கிரிஷ் (Krrish) கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட பிணை உத்தரவு தற்காலிகமாக இடைநிறுத்தப்படுமா இல்லையா என்பது குறித்த தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி லால் பண்டார ரணசிங்க முன்னிலையில், bribery commission (லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு) தாக்கல் செய்த மீளாய்வு மனு (பழைய நீதிமன்றம் ஒன்றின் தீர்வை மீளாய்வு செய்யுமாறு உயர் நீதிமன்றத்திடம் கோரும் கோரிக்கை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு பிணை உத்தரவை எதிர்ப்பது ஏன்?
ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் 149 (1) பிரிவின் கீழ், ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர் வழக்கு முடியும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டும் என ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் (சட்டம்) தனுஜா பண்டார நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
கடந்த நவம்பர் 03 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் சந்தேக நபருக்குப் பிணை வழங்கியது சட்டத்திற்கு முரணானது என அவர் குறிப்பிட்டுக் காட்டினார். சந்தேக நபர் விளக்கமறியலில் இருந்தபோதே இரண்டு சாட்சிகள் எவ்வித பயமுமின்றி வந்து சாட்சியமளித்ததாகவும், நிமல் பெரேரா என்ற சாட்சி உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் அவுஸ்திரேலியாவில் வாழ்வதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சந்தேக நபரைப் பிணையில் விடுவிப்பதன் மூலம் சாட்சிகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படலாம் என்பதால், நீதவானின் பிணை உத்தரவை உடனடியாக இடைநிறுத்தும் இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றை வழங்குமாறு ஆணைக்குழு கோரியது.
குற்றஞ்சாட்டப்பட்ட தரப்பு சட்டத்தரணி எழுப்பிய கேள்விகள் என்ன?
இந்தக் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். தனது சேவைபெறுநர் ஏற்கனவே விளக்கமறியலில் இருந்த பின்னணியில், இவ்வாறான அவசர இடைக்காலத் தடை உத்தரவைக் கோருவதற்குப் பின்னால் பாரிய பிரச்சினையொன்று உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
உயர் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அமைய, வழக்கின் இறுதித் தீர்ப்பின் மூலம் வழங்கப்படும் நிவாரணம் ஒன்றைத் தற்காலிக இடைக்காலத் தடை உத்தரவாகப் பெற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி வாதாடினார்.
சந்தேக நபரின் தாயாரின் கடுமையான இருதய நோய் நிலையினை 'விசேட காரணியாகக்' கருதி நீதவான் சட்டத்தின் எல்லைக்குள் நின்று பிணை வழங்கியுள்ளதாகவும், ஆணைக்குழுவின் கோரிக்கைக்குச் சட்டரீதியான அடிப்படை இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
என்ன இந்த கிரிஷ் கொடுக்கல் வாங்கல்? (பின்னணி)
இலங்கையில் றக்பி விளையாட்டை மேம்படுத்துவதற்காக எனத் தெரிவித்து இந்தியாவின் 'கிரிஷ்' (Krrish) நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டு குற்றவியல் நம்பிக்கையை மீறியதாக நாமல் ராஜபக்ச மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் யாவை?
இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி, இடைக்காலத் தடை உத்தரவு குறித்த தீர்ப்பினை நவம்பர் 18 ஆம் திகதி அறிவிக்கத் தீர்மானித்தார்.
லஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் மீளாய்வு மனுவை முழுமையாக நிராகரிக்குமாறு விடுத்த கோரிக்கையை ஆராய்வதற்காக வழக்கு நவம்பர் 25 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படவுள்ளது.


