இருளை வென்று எழுந்த கிராமத்துத் தாய்மார்கள்
சூரியன் மறைந்த பிறகு ஆப்பிரிக்காவின் தொலைதூரக் கிராமங்களை அடர்ந்த இருள் சூழ்ந்துகொண்டது. மண்ணெண்ணெய் விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சிரமத்துடன் கழிந்த அந்த இரவுகள் பாம்புகள், பூச்சிகள் மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலையையுமே அழைத்து வந்தன.
பிள்ளைகள் புத்தகங்களைப் படித்துப் பயில்வதற்கோ அல்லது தாய்மார்கள் வீட்டு வேலைகளைச் செய்வதற்கோ அந்த இருள் எவ்விதத்திலும் அனுமதிக்கவில்லை.
இந்தத் துயரமான யதார்த்தத்தை, பாடசாலைப் பக்கமே ஒதுங்காத, எழுதவோ படிக்கவோ தெரியாத அதே கிராமங்களைச் சேர்ந்த வயதான பெண்கள் சிலர் தலைகீழாக மாற்றி அமைத்தனர்.
புத்தகங்கள் இல்லாத வகுப்பறையில் சூரிய மின்சாரப் பொறியியல் கல்வி
பாரம்பரியப் பரீட்சைகள் அல்லது ஆங்கிலப் புத்தகங்களுக்குப் பதிலாக, அனைத்தும் கைகளால் தொட்டுப் பழகும் செய்முறைப் பயிற்சிகள் மூலமாகவே இடம்பெற்றன. இந்தியாவின் ராஜஸ்தானில் அமைந்துள்ள 'Barefoot College' நிறுவனம் அறிமுகப்படுத்திய 'Solar Mamas' வேலைத்திட்டத்தின் மூலம் இந்தப் பெண்கள் ஆறு மாத கால குடியிருப்புப் பயிற்சியைப் பெற்றனர்.
வயர்களை இணைத்தல், சூரிய மின் தகடுகளைப் (Solar panels) பொறுத்துதல், மின்கலங்களைப் (Batteries) பராமரித்தல் மற்றும் சூரிய மின் சுற்றுகளைப் (Solar circuits) பழுதுபார்த்தல் ஆகியவற்றை இவர்கள் குறியீடுகள் மற்றும் வர்ணக் குறியீடுகளைப் (Color codes) பயன்படுத்திப் கற்றுக்கொண்டனர்.
உலகெங்கிலும் உள்ள 96 நாடுகளைச் சேர்ந்த 1,700 க்கும் மேற்பட்ட பெண்கள் இதுவரை இந்த நுட்பமான தொழிலை மிகச் சிறப்பாகப் பயின்றுள்ளனர்.
கிராமத்தின் தொழில்நுட்பச் சுயசார்பும் பொருளாதார நிவாரணமும்
பயிற்சியை முடித்துக்கொண்டு தமது சொந்த நாடுகளுக்குத் திரும்பிய இந்தப் பெண்கள் 75,000 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குச் சூரிய மின்சாரத்தை வழங்கி முடித்துள்ளனர். இதன் மூலம் சேமிக்கப்பட்ட மண்ணெண்ணெய்யின் அளவு 45 மில்லியன் லீற்றர்களுக்கும் அதிகம் எனப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
தான்சானியா மற்றும் சியரா லியோன் போன்ற நாடுகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு சூரிய மின்தகடு, ஒரு மின்கலம் மற்றும் மூன்று மின் குமிழ்கள் வீதம் வழங்கப்பட்டுள்ளன. அந்த உபகரணங்களுக்கான செலவை ஐந்து ஆண்டுகளுக்கு தவணை முறையில் செலுத்துவதற்கு கிராம மக்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளமை அவர்களுக்குப் பொருளாதார ரீதியாகப் பாரிய நிவாரணமாகும்.
மின் கட்டமைப்பு ஒன்றில் கோளாறு ஏற்படும் போது, நகரங்களிலிருந்து பொறியியலாளர்கள் வரும் வரை காத்திருக்காமல், கிராமத்தில் உள்ள பாட்டியே அதனைச் சில மணிநேரங்களில் பழுதுபார்ப்பது கிராமத்தின் சுயாதீனத்திற்குப் பலமிக்க சக்தியாக மாறியுள்ளது.
சமையலறைக்கு அப்பால் சென்ற பரம்பரையின் தலைமைத்துவம்
இது வெறுமனே மின் குமிழொன்றை ஒளிர வைப்பதற்கு அப்பாற்பட்ட ஆழமான சமூக மாற்றமாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பு (UN Women) சுட்டிக்காட்டுகிறது. வீட்டு வேலைகளுக்கு மாத்திரம் உதவியாளர்களாகக் கருதப்பட்ட கிராமத்துப் பெண், இன்று ஒட்டுமொத்தக் கிராமத்தின் தொழில்நுட்பத் தலைவியாக மாறியுள்ளார்.
தனது தாய் பொறியியலாளராகக் கிராமத்திற்குத் திரும்பிய தருணத்தைக் கண்ட தான்சானியாவின் செகலேனி கிராமத்தைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், "நானும் பெரியவளானதும் அம்மாவைப் போல நாட்டின் தலைவியாக, ஜனாதிபதியாக வர முடியும்" எனக் கூறியுள்ளார்.
2024 ஆம் ஆண்டு 'Nature Energy' சர்வதேச சஞ்சிகையில் வெளியான ஆராய்ச்சி அறிக்கையன்றின் படி, பாரம்பரியமாக ஆண்களின் துறையாகக் கருதப்பட்ட பொறியியல் துறை இவ்வாறான செய்முறை வேலைத்திட்டங்கள் ஊடாகப் பெண்களின் கரங்களுக்குச் சென்றடைவது சமூகத்தில் ஆழமாக வேரூன்றிய எண்ணக் கருத்துக்களை முற்றாக மாற்றுவதற்கு வழிவகுத்துள்ளது.
மேலதிகத் தகவல் மூல இணைப்புகள்:


