காட்டு யானை ஒன்றோ அல்லது கூட்டமோ கிராமத்திற்குள் புகும்போது அவற்றை விரட்டுவதற்காக பெரும்பாலான மக்கள் முதற்கட்டமாகச் செய்வது கத்துவது, பல்வேறு சத்தங்களை எழுப்புவது, வெடிகளைக் கொளுத்துவது அல்லது வேறு வழிகளில் பயமுறுத்துவதாகும்.
காட்டு மிருகங்கள் மனிதனின் வாசனைக்கும் குரலுக்கும் மிகவும் உணர்திறன் கொண்டவை என்பதால், அவை தெரிந்தவுடன் பயந்து ஓடிவிடும் என்ற நம்பிக்கையே இத்தகைய நடவடிக்கைகளின் பின்னணியில் உள்ளது.
எனினும், மிருகங்களின் நடத்தை பற்றிய நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் இது குறித்து நாம் பொதுவாகச் சிந்திக்காத ஒரு பக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளன.
இருப்பினும், காட்டு மிருகங்களால் மனித வாசனை மற்றும் குரலை அடையாளம் காண முடிவது மட்டுமன்றி, அவற்றுடன் ஏற்படும் அனுபவங்களுக்கு ஏற்பத் தமது எதிரீடுகளை மாற்றிக்கொள்ளவும் முடியும் என்பதை இன்று பலரும் அறிந்திருக்கவில்லை.
சில மிருகங்கள் பழகிய மற்றும் பழகாத மனிதக் குரல்களுக்கு இடையிலான வேறுபாட்டை அடையாளம் காண்கின்றன. ஆனால், அதற்காக அவை மனிதனுக்குப் பயப்படவில்லை என்றோ அல்லது மனிதன் மீது நம்பிக்கை கொள்கின்றன என்றோ அர்த்தமாகாது.
பழைய கிராமவாசிகளின் 'பண்பாகப் பேசுதல்' முறை

இந்த விவாதம் யானை-மனித மோதல் போன்ற கடுமையான சமூக மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினையை வேறு கோணத்தில் பார்ப்பதற்கும் வழிவகுக்கிறது. யானை-மனித மோதல் இன்றைப்போல் தீவிரமடையாத கடந்த காலத்தில், எப்போதாவது கிராமத்திற்குள் புகும் காட்டு யானைகள் தொடர்பாக தற்போதைய அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களைச் சேர்ந்த நுவர கலாவிய மற்றும் ஹத்கோரள கிராமவாசிகள் சிலர் மிகவும் அமைதியான முறையைப் பின்பற்றினர். அவர்கள் அதனை ‘குணென் கீம’ (பண்பாகப் பேசுதல்) எனக் குறிப்பிட்டனர்.
சுருக்கமாகக் கூறின், காட்டு யானைகளின் முன்னிலையில் புத்த பெருமானின் குணங்களை நினைவுகூர்ந்து, தெய்வங்களிடம் பிரார்த்தனை செய்து, அவை மீண்டும் காட்டிற்குச் செல்லுமாறு இறைஞ்சுவதாகும்.
"அன்புக் குழந்தைகளே, எமது குழந்தைகளின் பசியைப் போக்குவதற்காக நாம் பயிரிட்ட சிறிய விளைச்சலை விட்டுவிட்டு, ஐயநாயக்க, தகனக பண்டார தெய்வங்கள் உங்களுக்கு உரித்தாக்கிய பெரிய காடுகளுக்குள் சென்று அங்குள்ளவற்றை உண்டு பருகிப் பசியைத் தீர்த்துக்கொள்ளுங்கள். நாம் சேனைப் பயிர்செய்கை அல்லது வயல் செய்தாலும் உங்கள் பெரிய காட்டை உடைத்துக்கொண்டு வரமாட்டோம். உங்களுக்கு ஸ்ரீ மகா போதியின் அருள் கிட்டட்டும்"
எனப் பிரார்த்தனை செய்வது அக்காலத்தில் சாதாரண ஒன்றாக இருந்தது. மேலும், இப் பகுதி கிராமவாசிகள் யானைகளை ராஜாக்களைப் போல் கருதியதுடன், அவைகளை "யானை அரசர்களே" என்ற கௌரவமான வார்த்தையினாலும் அழைத்துப் பழகியிருந்தனர்.
வன்முறைக்குப் பதிலாக அமைதியான அணுகுமுறை
இத்தகைய உருக்கமான வேண்டுகோள்களுக்கு மத்தியில் காட்டு யானைகள் அமைதியாகப் பின்வாங்கிச் சென்ற நினைவுகள் இன்றளவும் அப் பகுதிகளின் பழைய கிராமவாசிகளிடம் உள்ளன.
ஆனால் இப் பழக்கவழக்கங்கள் நாட்டுப்புறவியல் மற்றும் கலாசாரப் பெறுமதி கொண்டவையாக இருந்தபோதிலும், அவற்றின் மூலம் காட்டு யானைகள் புத்த குணங்களையோ அல்லது மனித மொழியையோ புரிந்துகொண்டன என அறிவியல்பூர்வமாக முடிவு செய்ய முடியாது. எனினும், அந்தப் பழைய முறையிலிருந்து வெளிப்படும் ஒரு முக்கியமான சமூகச் செய்தி உள்ளது. அதாவது, ஒரு காட்டு மிருகத்துடன் மோதல் ஏற்படும் போது வன்முறைக்குப் பதிலாக அமைதியான மற்றும் நிதானமான அணுகுமுறையையும் பின்பற்ற முடியும் என்பதாகும். இத்தகைய மனித நடத்தைகளே மனிதவியல் பாடப்பரப்புடன் தொடர்பு பெறுகின்றன.
விலங்கியலில் 'பழக்கப்படுதல்' (Habituation) எனப்படுவது, ஒரு உயிரினத்திற்கு மீண்டும் மீண்டும் கிடைக்கப்பெறும், ஆனால் ஆபத்தில்லாத ஒரு தூண்டலுக்குக் காலப்போக்கில் காட்டும் எதிரீடு குறையும் செயல்முறையாகும்.
மிருகங்கள் மனித வாசனைக்குப் பழகும் விதம்

உதாரணமாக, முதன்முறையாக ஒரு மனிதனைக் காணும்போது பயந்து ஓடும் ஒரு மிருகத்திற்குத் தொடர்ச்சியாக மனிதர்கள் தென்பட்டாலும் அவர்களால் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லையெனில், காலப்போக்கில் அந்த மனித உருவத்தின் மீது காட்டும் பயம் குறையக்கூடும். அதேபோல் அடிக்கடி கேட்கும் மனிதக் குரலுக்கோ அல்லது அடிக்கடி உணரும் மனித வாசனைக்கோ மிருகங்களின் எதிரீடு முற்றாக மாறுபடக்கூடும்.
எனினும், பழகிப்போவது என்பது மிருகத்தின் அனைத்துப் பயமும் இல்லாது போவது என்றாகாது. மேலும் மனித வாசனையை அடையாளம் காண்பது, மனிதக் குரலை அடையாளம் காண்பது மற்றும் அந்தச் சமிக்ஞைகளுக்குப் பழகிப்போவது என்பன ஒன்றுக்கொன்று வேறுபட்ட செயல்முறைகளாகும். அனைத்து மிருக இனங்களும் ஒரே விதமாகவோ அல்லது ஒரே வேகத்திலோ இம் மாற்றங்களுக்கு உட்படுவதில்லை. அது மிருகத்தின் இனம், வயது, சூழல், கடந்தகால அனுபவங்கள் மற்றும் மனிதனுடன் உள்ள தொடர்பு என்பவற்றைப் பொறுத்து மாறுபடும்.
மிருகங்களின் "மோப்ப சக்தி" (Sense of Smell) பற்றி ஆராயும்போது, சில மிருகங்களுக்கு மனிதனை விட மிகவும் வளர்ந்த வாசனையை அடையாளம் காணும் ஆற்றல் இருப்பது தெரியவருகிறது. யானைகள், கரடிகள், ஓநாய்கள், நரிகள் மற்றும் மான்கள் போன்ற பாலூட்டி மிருகங்களால் வாசனை மூலம் சூழலின் மாற்றங்களை அடையாளம் காண முடியும். மனிதன் பயணித்த பாதையில் எஞ்சியிருக்கும் வாசனை, உடலிலிருந்து வெளியேறும் இரசாயனச் சேர்வைகள் மற்றும் ஆடைகளில் தங்கியிருக்கும் வாசனை போன்ற சமிக்ஞைகளையும் சில மிருகங்களால் அடையாளம் காண முடியும்.
எனினும் வாசனையை அடையாளம் காண்பது என்பது அதற்குப் பயப்படுவது என்றாகாது. மனித வாசனை அடிக்கடி உணர்ந்தாலும் அதனுடன் ஆபத்து எதுவும் தொடர்படவில்லை என்பது மிருகத்தின் அனுபவத்தில் உறுதிப்படுத்தப்பட்டால், அவை அந்த வாசனைக்குக் காட்டும் பயம் குறையக்கூடும். இதிலிருந்து மனித வாசனையை மிருகங்களால் அடையாளம் காண முடிவதற்கும், அந்த வாசனைக்கு முன் அவை ஓடுவதற்கும் இடையே கட்டாயத் தொடர்பு இல்லை என்பது தெளிவாகிறது.

மனிதக் குரலை வேறுபடுத்தி அடையாளம் காணும் யானைகள்
மிருகங்களால் மனிதக் குரலை அடையாளம் காண முடியுமா என்பது விஞ்ஞானிகளின் விசேட அவதானத்திற்குரிய தலைப்பாகும். Behavioral Processes என்பது மிருகங்களின் நடத்தை (Animal Behavior) பற்றிய உயர்தர ஆராய்ச்சிகளை வெளியிடும் முன்னணி சர்வதேச அறிவியல் இதழாகும். 1976 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இதழ் பிரபல Elsevier பதிப்பகத்தினால் மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. 2026 ஜூன் மாதத்தில் Behavioral Processes அறிவியல் இதழில் வெளியான ஆசிய யானைகள் பற்றிய ஆராய்ச்சி இங்கு குறிப்பாக முக்கியத்துவம் பெறுகிறது.
அந்த ஆய்வின் மூலம் யானைகளால் பழகிய மனிதக் குரலுக்கும் பழகாத மனிதக் குரலுக்கும் இடையிலான வேறுபாட்டை அடையாளம் காண முடியும் என வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, யானைகளிடம் பேசும் பாணியிலான பேச்சுக்கும் (Elephant-directed Speech) சாதாரண முதிய மனிதர்களுக்கு இடையிலான பேச்சுக்கும் (Adult-directed Speech) இடையிலான வேறுபாட்டையும் அவை பிரித்தறிகின்றன என அந்த ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இங்கு பழகிய பராமரிப்பாளர்களின் குரல் கேட்கும்போது யானைகள் அந்தச் சத்தம் வந்த திசையை நோக்கித் திரும்பி அவர்களைத் தேட முயற்சிப்பது அவதானிக்கப்பட்டது. குறிப்பாக யானைகளிடம் பேசும் பாணியிலான பேச்சின் போது அந்தத் தேடல் நடத்தை அதிகமாக இருந்தது.
ஆனால் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விடயம் உள்ளது. மனிதக் குரலைக் கேட்பதால் யானைகளின் அவதானம், விழிப்புணர்வு மற்றும் கிளர்ச்சி அதிகரிப்பது எப்போதும் அவற்றின் பயம் குறைவதாகப் பொருள் கொள்ள முடியாது. இந்த ஆராய்ச்சி பிரான்ஸிலுள்ள இரண்டு மிருகக்காட்சிசாலைகளில் இருந்த ஆசிய யானைகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டது. எனவே அதன் முடிவுகளை அனைத்துக் காட்டு யானைகளுக்கும் ஒரே மாதிரியாகப் பயன்படுத்த முடியாது. எனினும் யானைகளுக்கு மனிதக் குரலின் பரிச்சயத்தை அடையாளம் காணும் ஆற்றல் உள்ளது என்பதற்கு அதுவொரு முக்கியமான சான்றாகும்.
