பொதுமக்களைப் பயங்கரவாதிகளாக்கும் PTA, PSTA மற்றும் OCA ஆகிய சட்டமூலங்களை உடனடியாக அமுலிலிருந்து நீக்குமாறு வலியுறுத்தி, 'ஜன அரகலய வியாபாரய' அமைப்பு நாளை பாராளுமன்றத்திற்கு முன்னால் பிரம்மாண்ட போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகிறது.
பொதுமக்களைப் பயங்கரவாதிகளாக்கும் PTA, PSTA, OCA ஆகிய அடக்குமுறைச் சட்டங்களை அமுலிலிருந்து நீக்குமாறு வலியுறுத்தி நாளை (நவம்பர் 4) பாராளுமன்றத்திற்கு அருகில் நடாத்தப்படவுள்ள பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் குறித்துத் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று (03.11.2026) பிற்பகல் 1.00 மணிக்கு நுகேகொடை நகரில் 'ஜன அரகலய வியாபாரய' அமைப்பினால் கூட்டியழைக்கப்பட்டது.
அங்கு கருத்து வெளியிட்ட ஜன அரகலய வியாபார அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகே:
"மக்கள் எதிர்ப்பிற்கு முன்னால் அரசாங்கம் பின்வாங்கிய போதிலும் போராட்டம் இன்னும் முடியடையவில்லை."
"தற்போது அரசாங்கமானது 'பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் சட்டமூலம்' (PSTA) மற்றும் 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம்' (OCA) ஆகிய அடக்குமுறைச் சட்டமூலங்கள் இரண்டையும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ள ஆயத்தமாகவுள்ளது. ஆரம்பத்தில் அரசாங்கமானது தனது தன்னிச்சையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி, இந் நவம்பர் மாதம் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் PSTA சட்டமூலத்தைப் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்து நிறைவேற்றவே திட்டமிட்டிருந்தது.
எனினும் அதற்குத் தொடுக்கப்பட்ட கடுமையான சமூக எதிர்ப்பை அடுத்து, தற்போது இச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதைத் தற்காலிகமாகப் பின்போடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கம் ஒரு சில அளவேனும் மக்களின் கருத்திற்குச் செவிசாய்க்க நினைத்தது நல்லதென நாங்கள் கருதுகிறோம். ஆனால் PSTA சட்டமூலத்தைப் போலவே PTA சட்டத்தையும் திரும்பப் பெறுமாறு நாங்கள் அரசாங்கத்திற்குக் கூறினோம். அதேபோன்று OCA சட்டமூலமும் திரும்பப் பெறப்பட வேண்டும்.
இச் சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டால் மக்கள் வாய் திறக்கக்கூடிய ஒரே சந்தர்ப்பம் உண்பதற்கும் கொட்டாவி விடுவதற்கும் மாத்திரமேயாகும் என்பதை நாம் அறிவோம். இந் நாட்டின் மக்கள் 2022 ஆம் ஆண்டில் பிரம்மாண்ட போராட்டமொன்றை முன்னெடுத்தனர். அது, நாட்டின் மக்கள் சொத்துக்களைக் கொள்ளையடித்துப் பொருளாதாரத்தைக் கொலை செய்த அரசியல் கும்பல்களுக்கு எதிராகவே நடத்தப்பட்டது. அப் போராட்டத்திற்குப் பின்னரே தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திடம் நாட்டின் ஆட்சியை ஒப்படைக்க மக்கள் தீர்மானித்தனர். தற்போது அப் போராட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவந்து தனக்கு வாக்களித்த மக்களின் வாயை மூட ஆயத்தமாகிறது."
"வரிகளைச் சுமத்தி மக்களைக் கொல்லும் வேளையில் கைக்கூலிகளுக்குச் சலுகைகள்"
"அரசாங்கம் பயணிக்கும் IMF அடிப்படையிலான பொருளாதார நிபந்தனைகளுடன் இந்நாட்டின் மக்களின் தோள்கள் மீது பிரம்மாண்டமான வரிச்சுமை சுமத்தப்பட்டுள்ளது. இளைஞர்களுக்குத் தமது மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளுக்குச் சிறிதளவு எரிபொருளை நிரப்ப வழியில்லை. வைத்தியசாலைக்குச் சென்றால் மருந்துகளில்லை. பிள்ளைகளின் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள வழியில்லை. பெண்களின் சுகாதாரப் பொருட்களுக்குக் கூடப் பாரிய வரி விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சாதாரண மக்கள் மீது வரிச்சுமையைச் சுமத்தும் அதேவேளை, டட்லி சிரிசேன உள்ளிட்ட கைக்கூலிகளுக்கு அரசாங்கம் அனைத்துச் சலுகைகளையும் வழங்குகிறது. இத்தகைய சூழ்நிலைக்குள் நாட்டின் மக்களுக்கு வீதிக்கு இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை. அதனை அறிந்துகொண்டமையினாலேயே மீண்டும் 2022 போன்றதொரு போராட்டம் வருவதைத் தடுப்பதற்காக அரசாங்கம் மக்களின் வாய்க்கு வேலி போடும் அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவருகிறது."
