Tamil Leader News
முக்கியம்
தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை முடக்கும் வகையில் அரசாங்கம் புதிய சட்டமூலங்களைக் கொண்டுவருகிறது●வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் விவசாய மற்றும் மேய்ச்சல் காணிகள் ஆக்கிரமிப்பு: அரசாங்கத்துக்கு சாணக்கியன் எச்சரிக்கை!●திருமண விளம்பரங்களில் சாதியைத் தடை செய்வது ஜனநாயகமா? ●தெற்காசியப் புகைமூட்டத்தால் இலங்கைக்கு ஏற்படும் அபாயமும் தீர்வுகளும்!●நாட்டின் தீர்மானங்களில் மக்களையும் இணைத்துக்கொள்ளுமாறு ஐ.நா பரிந்துரை!●பொலிஸ் மோப்ப நாய்க் கூண்டுகள் 2க்கு ரூ. 54 இலட்சம்: எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி!●திரிபோசா சோளத் தொகையொன்று 10 மாதங்களாக துறைமுகத்தில் முடக்கம்!●பலாங்கொடை சிசு மரணம்: மருந்து தட்டுப்பாட்டுக்கு பின்னால் உள்ள கண்ணுக்குத் தெரியாத அச்சம்!●20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளையோரிடையே HIV தொற்று அதிகரிப்பு!●தமிழர் பகுதிகளில் உணர்வுபூர்வமாகத் தொடரும் மாவீரர் தின நினைவேந்தல்; நிபந்தனைகனை மீறினால் PTA பாயுமென பொலிஸார் எச்சரிக்கை!●
செய்திகள்

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் விவசாய மற்றும் மேய்ச்சல் காணிகள் ஆக்கிரமிப்பு: அரசாங்கத்துக்கு சாணக்கியன் எச்சரிக்கை!

Menaka

Menaka

நவம்பர் 26, 2026 • 7:56 PM

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் விவசாய மற்றும் மேய்ச்சல் காணிகள் ஆக்கிரமிப்பு: அரசாங்கத்துக்கு சாணக்கியன் எச்சரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடந்த இரண்டு வருடங்களாக மக்களின் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என அரசாங்கம் தொடர்ச்சியாகக் கூறிவருகின்ற போதிலும், வாக்குறுதியளிக்கப்பட்ட வகையில் காணிகள் இதுவரை முழுமையாக விடுவிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
  • மேய்ச்சல் தரைப் பிரச்சினையில் இனப்பாகுபாடு காட்டப்படுகிறதா?
  • குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் கருவாச்சோலை பகுதியில் பணம் வழங்காவிட்டால் கால்நடைகளை மேய்ச்சலுக்காகக் கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும், இதற்காக 10,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை பணம் அறவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

“கொழும்பில் இருந்து அரசாங்கம் வழங்கும் பதில்களுக்கும் கள யதார்த்தத்துக்கும் பாரிய வேறுபாடு; பிரச்சினைகளை நேரில் வந்து பாருங்கள், இல்லையேல் வீதியில் இறங்கிப் போராட வேண்டிய நிலை ஏற்படும்” – சாணக்கியன் இராசமாணிக்கம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வனத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஊடாகத் தமிழ் மக்களின் விவசாயக் காணிகள் மற்றும் மேய்ச்சல் தரைக் காணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் நாடாளுமன்றத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், இப்பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

நிலையியல் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விகளை முன்வைத்து உரையாற்றிய அவர், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வனத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் செயற்பாடுகளால் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் கால்நடைப் பண்ணையாளர்கள் தொடர்ச்சியாகப் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு வருடங்களாக மக்களின் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என அரசாங்கம் தொடர்ச்சியாகக் கூறிவருகின்ற போதிலும், வாக்குறுதியளிக்கப்பட்ட வகையில் காணிகள் இதுவரை முழுமையாக விடுவிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

மாறாக, வனத் திணைக்களம் புதிதாகப் பல காணிகளைக் கையகப்படுத்தி வருவதாகவும், இதனால் மக்களின் விவசாய நடவடிக்கைகளும் வாழ்வாதாரமும் மேலும் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, வனத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகிய இரண்டும் மக்களின் விவசாயக் காணிகளைப் பலவந்தமான முறையில் ஆக்கிரமித்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

திணைக்களங்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் கேள்வி

இரு திணைக்களங்களினதும் செயற்பாடுகள் மற்றும் வளங்கள் தொடர்பிலும் சாணக்கியன் பல கேள்விகளை முன்வைத்தார்.

