Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து பூரண விடுதலை!

Menaka

Menaka

நவம்பர் 12, 2026 • 11:04 AM

நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முகநூல் (Facebook) பதிவொன்றின் காரணமாக சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கை இளைஞரான அனோஜன் சிவராசா, அனைத்துச் சட்டக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார்.
  • மரண தண்டனையுடன் ஆரம்பமான நெருக்கடி 2026 செப்டம்பர் 17ஆம் திகதி, சவூதி அரேபியாவின் கிழக்குப் பிராந்திய மேன்முறையீட்டு நீதிமன்றம் அனோஜன் சிவராசாவுக்கு எதிராக மரண தண்டனை விதித்தது.
  • இராஜதந்திர மற்றும் சட்டத் தீர்வின் காலக்கோடு: செப்டம்பர் 17: கிழக்குப் பிராந்திய மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
  • ஒக்டோபர் 13: சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் (Supreme Court) முன்னர் விதிக்கப்பட்ட மரண தண்டனையை இரத்துச் செய்து, மேலதிக விசாரணைகளுக்காக வழக்கை அல்-அஹ்ஸா (Al-Ahsa) குற்றவியல் நீதிமன்றத்திற்கு மீண்டும் அனுப்பத் தீர்ப்பளித்தது .
எழுத்து அளவு:

முகநூல் (Facebook) பதிவொன்றின் காரணமாக சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கை இளைஞரான அனோஜன் சிவராசா, அனைத்துச் சட்டக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவரை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்குத் தேவையான இராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.

மரண தண்டனையுடன் ஆரம்பமான நெருக்கடி

2026 செப்டம்பர் 17ஆம் திகதி, சவூதி அரேபியாவின் கிழக்குப் பிராந்திய மேன்முறையீட்டு நீதிமன்றம் அனோஜன் சிவராசாவுக்கு எதிராக மரண தண்டனை விதித்தது. அந்நாட்டுச் சட்டத்திற்கு அமைய அவதூறானது எனக் கருதப்பட்ட சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இராஜதந்திர மற்றும் சட்டத் தீர்வின் காலக்கோடு:

  • செப்டம்பர் 17: கிழக்குப் பிராந்திய மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

  • ஒக்டோபர் 13: சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் (Supreme Court) முன்னர் விதிக்கப்பட்ட மரண தண்டனையை இரத்துச் செய்து, மேலதிக விசாரணைகளுக்காக வழக்கை அல்-அஹ்ஸா (Al-Ahsa) குற்றவியல் நீதிமன்றத்திற்கு மீண்டும் அனுப்பத் தீர்ப்பளித்தது.

  • ஒக்டோபர் 14: கொழும்பு மற்றும் ரியாத் இடையே ஆரம்பிக்கப்பட்ட இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் மரண தண்டனை நீக்கப்பட்டது.

  • ஒக்டோபர் 27: நீதிமன்ற விசாரணையின் போது, உரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைய மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக வழக்கு அரச வழக்குத் தொடுநர் அதிகாரசபையிடம் (Public Prosecution) ஒப்படைக்கப்பட்டது.

  • நவம்பர் 09: விசாரணைகளின் நிறைவில், அனோஜனுக்கு எதிரான அனைத்து வழக்கு நடவடிக்கைகளையும் முழுமையாகக் கைவிடுவதற்கும், வழக்கை உத்தியோகபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் சவூதி அரசு வழக்குத் தொடுநர் அதிகாரசபை தீர்மானித்தது.

சட்டத்தரணிகள் குழுவும் இராஜதந்திரத் தலையீடும்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சும் இரு நாடுகளினதும் தூதரகப் பிரிவுகளும் முன்னெடுத்த வேலைத்திட்டமே இத்தீர்மானத்திற்கு அடிப்படையாக அமைந்தது.

குறிப்பாக, இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவுக்குச் சென்ற சட்டத்தரணிகள் குழு அந்நாட்டு நீதிமன்றக் கட்டமைப்பு முன்னிலையில் முன்வைத்த சட்டரீதியான வாதங்கள் ஏனைய அனைத்துத் தண்டனைகளையும் நீக்கிக்கொள்வதற்குத் தீர்மானகரமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக அமைச்சர் குறிப்பிட்டார். சவூதி அரசாங்கம், அந்நாட்டு நீதிமன்றம் மற்றும் சட்ட நடவடிக்கைகளை நிறுத்தத் தீர்மானித்த சவூதி அரசு வழக்குத் தொடுநர் அதிகாரசபை ஆகியன வழங்கிய ஒத்துழைப்பும் இதன்போது பாராட்டப்பட்டது.

குடும்பத்தினரின் நிம்மதியும் அடுத்தகட்ட நடவடிக்கைகளும்

நேற்றைய தினம் (நவம்பர் 11) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு வருகை தந்த அனோஜனின் குடும்ப உறவினர்கள் அமைச்சர் விஜித ஹேரத்தைச் சந்தித்தனர். தமது மகனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அவர்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர்.