"அன்று அடக்குமுறையை எதிர்கொண்ட JVP இன்று மக்களைப் பயங்கரவாதிகளாக்குகிறது"
"அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது எவ்வாறு நடந்துகொண்டது என்பதை நாம் அறிவோம். அடக்குமுறைக்கு எதிராகப் போராட்டங்கள், பேரணிகளை நடாத்தியது. தொழிலாளர் உரிமைகள், இலவசக் கல்வி உரிமை குறித்து மேடைகள் அதிரப் பேசினார்கள். இப்போது அவை அனைத்தையும் அரசாங்கம் மறந்துவிட்டது. ஹோமாகம வாலிபர் பொலிஸ் கூண்டிற்குள் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட போது அரசாங்கம் மௌனம் காத்தது. கடவத்தையில் பொலிஸார் முச்சக்கர வண்டியொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போது அரசாங்கம் அமைதி காத்தது. அமைதியாக இருப்பது போதாதென்று, இவ்வாறு அப்பட்டமாகக் கொலை செய்யும் பொலிஸாருக்கு மேலும் அதிகாரங்களை வழங்கும் சட்டமூலத்தை நிறைவேற்ற அரசாங்கம் ஆயத்தமாகிறது.
சாதாரணமாகப் பொலிஸாரால் 24 மணிநேரம் தடுத்து வைக்க முடிந்த சட்டமானது, இச் சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டால் 72 மணிநேரம் வரை நீடிக்கப்படும். அதேபோன்று பொலிஸாரால் முதுகெலும்பு உடையும் வரை அடித்துப் பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலம் இச் சட்டமூலங்கள் ஊடாக நீதிமன்றில் சட்டபூர்வ சாட்சியமாக மாறும். PTA காரணமாக அன்று ஜனதா விமுக்தி பெரமுன (JVP) இத்தகைய அடக்குமுறையை அனுபவித்தது. பொலிஸ் காவலில் இருந்தபோதே அன்று JVP இன் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பலவந்தமாகப் பெறப்பட்ட வாக்குமூலங்களால் பாதிக்கப்பட்டவர்கள் JVP இல் இன்றைக்கும் இருக்கிறார்கள். அத்தகையதொரு அரசியல் இயக்கம் இன்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்து, நாட்டின் மக்களைப் பயங்கரவாதிகளாக்கி அவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிக்க முனைவது ஒரு பெரும் சோகமாகும்."
"நாளை நண்பகல் 12 மணிக்கு பாராளுமன்றச் சுற்றவளைவிற்கு வாருங்கள்"
"இந்தச் சோகத்தை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்க நம்மால் முடியாது. PTA, PSTA, OCA ஆகிய மக்கள் விரோத அடக்குமுறைச் சட்டமூலங்களை அரசாங்கம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனக் கூறுகிறோம். அந்த அழுத்தத்தை அரசாங்கத்திற்கு வழங்குவதற்காக நாளை நவம்பர் 4 ஆம் திகதி நாம் பாராளுமன்றத்திற்கு அருகில் வருகிறோம். இந்நாட்டின் தொழிற்சங்கங்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட ஜனநாயகத்தை நேசிக்கும் அனைத்து மக்களும் நாளை பாராளுமன்றத்திற்கு அருகில் திரள்வர். அடக்குமுறைச் சட்டங்களை அமுலிலிருந்து நீக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே இவர்கள் வருகிறார்கள்.
அந்தப் போராட்டத்தில் இணைந்துகொள்வதற்காக நாளை நண்பகல் 12.00 மணிக்கு பாராளுமன்றச் சுற்றவளைவிற்கு வருமாறு நாட்டின் அனைத்து மக்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கிறோம். ஏனெனில் இன்று நாம் இந்த ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தால், நாளைய தினத்தில் நாட்டின் மக்களின் சுதந்திரமே பறிபோய்விடும். வரிச்சுமைக்கு எதிராக வாய் திறக்க முடியாத, மக்கள் சொத்தைக் கொள்ளையடிக்கும் திருடர்களுக்கு எதிராகக் குரலெழுப்ப முடியாத ஒரு நாடே இவ்வாறாகச் சென்றால் உருவாகும். அதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லை. அதனால் 'ஜன அரகலய வியாபாரய' என்ற ரீதியில் இந்த அடக்குமுறைச் சட்டங்கள் நீக்கப்படும் வரை போராட நாம் தயார் என்ற செய்தியை இத்தருணத்தில் அரசாங்கத்திற்குத் அறியத்தருகிறோம்."
மேலதிகத் தகவல் மூல இணைப்புகள்:


