Tamil Leader News
முக்கியம்
நாமலின் சிறையறைக்கு வந்த புதிய உறுப்பினர்!●இந்து சமுத்திரத்தின் நாகரிகப் பாரம்பரியத்தை ஷாங்காய் மாநாட்டில் வலியுறுத்திய இலங்கை!●யுத்த கால நிவாரணப் பணியாளர் தாக்குதல்கள்:  மன்னிப்பு கோருகிறது ஐ.நா!●புதுடெல்லியில் விஜித – ஜெய்சங்கர் சந்திப்பு: இந்து சமுத்திரத்தின் பொருளாதார பலம் யாருக்கு?●சர்வதேசக் கடற்பரப்பில் போதைப்பொருள் படகுடன் எழுவர் கடற்படையினரால் கைது!●சர்வதேச கிரிக்கெட் களத்தில் இலங்கைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க இரட்டை வெற்றி!●'நாம் நிதி ஒழுக்கத்தைப் பேணும் அரசாங்கம்: ஆர்ப்பாட்டங்கள் – வேலைநிறுத்தங்கள் தேவையில்லை'●தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை முடக்கும் வகையில் அரசாங்கம் புதிய சட்டமூலங்களைக் கொண்டுவருகிறது●வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் விவசாய மற்றும் மேய்ச்சல் காணிகள் ஆக்கிரமிப்பு: அரசாங்கத்துக்கு சாணக்கியன் எச்சரிக்கை!●திருமண விளம்பரங்களில் சாதியைத் தடை செய்வது ஜனநாயகமா? ●
செய்திகள்

யுத்த கால நிவாரணப் பணியாளர் தாக்குதல்கள்: மன்னிப்பு கோருகிறது ஐ.நா!

Menaka

Menaka

நவம்பர் 27, 2026 • 12:21 PM

யுத்த கால நிவாரணப் பணியாளர் தாக்குதல்கள்:  மன்னிப்பு கோருகிறது ஐ.நா!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கையில் நிலவிய ஆயுத மோதல் முடிவுக்கு வந்து 17 வருடங்கள் கடந்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் ( OHCHR ) நேற்று (நவம்பர் 26) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
  • இரு தரப்பினாலும் இடம்பெற்ற இடையூறுகள் 2006ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டின் இறுதி யுத்த நடவடிக்கை வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் மனிதாபிமான உதவிகளை வழங்குவது கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
  • உணவு, எரிபொருள் மற்றும் மருந்து விநியோகங்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய குறைந்தபட்சம் ஒரு நிவாரணப் பணியாளராவது படுகொலை செய்யப்பட்டோ அல்லது காணாமல் ஆக்கப்பட்டோ உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மூதூர் அவலம் (2006 ஓகஸ்ட்): பிரான்ஸ் நாட்டின் அரச சார்பற்ற நிறுவனமான 'அக்‌ஷன் கொன்ட்ரே லா பெயிம்' (ACF) அமைப்பின் உள்நாட்டுப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமை.
எழுத்து அளவு:

 

இலங்கையில் நிலவிய ஆயுத மோதல் முடிவுக்கு வந்து 17 வருடங்கள் கடந்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் (OHCHR) நேற்று (நவம்பர் 26) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

"நான் பலமுறை இறந்துவிட்டேன்: 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையில் மனிதாபிமான உதவிகள் மீதான தாக்குதல்கள்" ('I died many times': Attacks on humanitarian assistance in Sri Lanka, 20 years on) எனப் பெயரிடப்பட்டுள்ள இவ்வறிக்கையின் ஊடாக, யுத்த காலத்தில் நிவாரணப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக அரச மட்டத்திலான அங்கீகாரமும் பகிரங்க மன்னிப்பும் கோரப்பட்டுள்ளது.

இரு தரப்பினாலும் இடம்பெற்ற இடையூறுகள்

2006ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டின் இறுதி யுத்த நடவடிக்கை வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் மனிதாபிமான உதவிகளை வழங்குவது கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

உணவு, எரிபொருள் மற்றும் மருந்து விநியோகங்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2006 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய குறைந்தபட்சம் ஒரு நிவாரணப் பணியாளராவது படுகொலை செய்யப்பட்டோ அல்லது காணாமல் ஆக்கப்பட்டோ உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலைமைக்கு அரச பாதுகாப்புப் படைகளும் அதேபோன்று விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பும் பொறுப்புக் கூற வேண்டும் என ஐ.நா. அலுவலகம் அவதானித்துள்ளது. தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து வெளியேற நிவாரணப் பணியாளர்களை அனுமதிக்காமல், அவர்களைத் துப்பாக்கிச் சூடுகள் மற்றும் எறிகணைத் தாக்குதல்களுக்கு மத்தியில் ஆபத்தில் தள்ள விடுதலைப் புலிகள் அமைப்பு செயற்பட்டதாக அவ்வறிக்கை குற்றம் சுமத்துகிறது.

தீர்க்கப்படாத நான்கு சம்பவங்கள்

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் அப்போதைய நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களின் சாட்சியங்களின் அடிப்படையில், இந்த முழுமையான அறிக்கை நான்கு பிரதான சம்பவங்களைப் பகுப்பாய்வு செய்கிறது:

  • TRO பணியாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை (2006 ஜனவரி): தமிழ் புனர்வாழ்வுக் கழகத்தின் (TRO) பணியாளர்கள் எழுவர் வெலிக்கந்த பிரதேசத்தில் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை.

