோகம் செய்து வணிக இலாபம் ஈட்டுவதற்காக வனஜீவராசிகள் சட்டங்களை மீறும் செயலாகும் எனவும் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மீறப்படும் நாட்டின் பிரதான 5 சட்டங்கள்
-
வனஜீவராசிகள் மற்றும் தாவரப் பாதுகாப்புச் கட்டளைச் சட்டம் (1937 இன் 2 ஆம் இலக்கம்): இதன் 3(1)(b) பிரிவின்படி, தேசியப் பூங்கா ஒன்றிற்குள் பிரவேசிப்பதற்கான ஒரே சட்டபூர்வமான நோக்கம் இயற்கையையும் வனவிலங்குகளையும் அவதானித்தல் மாத்திரமே ஆகும். சாதாரண நுழைவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொண்டு உள்ளே சென்று வணிக ரீதியான வடிவழகுப் புகைப்படங்களை (Modeling) எடுப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
-
கட்டாய வணிகப் படப்பிடிப்பு அனுமதிப்பத்திரம்: சரணாலயம் ஒன்றிற்குள் எவ்வாறானதொரு வணிக ரீதியான புகைப்படப் பிடிப்புக்கும் வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகத்தின் எழுத்துமூல அனுமதி, உரிய அரச கட்டணங்களைச் செலுத்துதல் மற்றும் உள்ளடக்கம் குறித்த முன்கூட்டிய மீளாய்வு என்பன கட்டாயமானவை ஆகும்.
-
தண்டனைச் சட்டக்கோவை மற்றும் நாடோடிகள் கட்டளைச் சட்டம்: தேசியப் பூங்காக்கள் என்பன குடும்பங்களாகவும் பாடசாலை மாணவர்களாலும் பார்வையிடப்படும் பொது இடங்களாகும். ஏனைய சுற்றுலாப் பயணிகளுக்குத் தெரியும் வகையில் அரைநிர்வாணமாகத் தோன்றுவது தண்டனைச் சட்டக்கோவையின் 287 மற்றும் 290A பிரிவுகளின் கீழ் பொதுத் தொல்லை (Public Nuisance) மற்றும் அநாகரிகமான நடத்தையாகும்.
-
குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டம் (1948 இன் 20 ஆம் இலக்கம்): சாதாரண சுற்றுலா விசா (Tourist ETA) ஊடாக நாட்டிற்கு வருகைதரும் வெளிநாட்டவர்கள் எந்தவொரு வணிக அல்லது வடிவழகுத் தொழிலிலும் ஈடுபட முடியாது. இத்தகைய செயற்பாடுகள் விசா நிபந்தனைகளை மீறும் செயலாகும் என்பதுடன், நாட்டிலிருந்து நாடுகடத்தப்படுவதற்கும் காரணமாக அமையும்.
-
சுற்றுலா மேம்பாட்டுச் சட்டம் (1968 இன் 14 ஆம் இலக்கம்): இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகாரசபையின் (SLTDA) செல்லுபடியாகும் பதிவு அல்லது அனுமதிப்பத்திரமின்றி வணிக ரீதியான சஃபாரி மற்றும் வடிவழகுப் பொதிகளை முன்னெடுத்தல் சட்டவிரோதமானது ஆகும்.
பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினர் முன்னால் எழும் 3 கேள்விகள்
-
வனஜீவராசிகள் வழிகாட்டிகள் (Trackers) மௌனமாக இருப்பது ஏன்? ஒவ்வொரு சஃபாரி ஜீப் வண்டிக்கும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வழிகாட்டி ஒருவர் இணைக்கப்பட வேண்டும் என்ற சட்டப் பின்னணிக்கு மத்தியில், இத்தகைய சட்டவிரோதச் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தவோ அல்லது உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்கவோ கள உத்தியோகத்தர்கள் தவறியது ஏன்?
-
சம்பந்தப்பட்ட ஜீப் வண்டிச் சாரதிகளுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை? பூங்கா எல்லைகளுக்குள் பயணிகளின் ஒழுக்கம் மற்றும் நடத்தை தொடர்பில் சஃபாரி சாரதிகள் பொறுப்புக்கூறக் கடமைப்பட்டுள்ள நிலையில், குறித்த வணிகச் செயற்பாடுகளுக்குத் துணைபுரிந்த வாகனங்களை அடையாளம் கண்டு அவற்றுக்குப் பூங்காத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
-
நிர்வாக மேற்பார்வை கைநழுவிப் போனது எப்படி? உத்தியோகபூர்வ அனுமதியின்றிப் பகிரங்கமாகப் பணம் அறவிட்டு லுணுகம்வெஹெர, யால மற்றும் குமண போன்ற வலயங்களுக்குள் இத்தகைய தனிப்பட்ட புகைப்படப் பிடிப்புகள் இடம்பெறும் வரை பூங்காப் பொறுப்பதிகாரிகளின் (Park Wardens) கவனம் செலுத்தப்படாதது ஏன்?
துரித விசாரணைகளும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் அவசியமும்
இந்நிலைமையைக் கருத்திற்கொண்டு வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், இலங்கைச் சுற்றுலாப் பொலிஸார், சுற்றுலா மேம்பாட்டு அதிகாரசபை மற்றும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சு என்பன ஒன்றிணைந்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் எனச் சுற்றுச்சூழல் துறை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
இயற்கைப் பாதுகாப்பு, சூழலியல் கல்வி மற்றும் நிலைபேறான சுற்றுலாத் துறைக்காக ஒதுக்கப்பட்ட தேசியப் பூங்காக்கள், சட்டவிரோதத் தனிப்பட்ட வணிகத் தேவைகளுக்காகத் துஷ்பிரயோகம் செய்யப்பட இடமளிக்காது சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்தும் பொறுப்பு அரச பொறிமுறைக்கு உள்ளது.