சத்தமிட்டுப் பயமுறுத்துவதால் ஏற்படும் ஆபத்து
காட்டு யானை ஒன்று கிராமத்திற்குள் வரும்போது அதனைப் பயமுறுத்துவதற்காகக் கத்துவது, வெடிகளைக் கொளுத்துவது மற்றும் பல்வேறு சத்தங்களை எழுப்புவது போன்ற நடவடிக்கைகள் சில சந்தர்ப்பங்களில் உடனடியாகப் பலனளிக்கக்கூடும். எனினும் இத்தகைய முறைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் யானைகள் அவற்றுக்குப் பழகிப்போகும் சாத்தியமும் உள்ளது. அதன் பின்னர் அவை அந்தச் சத்தங்களைப் பொருட்படுத்த மாட்டா.
ஒரு மிருகத்திற்கு அடிக்கடி கிடைக்கப்பெறும் ஒரு சத்தம் அல்லது தூண்டல் ஆபத்தை ஏற்படுத்தாது என்பது அனுபவத்தால் உறுதிப்படுத்தப்பட்டால், காலப்போக்கில் அதன்பால் காட்டும் எதிரீடு குறையக்கூடும். எனவே ஆரம்பத்தில் யானையை விரட்ட முடிநத ஒரு சத்தம் பின்னர் அவ்வளவு பலனளிக்காமல் போக இடமுண்டு. மறுபுறம், அதிக சத்தத்தினால் பயமடையும் யானை ஒன்று ஒழுங்கற்ற முறையில் ஓடுவதனால் மனிதர்களுக்கும் வீடுகளுக்கும் அத்துடன் தனக்கும் விபத்துக்களை ஏற்படுத்திக்கொள்ளக்கூடும். குறிப்பாகக் குட்டிகளுடன் இருக்கும் பெண் யானை அல்லது காயமடைந்த யானையின் நடத்தை எதிர்பாராத ஒன்றாக அமையலாம்.
எனவே காட்டு யானை கிராமத்திற்குள் புகும்போது அதனைச் சூழ்ந்துகொண்டு கத்துவது, அருகில் செல்வது, பின்தொடர்வது அல்லது தாமாகவே விரட்ட முயற்சிப்பது பொருத்தமானதல்ல. பாதுகாப்பான இடைவெளியைப் பேணிக்கொண்டு வனஜீவராசிகள் அதிகாரிகளின் ஆலோசனையின்படி செயற்படுவது முக்கியமாகும். ஆனால் வனஜீவராசிகள் அதிகாரிகளிடமிருந்து அதற்குச் சரியான ஆலோசனைகள் கிடைப்பதில்லை எனச் சிலர் கூறுகின்றனர். மேலும் சிலர் கூறுவது யாதெனில், சில வனஜீவராசிகள் அதிகாரிகள் அப் பாடம் குறித்து எதுவும் அறியாத அரசியல்வாதிகளின் பகடைக்காய்களாக மாறியுள்ளனர் என்பதாகும்.
யானை-மனித மோதலுக்கு நிலையான தீர்வுகள்
அதேவேளை காட்டு யானைகள் மனிதக் குடியிருப்புகளுக்குள் வரும்போது அவற்றின் நடத்தையை மட்டுமன்றி, அதற்குப் பங்களிக்கும் சுற்றுச்சூழல் மற்றும் மனிதக் காரணிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
யானைகளின் புலம்பெயர் பாதைகள் அடைக்கப்படுதல், காட்டு வாழிடங்கள் துண்டாடப்படுதல், மனிதக் குடியிருப்புகள் விரிவடைதல் மற்றும் பயிர்நிலங்கள் காடுகளுக்கு அருகில் பரவுதல் போன்ற காரணிகள் யானை-மனித மோதலைத் தீவிரப்படுத்தப் பங்களிக்கின்றன. எனவே யானைகள் கிராமங்களுக்குள் புகுவதைத் தடுப்பதற்கு அவற்றின் இயற்கைச் வழித்தடங்களைப் பாதுகாத்தல், வாழிடங்கள் துண்டாடப்படுவதைக் குறைத்தல், மின்சார வேலிகளைச் சரியாகப் பராமரித்தல் மற்றும் காட்டிற்குள் போதிய உணவு மற்றும் நீர் வளங்கள் உள்ள சூழலைப் பேணுதல் போன்ற நீண்டகாலத் தீர்வுகள் அவசியமாகின்றன. அதேபோல் கிராமத்திற்குள் புகுந்த யானையை விரட்டும்போது முறைசாரா வகையில் பொதுமக்கள் தலையிடுவதற்குப் பதிலாக, முறைசார் அதிகாரிகளின் வழிகாட்டலைப் பெறுவதும் அத்தியாவசியமாகும்.
