இலங்கையில் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகளில் பரப்பளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள மாத்தளை மனிதப் புதைகுழி தொடர்பில், பதினொரு வருடங்களாக மூடப்பட்டுள்ள வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் குழுவினர் விடுத்த கோரிக்கையை மாத்தளை மேல் நீதிமன்றம் பரிசீலிக்க ஆரம்பித்துள்ளது.
மாத்தளை மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் மற்றும் வழக்கு நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரி, நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் ஒன்றியத் தலைவர் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பிரிட்டோ பெர்னாண்டோ தலைமையில் நவம்பர் 11 ஆம் திகதி முற்பகல் மாத்தளை நகரில் அமைதிப் போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டதாகப் பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நீதவான் தீர்ப்பும் மேல் நீதிமன்ற மனுவும்
மாத்தளை பொது வைத்தியசாலை வளாகத்தில் 2012 ஆம் ஆண்டின் இறுதியில் கண்டெடுக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பில், 2015 ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டுள்ள வழக்குக் கோவையை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு '88 – 89 காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் ஒன்றியம்' விடுத்த கோரிக்கையை மாத்தளை நீதவானும் மாவட்ட நீதிபதியுமான ஹர்ஷன தனுஷ்க ரத்நாயக்க 2026 ஜூலை 16 ஆம் திகதி நிராகரித்திருந்தார். முன்னைய நீதிபதியினால் வழங்கப்பட்ட தீர்ப்பை மீண்டும் அதே நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது என்பதால், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய உயர் நீதிமன்றமொன்றில் இவ்வழக்கைத் தாக்கல் செய்யுமாறு அவர் தெரிவித்திருந்தார்.
அதற்கமைய, மனுதாரர்கள் சார்பில் மேல் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி ஹிமாலி குலரத்ன, நவம்பர் 11 ஆம் திகதி மாத்தளை மேல் நீதிமன்ற நீதிபதி நளின் ஹேவாவசம் முன்னிலையில் அறிவிக்கையில், மீளாய்வு விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட 18 உறவினர்களின் பெயர்களுக்கு மேலதிகமாக, எதிர்காலத்தில் மேலும் பலரது பெயர்கள் இணைக்கப்படக்கூடும் எனத் தெரிவித்தார்.
தமது நெருங்கிய உறவுகளைக் காணாமல் கொடுத்த பாதிக்கப்பட்ட பெருமளவானோர் அன்றைய தினம் முற்பகல் மாத்தளை நகரில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்திலும் நீதிமன்ற வளாகத்திலும் கூடியிருந்ததாகப் பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
எலும்புக்கூடு அறிக்கைகள் மூன்று இருந்தும் வழக்கை முடித்து வைத்தமை குறித்த வாதம்
மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி ஹிமாலி குலரத்ன ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கருத்துத் தெரிவிக்கையில், மாத்தளை மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் மூன்று அறிக்கைகள் இருந்த போதிலும், மூன்றாவது அறிக்கையை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு 2015 ஆம் ஆண்டில் இவ்வழக்கு முடித்து வைக்கப்பட்டமை குறித்துத் தாம் மேல் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்ததாகக் குறிப்பிட்டார்.
"இலங்கையின் சட்ட வைத்திய அதிகாரி தமது அவதானத்திற்கு உள்ளான விடயங்களைச் சமர்ப்பித்துள்ளார். அடுத்ததாகத் தொல்பொருள் ஆய்வாளர் ராஜ் சோமதேவ முழுமையான அறிக்கையொன்றை வழங்கியுள்ளார். அத்துடன் 'பீட்டா அனலிட்டிக்' (Beta Analytic) எனப்படும் கார்பன் காலக்கணிப்புப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த மூன்றாவது அறிக்கையின் அடிப்படையில், 1950 ஆம் ஆண்டளவில் ஏற்பட்ட தொற்றுநோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எலும்புக்கூடுகள் இவை எனக் கூறி இவ்வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கருத்தையே ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே, மூன்று விதமான கரிசனைகள் இருக்கும் போது மூன்றாவதை மாத்திரம் கருத்திற்கொண்டு, முதலாவது மற்றும் இரண்டாவது அறிக்கைகளைக் கருத்திற்கொள்ளவில்லை என்பதே எனது பிரதான வாதமாக அமைந்தது."
