Tamil Leader News
முக்கியம்
தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை முடக்கும் வகையில் அரசாங்கம் புதிய சட்டமூலங்களைக் கொண்டுவருகிறது●வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் விவசாய மற்றும் மேய்ச்சல் காணிகள் ஆக்கிரமிப்பு: அரசாங்கத்துக்கு சாணக்கியன் எச்சரிக்கை!●திருமண விளம்பரங்களில் சாதியைத் தடை செய்வது ஜனநாயகமா? ●தெற்காசியப் புகைமூட்டத்தால் இலங்கைக்கு ஏற்படும் அபாயமும் தீர்வுகளும்!●நாட்டின் தீர்மானங்களில் மக்களையும் இணைத்துக்கொள்ளுமாறு ஐ.நா பரிந்துரை!●பொலிஸ் மோப்ப நாய்க் கூண்டுகள் 2க்கு ரூ. 54 இலட்சம்: எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி!●திரிபோசா சோளத் தொகையொன்று 10 மாதங்களாக துறைமுகத்தில் முடக்கம்!●பலாங்கொடை சிசு மரணம்: மருந்து தட்டுப்பாட்டுக்கு பின்னால் உள்ள கண்ணுக்குத் தெரியாத அச்சம்!●20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளையோரிடையே HIV தொற்று அதிகரிப்பு!●தமிழர் பகுதிகளில் உணர்வுபூர்வமாகத் தொடரும் மாவீரர் தின நினைவேந்தல்; நிபந்தனைகனை மீறினால் PTA பாயுமென பொலிஸார் எச்சரிக்கை!●
செய்திகள்

தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை முடக்கும் வகையில் அரசாங்கம் புதிய சட்டமூலங்களைக் கொண்டுவருகிறது

Menaka

Menaka

நவம்பர் 26, 2026 • 8:00 PM

தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை முடக்கும் வகையில் அரசாங்கம் புதிய சட்டமூலங்களைக் கொண்டுவருகிறது

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தான் எழுப்பிய கேள்விக்கு நீதியமைச்சர் பதிலளிக்கவில்லை எனக் குறிப்பிட்ட சாணக்கியன், அவ்வாறாயின் குறித்த சட்டமூலத்தைத் தயாரித்தது யார் என்பது அமைச்சருக்குத் தெரியாதா எனவும் கேள்வி எழுப்பினார்.
  • அந்தளவுக்குப் பாரதூரமான ஏற்பாடுகளைக் கொண்டுள்ள இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதிலிருந்து அரசாங்கம் விலகிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
  • நீதித்துறையைப் பலப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு அரசாங்கம் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்ததாகக் குறிப்பிட்ட அவர், அதன் பின்னரே ஜனநாயகத்துக்கு முரணான சட்டமூலங்களை அரசாங்கம் கொண்டுவரத் தொடங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
எழுத்து அளவு:

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், அரசாங்கம் அண்மைக்காலமாகக் கொண்டுவரும் சட்டமூலங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளையும் ஜனநாயக சுதந்திரங்களையும் முடக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கடுமையாக விமர்சித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற குறித்த விவாதத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர், கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுப்பதற்கான சட்டமூல வரைவைத் தயாரித்தது யார் என்பதை நீதியமைச்சர் பாராளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தான் எழுப்பிய கேள்விக்கு நீதியமைச்சர் பதிலளிக்கவில்லை எனக் குறிப்பிட்ட சாணக்கியன், அவ்வாறாயின் குறித்த சட்டமூலத்தைத் தயாரித்தது யார் என்பது அமைச்சருக்குத் தெரியாதா எனவும் கேள்வி எழுப்பினார்.

மக்கள் பாரிய எதிர்பார்ப்புடன் இந்த அரசாங்கத்துக்கு ஆணை வழங்கியுள்ள நிலையில், அந்த ஆணையைப் பெற்றுள்ளோம் என்பதற்காக அரசாங்கம் தான்தோன்றித்தனமாகச் செயற்பட முடியாது என்றும் அவர் தெரிவித்தார். நீதித்துறை தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள பின்னணியில், மனசாட்சிக்கு அமைய உரையாற்ற முடியாத காரணத்தால் நீதியமைச்சர் நேரடியாக உரையாற்ற முடியாத நிலையில் உள்ளார் எனவும் அவர் தனது உரையில் விமர்சித்தார்.

மக்களுக்கு அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமையை முடக்கும் வகையில் அரசாங்கம் அண்மைக்காலமாகப் பல்வேறு சட்டமூலங்களைக் கொண்டுவந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பெரும்பாலான மக்களுக்கு இவ்வாறான சட்டங்களின் உண்மையான தன்மை மற்றும் அவற்றின் எதிர்கால விளைவுகள் தொடர்பில் போதிய விளக்கம் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சட்டங்கள் எதிர்காலத்தில் மிகவும் மோசமான முறையில் பயன்படுத்தப்படக்கூடிய அபாயம் உள்ளதாகவும், எதிர்காலத்தில் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பதை இப்போது தீர்மானிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

1979ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்றுவரை நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அந்தச் சட்டத்தின் மூலம் நாட்டில் பல்வேறு மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கம் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுப்பதற்கான சட்டமூலம் உள்ளிட்ட பல்வேறு சட்டமூலங்களைக் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்த சாணக்கியன், இவை நாட்டு மக்களின் அடிப்படை மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு முற்றிலும் முரணானவை எனக் குற்றஞ்சாட்டினார்.

நாட்டு மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்ற நிலையில், மக்களின் உரிமைகளைப் பாதிக்கக்கூடிய இவ்வாறான சட்டமூலங்களை ஏன் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் பாரதூரமான புதிய சட்டமூலம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதாகக் கூறிக்கொண்டு, அதைவிடவும் பாரதூரமான வகையில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை அரசாங்கம் தயாரித்துள்ளதாகச் சாணக்கியன் தெரிவித்தார்.

குறித்த சட்டமூலத்தைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவம் எனக் குறிப்பிடுவதைவிட, அதன் 'பிளஸ்' வடிவம் என்றே குறிப்பிட வேண்டும் எனவும் அவர் விமர்சித்தார்.

அண்மையில் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவில் இந்தச் சட்டமூலம் ஆராயப்பட்டபோது, தாம் முன்வைத்த பல்வேறு கேள்விகளுக்குச் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் உரிய பதில்களை வழங்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அந்தளவுக்குப் பாரதூரமான ஏற்பாடுகளைக் கொண்டுள்ள இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதிலிருந்து அரசாங்கம் விலகிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

நீதித்துறையைப் பலப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு அரசாங்கம் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்ததாகக் குறிப்பிட்ட அவர், அதன் பின்னரே ஜனநாயகத்துக்கு முரணான சட்டமூலங்களை அரசாங்கம் கொண்டுவரத் தொடங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், கடந்த கால அரசாங்கங்களைக் காட்டிலும் மோசமான சட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாகவும் அவர் தனது உரையில் குற்றஞ்சாட்டினார்.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் அரசாங்கம் பதிலளிக்கவில்லை

இதேவேளை, செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு கேள்விகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் இதுவரையில் உரிய பதில்களை வழங்கவில்லை எனவும் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள இராணுவ அதிகாரிகளுக்குச் சமீபத்தில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதுவே நாட்டின் தற்போதைய நிலைமை எனவும் விமர்சித்தார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்வதற்காகவும், நீதியைக் கோரியும் போராட்டங்களில் ஈடுபடும் உறவினர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நீதிக்காக இன்றுவரை தொடர்ச்சியாகப் போராடி வருவதாகக் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கான உரிய பொறிமுறைகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையிலும், பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் குரல் கொடுக்கும் ஒருவர் என்ற அடிப்படையிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்காகத் தாம் தொடர்ந்தும் போராடுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தனது உரையில் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...