அண்மையில் நாடு முழுவதும் வனத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு எத்தனை தனி கேப் ரக வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இவ்விரு திணைக்களங்களுக்கும் எத்தனை வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அத்துடன், எத்தனை மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் எத்தனை மோட்டார் சைக்கிள்கள் ஒதுக்கப்படவுள்ளன என்ற விபரங்களையும் அரசாங்கம் வெளியிட வேண்டும் எனக் கோரினார்.

சட்டவிரோத காடழிப்புகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்?

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மை இனத்தவர்களால் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் சட்டவிரோத காடழிப்புகள் தொடர்பில் ஆதாரங்களுடன் தகவல்கள் வழங்கப்பட்டும் ஏன் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் காடழிப்புகள் தொடர்பில் ஜி.பி.எஸ். முறைமை உள்ளிட்ட தொழில்நுட்பத் தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இவ்வளவு தகவல்கள் வழங்கப்பட்டும் இதுவரை ஏன் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.

கடந்த இரண்டு வருடங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வனத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் எத்தனை ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன, புதிதாக எத்தனை ஏக்கர் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்ற விபரங்களை மாவட்ட ரீதியாக அரசாங்கம் வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மக்களின் காணிகளை விடுவிக்காமல் புதிதாகக் காணிகளைக் கையகப்படுத்துவதற்கான காரணம் என்ன என்றும், காணி விடுவிப்பு நடவடிக்கைகள் முழுமையடையும் வரை புதிய காணிகளைக் கையகப்படுத்துவதையும் காணிகளுக்கு எல்லை அமைப்பதையும் அரசாங்கம் நிறுத்துமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என அரசாங்கம் கூறிவந்தாலும், மாவட்ட மட்டத்தில் காணிகள் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், இந்த முரண்பாட்டுக்கு அரசாங்கம் என்ன தீர்வை முன்வைக்கப் போகின்றது என்றும் வினவினார்.

இரண்டு வருடங்களாகக் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் எனக் கூறிவரும் அரசாங்கம், எப்போது வடக்கு, கிழக்கில் உள்ள மக்களின் காணிகளை முழுமையாக விடுவிக்கும் என்ற காலக்கெடுவையும் அறிவிக்க வேண்டும் எனக் கோரினார்.

பிரதமர் வழங்கிய ஒரு மாத கால வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை

காணி விடுவிப்பு தொடர்பில் தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன் பிரதமரிடம் கேள்வியெழுப்பியபோது, ஒரு மாத காலத்துக்குள் காணிகள் விடுவிக்கப்படும் எனப் பிரதமர் தெரிவித்திருந்ததாகவும் சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.

ஆனால், பிரதமர் அவ்வாறு வாக்குறுதியளித்து மூன்று மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், இதுவரையில் காணிகள் விடுவிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் நாடாளுமன்றத்தில் வழங்கும் வாக்குறுதிகள் நடைமுறையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், மக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய காணி விடுவிப்பு விவகாரத்தில் மேலும் காலதாமதம் ஏற்படுத்தக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

யானைத் தாக்குதல்களிலிருந்து மக்களைப் பாதுகாக்க மின்வேலிகள் அமைக்கப்படுமா?

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யானைத் தாக்குதல்களால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் தொடர்பிலும் அவர் கேள்விகளை முன்வைத்தார்.

காட்டு யானைகளின் தாக்குதல்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காகக் கிராமங்களைச் சுற்றி மின்வேலிகள் அமைப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்குமா எனக் கேள்வி எழுப்பிய அவர், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இதற்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விபரங்களையும் கோரினார்.

அத்துடன், மின்வேலி அமைக்கும் பணிகள் எப்போது ஆரம்பிக்கப்பட்டு எப்போது நிறைவடையும் என்ற கால அட்டவணையையும் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

மேய்ச்சல் தரைப் பிரச்சினையில் இனப்பாகுபாடு காட்டப்படுகிறதா?

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் தொடரும் மேய்ச்சல் தரைப் பிரச்சினை தொடர்பில் சாணக்கியன் தனது உரையில் விசேட கவனம் செலுத்தினார்.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள திவுலான போன்ற வனப் பகுதிகளில் குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த கால்நடைப் பண்ணையாளர்கள் தமது மாடுகளை மேய்ப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு ஏன் அதே அனுமதி மறுக்கப்படுகின்றது என அவர் கேள்வி எழுப்பினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரைப் பிரச்சினை பிரதான பிரச்சினைகளில் ஒன்றாகக் காணப்படுவதாகவும், இது தொடர்பில் பலமுறை நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பிய போதிலும் இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

மேய்ச்சல் தரைக்காக அடையாளப்படுத்தப்பட்ட காணிகள் இதுவரை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர், இதனால் கால்நடைப் பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை மேய்ச்சலுக்காக வனப் பகுதிகளுக்குள் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினை தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அத்தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.