வளைகுடாப் பிராந்தியத்தின் கடுமையான சட்டக் கட்டமைப்புக்குள் சிக்கியிருந்த இலங்கை இளைஞர் ஒருவரை மீட்டெடுக்க முடிந்தமையானது, நாட்டின் அண்மைக்கால இராஜதந்திர நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க வெற்றியாகும் என அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஊடக அறிக்கை (தமிழாக்கம்)

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு

ஊடக அறிக்கை

சவூதி அரேபிய இராச்சியத்தில் திரு. அனோஜன் சிவராசாவுக்கு எதிரான வழக்கு நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவர எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் பாராட்டு

இலங்கைப் பிரஜையான திரு. அனோஜன் சிவராசா தொடர்பில் நிலுவையிலிருந்த வழக்கின் மேலதிக சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்காதிருக்கவும், அவ்வழக்கை உத்தியோகபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவரவும் சவூதி அரேபிய இராச்சியத்தின் அரச வழக்குத் தொடுநர் அதிகாரசபையினால் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து இலங்கை அரசாங்கம் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

திரு. சிவராசாவுக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை இரத்துச் செய்து, மேலதிக வழக்கு நடவடிக்கைகளுக்காக அவ்வழக்கை அல்-அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றத்திற்கு மீண்டும் அனுப்புவதற்கு சவூதி அரேபிய இராச்சியத்தின் உயர் நீதிமன்றம் 2026 ஒக்டோபர் 13 ஆம் திகதி வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்தே இச்சாதகமான முன்னேற்றத்தை எட்ட முடிந்தது. 2026 ஒக்டோபர் 27 ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, உரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைய மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக நீதிமன்றத்தினால் அவ்வழக்கு அரச வழக்குத் தொடுநர் அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைச் செயன்முறைகள் நிறைவடைந்ததன் பின்னர், வழக்குத் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்காதிருக்கவும், அவ்வழக்கை உத்தியோகபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவரவும் அரச வழக்குத் தொடுநர் அதிகாரசபை தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, திரு. சிவராசாவுக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த அனைத்துத் தண்டனைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதோடு, அவை தொடர்ந்தும் அமுலில் இல்லை.

இன்றைய தினம் (2026 நவம்பர் 11), வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் அவர்கள் அமைச்சில் திரு. சிவராசாவின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து, வழக்கு உத்தியோகபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமை மற்றும் திரு. சிவராசா இலங்கைக்குத் திரும்புவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் உள்ளடங்கலான புதிய முன்னேற்றங்கள் குறித்து அவர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.

இச்செயன்முறை முழுவதும் வழங்கப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் பயனுள்ள தலையீடு என்பவற்றுடன், சவூதி அரேபிய இராச்சியத்தில் நிறுவப்பட்டுள்ள சட்ட மற்றும் நிறுவன ரீதியான நடைமுறைகள் ஊடாக எட்டப்பட்ட சாதகமான பெறுபேறு தொடர்பில் இலங்கை அரசாங்கம் சவூதி அரேபிய இராச்சிய அரசாங்கத்திற்கும் உரிய சவூதி அதிகாரிகளுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

சவூதி அரேபிய சட்ட நிபுணர்களுடன் ஒருங்கிணைந்து சட்ட உதவிகளை வழங்குவதற்காக ரியாத் நகருக்குச் சென்று பணியாற்றிய இலங்கை சட்ட நிபுணர்களின் கூட்டு முயற்சியையும், இவ்வமைச்சுடன் கலந்தாலோசித்து ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரக காரியாலயம் தொடர்ச்சியாக முன்னெடுத்த இராஜதந்திரத் தலையீட்டையும் இலங்கை அரசாங்கம் பாராட்டுகிறது. இம்முயற்சிகள் அனைத்தும் சவூதி அரேபிய இராச்சியத்தின் இறையாண்மை, சட்டக் கட்டமைப்பு மற்றும் நீதித்துறை நடைமுறைகளுக்கு உரிய கவனமும் பூரண கௌரவமும் அளித்து, உரிய சவூதி அதிகாரிகளுடன் நெருங்கிய ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்பட்டன.

திரு. சிவராசா விரைவில் இலங்கைக்குத் திரும்புவதற்குத் தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துவதற்காக, அமைச்சானது ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரக காரியாலயத்தின் ஊடாக உரிய சவூதி அதிகாரிகளுடன் தொடர்ந்தும் நெருங்கிய தொடர்பில் செயற்பட்டு வருகிறது.

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளின் நலன்புரி, கௌரவம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளதுடன், வெளிநாடுகளிலுள்ள தனது இராஜதந்திரத் தூதரகங்கள் ஊடாக இலங்கைப் பிரஜைகளுக்கு வழங்கக்கூடிய அனைத்து இராஜதந்திர, சட்ட மற்றும் கொன்சியூலர் உதவிகளையும் தொடர்ந்தும் வழங்க நடவடிக்கை எடுக்கும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...