2013 ஆம் ஆண்டில் மாத்தளை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள வளாகத்திலிருந்து 155 சடலங்களின் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டதன் பின்னர், அவ்வெலும்புக்கூடுகள் 1986–1990 காலப்பகுதியில் தெற்கில் நிலவிய பயங்கரவாதக் காலத்திற்கு உரியவை எனச் சட்ட வைத்திய நிபுணர் அஜித் ஜயசேனவின் அறிக்கைகளிலும், தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கைகளிலும் முடிவு செய்யப்பட்டிருந்தது.
எனினும், புளோரிடாவின் மியாமி நகரிலுள்ள 'பீட்டா அனலிட்டிக்' நிறுவனத்தினால் வெளியிடப்பட்டதாகக் கூறிப் பொலிஸாரினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையொன்றில், மாத்தளை மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் 1950 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலப்பகுதிக்கு உரியவை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
டி.என்.ஏ. (DNA) பரிசோதனைக் கோரிக்கையும் 11 வருட மௌனமும்
மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி ஹிமாலி குலரத்ன ஊடகவியலாளர்களிடம் மேலும் தெரிவிக்கையில், தாம் இதற்கு முன்னர் நீதவான் நீதிமன்றத்தில் கோரியது போன்றே, மனிதப் புதைகுழியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் டி.என்.ஏ. (DNA) பரிசோதனையொன்றை மேற்கொள்ளுமாறு மாத்தளை மேல் நீதிமன்றத்திலும் கோரிக்கை விடுத்ததாகக் குறிப்பிட்டார்.
"நீதவான் நீதிமன்றத்தில் நான் கோரியிருந்தேன், இந்த டி.என்.ஏ. (DNA) பரிசோதனைகளை விரைவாக மேற்கொள்ளாவிட்டால் அவை மாசடையக்கூடும் (Contaminate) என்று."
மனுதாரர்கள் சார்பில் மேலதிக வாய்மொழி சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக 2026 ஜனவரி 13 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு சட்டத்தரணி ஹிமாலி குலரத்னவுக்கு அவகாசம் வழங்கிய மாத்தளை மேல் நீதிமன்ற நீதிபதி நளின் ஹேவாவசம், 2015 ஆம் ஆண்டில் முடித்து வைக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோருவதற்கு இவ்வளவு காலம் மௌனமாக இருந்தது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.
"அதற்கு நான் கூறினேன், இச்சூழ்நிலைகளுக்கு ஏற்பப் பல விடயங்கள் மாறக்கூடும். இவர்களின் நிதி நிலைமை, பொருளாதாரக் கஷ்டங்கள், அடுத்ததாகத் திரும்பத் திரும்ப முறைப்பாடுகளைச் செய்தும் அவை வெற்றியளிக்காமையால் நம்பிக்கையிழந்து மனமுடைந்தமை, அத்துடன் தமது குடும்பத்திலுள்ள ஏனையவர்கள் உயிரிழந்தமை போன்ற காரணங்களால் உயிருடன் இருக்கும் ஏனையவர்களைக் கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது," என அவர் பதிலளித்தார்.
மாத்தளை மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த வழக்கு பெருமளவிலான ஆவணங்களுடன் தொடர்புடைய வழக்காக இருப்பதால், அவ்வாவணங்களின் மூலப் பிரதிகளைத் தாம் ஆராய வேண்டியது அவசியம் என மாத்தளை மேல் நீதிமன்ற நீதிபதி நளின் ஹேவாவசம் திறந்த நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
1989 பயங்கரவாதக் காலமும் சர்வதேச அறிக்கைகளும்
தற்போதைய ஆட்சியின் பிரதான கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) இரண்டாவது கிளர்ச்சியின் போது நூற்றுக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்ட மாத்தளை மாவட்டத்திற்குப் பொறுப்பான இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாகக் கோட்டாபய ராஜபக்ஷ கடமையாற்றியிருந்தார்.
1989 ஆம் ஆண்டில் அவரது கீழ் பணியாற்றிய அதிகாரிகளின் தடுப்பில் இருந்தபோது 700 இற்கும் மேற்பட்டோர் காணாமல் ஆக்கப்பட்டதாக இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு (JDS) மற்றும் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்றிட்டம் (ITJP) ஆகியன 2022 ஆம் ஆண்டில் வெளியிட்ட புலனாய்வு அறிக்கையொன்றில் நம்பகத்தன்மையுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அவ்வறிக்கையை ஆதாரமாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவொன்று 2023 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்திற்குக் கடிதமொன்றை அனுப்பி, குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஏனையோரைப் பொறுப்புக்கூறச் செய்வதற்கு அரசாங்கம் விசாரணைகளை நடத்தி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என வினவியிருந்த போதிலும், அதற்கு இதுவரை எவ்விதப் பதிலும் வழங்கப்படவில்லை.