அம்பாறை மாவட்டத்தின் வட்டமடு, முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய், திருகோணமலை மாவட்டத்தின் சின்னவில்லு, கட்டவானை மற்றும் தம்பலகாமம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கால்நடைப் பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை வனப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று மேய்த்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால், தமிழ் மக்கள் தமது கால்நடைகளை வனப் பகுதிகளுக்குள் கொண்டு செல்லும்போது வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாகவும், இதனால் பண்ணையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினை தொடர்பில் அமைச்சருடன் பலமுறை கலந்துரையாடியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தொடர்ச்சியாக இதே பிரச்சினையைப் பற்றிப் பேசி வரும் தானும் களைப்படைந்துள்ளதாகவும், இம்முறையாவது அமைச்சர் சாதகமான தீர்வை வழங்கக்கூடிய பதிலை முன்வைப்பார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மேலதிக கேள்விகளில் இனத்துக்காகப் போராடிய மக்கள் இன்று மேய்ச்சல் தரைக்காகப் போராடும் நிலை

தொடர்ந்து மேலதிக கேள்விகளை முன்வைத்த சாணக்கியன் இராசமாணிக்கம், தமிழினத்தின் அரசியல் மற்றும் வரலாற்றுப் போராட்டங்களை நினைவுபடுத்தி தனது கவலையை வெளிப்படுத்தினார்.

தலைவர் பிறந்த மாதத்தில், இனத்துக்காகவும் தமிழீழத்துக்காகவும் போராடிய ஒரு இனம் இன்று மேய்ச்சல் தரைக்காகப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக அவர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் வட்டமடு, முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய், திருகோணமலை மாவட்டத்தின் சின்னவில்லு, கட்டவானை, தம்பலகாமம் மற்றும் திவுலானை உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த கால்நடைப் பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை வனப் பகுதிகளுக்குள் கொண்டு செல்லும்போது அவர்களுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படுத்தப்படுவதில்லை என்றும், அவர்களுக்கு எதிராக வழக்குகளும் தாக்கல் செய்யப்படுவதில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ஆனால், தமிழ் மக்கள் தமது கால்நடைகளை அதே வனப் பகுதிகளுக்குள் கொண்டு செல்லும்போது வனஜீவராசிகள் திணைக்களத்தினால் தடைகள் ஏற்படுத்தப்படுவதாகவும், இதனால் ஒரே பகுதியில் கால்நடைகளை மேய்ப்பதற்குக் கூட வெவ்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கால்நடைகளை மேய்ப்பதற்கு 10,000 முதல் 20,000 ரூபாய் வரை பணம் கோரப்படுவதாகக் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் தமது கால்நடைகளைத் திவுலான பகுதிக்கு அழைத்துச் செல்லும்போது, ஒரு தரப்பினருக்குப் பணம் வழங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் சாணக்கியன் குற்றஞ்சாட்டினார்.

குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் கருவாச்சோலை பகுதியில் பணம் வழங்காவிட்டால் கால்நடைகளை மேய்ச்சலுக்காகக் கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும், இதற்காக 10,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை பணம் அறவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மை நிலை கண்டறியப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், ஒரு நாட்டில் ஒரே சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

“கொழும்பில் இருந்து வழங்கும் பதில்களுக்கும் கள யதார்த்தத்துக்கும் பாரிய வேறுபாடு”

அரசாங்கம் கொழும்பில் இருந்து வழங்கும் பதில்களுக்கும் வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் நடைமுறையில் காணப்படும் உண்மை நிலைமைக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுவதாகச் சாணக்கியன் தெரிவித்தார்.

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பாராளுமன்றத்தில் முன்வைக்கும்போது அரசாங்கத்திடமிருந்து பதில்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், அந்தப் பதில்கள் நடைமுறையில் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.

வடக்கு, கிழக்கு மக்களின் நிலைமைகளை வெறுமனே கொழும்பில் இருந்து கேட்டறிந்து பதிலளிப்பதற்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட அமைச்சரும் அதிகாரிகளும் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று கள நிலைமைகளைப் பார்வையிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

எமது மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் வழங்கும் பதில்களைக் கேட்டுக்கொண்டு எம்மால் அமைதியாக இருக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

எனவே, சம்பந்தப்பட்ட அமைச்சரும் அதிகாரிகளும் நேரடியாகக் கள விஜயம் செய்து மக்களின் பிரச்சினைகளைப் பார்வையிட்டு, அவற்றுக்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்க வேண்டும் எனக் கோரினார்.

அவ்வாறு மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாவிட்டால், பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக வீதியில் இறங்கிப் போராட வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதை அரசாங்கத்துக்கு எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தனது உரையில் குறிப்பிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...