பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புகளைக் கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் கைதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியங்களாக முன்வைக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்கள், வலுக்கட்டாயமாக பெறப்பட்டமைக் குறித்து பொலிஸ் மாஅதிபரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள், தமது குற்றங்கள் தொடர்பில் அளித்த அறிக்கைகளின் உண்மைத் தன்மைத் தொடர்பில் எவ்வாறு உறுதிப்படுத்திக்கொள்ள முடியுமென இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு, பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.சி. விக்ரமரத்னவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.

கைதிகள் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க கட்டாயப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஆணைக்குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

"சிங்களத்தில் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட அறிக்கைகளில் கையெழுத்திட பல முறை பொலிஸ் தலைமையகத்திற்குச் செல்ல வேண்டிய நிலைமை, அறிக்கையில் கையெழுத்திட்டால் விடுதலை செய்வதாக உறுதியளித்தல், கையெழுத்திடாவிட்டால் தவறான குற்றச்சாட்டுகளை பதிவு வழக்குத் தாக்கல் செய்வதாக அச்சுறுத்தல் விடுத்தமை ஆகியவை இதில் அடங்கும்" என மனித உரிமைகள் ஆணையாளர் ரமணி முத்தெட்டுவேகம கடந்த 24ஆம் திகதி பொலிஸ் மாஅதிபருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து சித்திரவதை செய்தல் மற்றும் புரிந்துகொள்ள முடியாத சிங்களத்தில் ஒரு அறிக்கை அல்லது வெற்று தாளில் கையெழுத்தை பெற்றுக்கொள்வது குறித்து ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட மனித உரிமைக் குழுக்கள் பலமுறை நம்பகமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன.

மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் மாஅதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய கைதிகள் "வாக்குமூலம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" என பொலிஸ் ஒப்புக் கொண்டுள்ளது.

"உங்களுக்கு தெரிந்த வகையில், சான்றுகள் கட்டளைச் சட்டத்தின் 24ஆவது பிரிவின் கீழ் தானாக முன்வந்து சமர்ப்பிப்பதன் அடிப்படையில் மாத்திரமே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அறிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியும்" என மனித உரிமைகள் ஆணையாளர் நினைவுபடுத்தியுள்ளார்.

இதற்கமைய, பொலிஸாருக்கு அளிக்கப்பட்ட அறிக்கைகளின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை அறிவிக்குமாறும், மனித உரிமைகள் ஆணையாளர் ரமணி முத்தெட்டுவேகம பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி