ஆசிய மற்றும் யூரேசியப் பிராந்தியங்களின் நாகரிகங்களுக்கிடையில் நிலவும் வரலாற்று ரீதியான பிணைப்பைத் தற்போதைய பிராந்திய ஒத்துழைப்பிற்காக எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த விசேட கலந்துரையாடலொன்று இந்தியாவின் புதுடெல்லி நகரில் நடைபெற்றுள்ளது.
கடந்த நவம்பர் 20 முதல் 22 ஆம் திகதி வரை நடைபெற்ற இந்த முதலாவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) நாகரிக உரையாடல் மன்றத்தில் 22 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 116 பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்தியப் பிரதமரின் பரிந்துரை செயல்வடிவம் பெற்றது
ஆசியா மற்றும் ஐரோப்பாவின் பலம்வாய்ந்த பல நாடுகள் அங்கத்துவம் வகிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, நாகரிக ரீதியான உரையாடலொன்றிற்காக ஒதுக்கிய முதலாவது மேடை இதுவாகும்.
2025 ஆம் ஆண்டு சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்த பரிந்துரைக்கு அமைவாக இம்மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. புதுடெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க புரானா கிலா (Purana Qila) வளாகத்தில் இந்தியப் பிரதமரினால் இம்மாநாடு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக இலங்கையின் பாரம்பரியம்
மாநாட்டின் "நாகரிக மற்றும் கலாசார வெளிப்பாடுகள்" எனும் முதலாவது அமர்வில் உரையாற்றிய இலங்கைத் தூதுக்குழுவின் தலைவரும், இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகருமான மஹிஷினி கொலொன்னே நாட்டின் வரலாற்றுப் பாரம்பரியம் குறித்து விளக்கமளித்தார். இதன்போது புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவியின் வாழ்த்துக்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
தரைவழிப் பாதைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்ட யூரேசிய உரையாடலொன்றில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கை கொண்டுள்ள வரலாற்று முக்கியத்துவத்தை இணைப்பதில் உயர்ஸ்தானிகர் வெற்றி பெற்றார்:
-
கலாசார மற்றும் ஆன்மீகப் பரிமாற்றம்: மஹிந்த தேரரின் வருகை மற்றும் சங்கமித்தை தேரியினால் ஸ்ரீ மகா போதி கிளை கொண்டு வரப்பட்டமை ஊடாக இலங்கையின் மொழி, இலக்கியம், கலை மற்றும் வாழ்க்கை முறை செழுமைப்படுத்தப்பட்ட விதத்தை அவர் நினைவுகூர்ந்தார்.
-
சமுத்திர வர்த்தக மையம்: இந்தியா, அரேபியா, பாரசீகம், சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியாவை இணைத்த கடல்வழி வர்த்தகப் பாதைகளின் கேந்திர நிலையமாக இலங்கை செயற்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். அக்கடல் வழிப் பாதைகள் ஊடாகப் பொருட்கள் மாத்திரமன்றி அறிவு, மதங்கள், மொழிகள் மற்றும் பல்வேறு கருத்துக்களும் பரிமாறப்பட்டதாக உயர்ஸ்தானிகர் வலியுறுத்தினார்.
அறிஞர்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாக எதிர்காலத்திற்கு
2009 ஆம் ஆண்டு முதல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உரையாடல் பங்காளியாகச் செயற்பட்டு வரும் இலங்கை, இம்மாநாட்டின் ஊடாகப் பல நடைமுறைச் சாத்தியமான பரிந்துரைகளை முன்வைத்தது. பழமையான ஓலைச்சுவடிகள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாத்தல், அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்களுக்கிடையிலான தொடர்புகளைப் பலப்படுத்துதல், அத்துடன் கலைஞர்கள், அறிஞர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையிலான பரிமாற்றத் திட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்தல் ஆகியன அவற்றில் பிரதானமானவை.
இம்மாநாட்டின் அமர்வுகளில் இலங்கையைச் சேர்ந்த நான்கு அறிஞர்களும் தமது அறிவால் பங்களிப்புச் செய்தனர்:
-
ஆர். பி. எஸ். சி. கே. ரத்னமலல (சிரேஷ்ட விரிவுரையாளர், ஒருங்கிணைந்த வடிவமைப்பு கற்கைகள் பிரிவு, மொரட்டுவ பல்கலைக்கழகம்)
-
நூர்தீன் மொஹமட் சிராஜ் (உறுப்பினர், அரச இலக்கிய ஆலோசனைச் சபை)
-
பேராசிரியர் ஏ. சரத் ஆனந்த (தலைவர், தேசிய கல்வி ஆணைக்குழு)
-
கலாநிதி கே. கே. சுனில் (சிரேஷ்ட விரிவுரையாளர், சிங்களம் மற்றும் வெகுஜனத் தொடர்பாடல் கற்கைகள் பிரிவு, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்)
'இந்திரபிரஸ்த பிரகடனம்' ஊடாகப் புதிய பாதை
மாநாட்டின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட 'இந்திரபிரஸ்த பிரகடனத்தின்' (Indraprastha Communiqué) மூலம் பிராந்திய நாடுகளின் அடையாளத்தைப் பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்வதற்கு இணக்கம் காணப்பட்டது.
அதற்கமைய, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரலாற்றுப் பாரம்பரியங்களை டிஜிட்டல்மயப்படுத்தவும், அவற்றைச் சாதாரண மக்களுக்கு மேலும் நெருக்கமாகக் கொண்டு செல்லவும் உறுப்பு நாடுகள் தீர்மானித்துள்ளன.