மிருக உலகம் குறித்து நடத்தப்பட்டுள்ள அறிவியல் ஆராய்ச்சிகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் மிக முக்கியமான பாடம் யாதெனில், மிருகங்கள் மனிதர்களைப் பற்றி எதுவும் அறியாத, வெறும் இயல்பூக்கத்தினால் மட்டுமே இயங்கும் உயிரினங்கள் அல்ல என்பதாகும். அவற்றுக்குச் சூழலை அவதானிக்கவும், பல்வேறு சமிக்ஞைகளை அடையாளம் காணவும், அனுபவங்களின் அடிப்படையில் நடத்தைகளை மாற்றிக்கொள்ளவும் வியக்கத்தக்க ஆற்றல் உள்ளது. சில மிருகங்களால் பழகிய மனிதக் குரலை அடையாளம் காண முடியும் என்பதுடன், வேறு சில மிருகங்களால் மனித வாசனைக்கும் மனிதச் செயல்பாடுகளுக்கும் இடையிலான தொடர்பை அடையாளம் காண முடியும்.
அமைதியான மனப்பான்மையும் அறிவியல்பூர்வக் கண்ணோட்டமும்
எனினும் மிருகங்கள் மனிதனுக்குப் பழகிப்போவது என்பது அவை மனிதனை நேசிப்பது என்றோ அல்லது அவனால் ஆபத்து இல்லை என நம்புவது என்றோ அர்த்தமாகாது. அது பெரும்பாலும் அனுபவங்களின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படும் நடத்தை மாற்றமாகும். எனவே காட்டு மிருகங்களைப் பாதுகாக்கும் போது அவைகளை மனிதனுக்குப் பழக்குவதை விடவும், அவைகளின் இயற்கை வாழ்க்கை முறையைப் பேணிச் செல்வதற்குத் தேவையான சூழலை அமைத்துக் கொடுப்பதே மிகவும் முக்கியமானது.
நமது முன்னோர்கள் காட்டு யானையின் முன்னிலையில் 'பண்பாகப் பேசுதலைப்' பின்பற்றியது வன்முறையை விடவும் அமைதியான முறைமைக்கு முதலிடம் வழங்கி என்பதாகும். நவீன அறிவியலும் நமக்குக் கற்றுத்தருவது மிருகங்களின் நடத்தை பற்றிய புரிதலுடன், பொறுமையுடனும் பொறுப்புடனும் செயற்படுவதன் முக்கியத்துவத்தையாகும். மனிதன் காட்டு மிருகங்களை அடையாளம் காணக் கற்றுக்கொள்ளும் அளவிற்கு காட்டு மிருகங்களும் மனிதனை அடையாளம் காணக் கற்றுக்கொள்கின்றன. ஆனால் அந்த அடையாளம் காணல் நம்பிக்கையாக மாறுவதா அல்லது பயமாக மாறுவதா என்பதைத் தீர்மானிப்பதற்கு மனிதனின் நடத்தையே பிரதான காரணியாகும்.
அதற்கமைய காட்டு யானை ஒன்று கிராமத்திற்குள் வரும்போது அதனை விரட்டுவது என்பது வெறும் சத்தமிடுவதனாலோ அல்லது பயமுறுத்துவதனாலோ தீர்த்துக்கொள்ளப்படக் கூடிய எளிய பணியல்ல. அதற்கு யானையின் நடத்தை முறை, கடந்தகால அனுபவங்கள், சூழல் மற்றும் மனிதனின் தலையீடு ஆகிய அனைத்தையும் பற்றிய புரிதல் அவசியமாகும். சில வேளைகளில் நமது முன்னோர்களின் 'பண்பாகப் பேசுதல்' என்பதிலிருந்து வெளிப்படும் அமைதியான மனப்பான்மையையும், நவீன விலங்கியல் மூலம் வெளிப்படும் நடத்தைப் புரிதலையும் ஒன்றாக இணைத்துப் பார்ப்பதன் மூலம் இம் மோதல் குறித்த விரிவான புரிதலைப் பெற்றுக்கொள்ள முடியும்.