  • மூதூர் அவலம் (2006 ஓகஸ்ட்): பிரான்ஸ் நாட்டின் அரச சார்பற்ற நிறுவனமான 'அக்‌ஷன் கொன்ட்ரே லா பெயிம்' (ACF) அமைப்பின் உள்நாட்டுப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமை. அது அப்போதைய காலகட்டத்தில் உலகளவில் நிவாரணப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட மிகக் கொடூரமான ஒற்றைத் தாக்குதலாகக் கருதப்படுகிறது.

  • ஐ.நா. உதவி வாகனத் தொடரணி மீதான தாக்குதல் (2009 ஜனவரி): வன்னிப் பிரதேசத்திற்கு உதவிகளை ஏற்றிச் சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் உதவி வாகனத் தொடரணி தடுத்து நிறுத்தப்பட்டு எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டமை.

  • புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீதான தாக்குதல் (2009 முற்பகுதி): நூற்றுக்கணக்கான நோயாளர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த, தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டமை.

பொறுப்புக்கூறல் தாமதமாவதற்கான காரணங்களும் தற்போதைய நிலையும்

மூதூர் சம்பவம் இடம்பெற்று 20 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், இந்த எந்தவொரு சம்பவம் தொடர்பிலும் எவருக்கும் குற்றவியல் ரீதியில் தண்டனை வழங்கப்படவில்லை என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகளை மறுத்தல், விசாரணைகள் இடைநடுவில் முடங்குதல், சாட்சியாளர்களுக்குப் போதுமான பாதுகாப்பு வழங்கப்படாமை மற்றும் குற்றவியல் வழக்குகளைத் தாக்கல் செய்வதற்குப் பதிலாக விசாரணை ஆணைக்குழுக்களை நியமிப்பதோடு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டமை ஆகியன இந்தத் தாமதத்திற்கான காரணங்களாக ஐ.நா. அலுவலகத்தினால் இனங்காணப்பட்டுள்ளன.

தற்போதைய அரசாங்கம் பொறுப்புக்கூறலை முன்னெடுத்துச் செல்ல அர்ப்பணிப்புடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளமையும், 2026 மே மாதத்தில் விசாரணை ஆணைக்குழுக்களின் ஆறு அறிக்கைகள் பகிரங்கப்படுத்தப்பட்டமையும் இவ்வறிக்கையில் பாராட்டப்பட்டுள்ளன. அந்த முன்னேற்றம் இருந்த போதிலும், குறித்த சம்பவங்கள் தொடர்பாகக் குற்றவியல் விசாரணைகளோ அல்லது வழக்குத் தாக்கல்களோ முன்னோக்கிச் செல்வதற்கான பகிரங்கச் சாட்சியங்கள் இன்னமும் போதுமானதாக இல்லை என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னர் 2026 செப்டெம்பர் 24 ஆம் திகதி எழுத்துமூல வினாக்கொத்தொன்றும், நவம்பர் 3 ஆம் திகதி அறிக்கையின் பிரதியொன்றும் இலங்கை அரசாங்கத்திடம் அனுப்பி விளக்கம் கோரப்பட்ட போதிலும், வெளியிடப்படும் தருணம் வரையிலும் அரசாங்கத்திடமிருந்து உத்தியோகபூர்வப் பதில் கிடைத்திருக்கவில்லை என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச மற்றும் உள்நாட்டுப் பரிந்துரைகள்

பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிர் பிழைத்தவர்களுக்கும் நட்டஈடு வழங்குதல், குற்றவியல் வழக்குகளை நடத்துவதற்காகச் சுயாதீன அரச சட்டத்தரணி அலுவலகமொன்றை (Independent Prosecutor's Office) நிறுவுதல், யுத்தக் குற்றங்களை உள்நாட்டுச் சட்டத்தில் உள்ளடக்குதல் மற்றும் கட்டளையிடும் மட்டத்திலான அதிகாரிகள் உள்ளடங்கலாகப் பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு எதிராக நடுநிலையான விசாரணைகளை நடத்துதல் ஆகியவற்றை இலங்கை அரசாங்கத்திற்கு அவ்வறிக்கை பரிந்துரை செய்கிறது.

உலகெங்கிலும் தற்போதைய யுத்த மோதல்களில் நிவாரணப் பணியாளர்கள் இலக்கு வைக்கப்படுவது அதிகரித்து வரும் சூழலில், இலங்கையின் சம்பவங்களுக்குத் தண்டனை வழங்கப்படாமை உலகின் ஏனைய பகுதிகளுக்கும் தவறான முன்னுதாரணமாக அமையக்கூடும் என ஐ.நா. அலுவலகம் எச்சரிக்கிறது.

அதற்கமைய, குற்றம் இடம்பெற்ற நாடு எதுவாக இருந்தபோதிலும் எந்தவொரு நாட்டின் நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்ய இடமளிக்கும் 'உலகளாவிய அதிகார வரம்பின்' (Universal Jurisdiction) கீழ் இக்குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கும் வழக்குத் தாக்கல் செய்வதற்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு ஏனைய நாடுகளிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...