leader eng

"செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் மூலம் இனப்படுகொலை செயல்கள் மட்டுமல்ல, இனப்படுகொலை நோக்கத்திற்கான சான்றுகளும்

பெருகி வருகின்றன. இந்த சூழலில், மியான்மார் வழக்கைப் போலவே விசாரணைகளை அமைப்பதற்காக இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதை தீவிரமாக பரிசீலிக்குமாறு உறுப்பு நாடுகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று, 

இலங்கை தமிழரசுக் கட்சியினால் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் உறுப்பு நாடுகளின் தூதரகத் தலைவர்களுக்கு அறிக்கை ஒன்றை முன்வைத்தனர். 

அவையாவது, 

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் உறுப்பு நாடுகளின் தூதரகத் தலைவர்கள், ஜெனீவா. 

மேன்மைதங்கியவர்களே, 

இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் - HRC 57/1 இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் தொடர்பாக செப்டம்பர் 2024 இல் 57 வது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மேற்படி 57/1 தீர்மானத்தின் காலம் செப்டம்பர் 2025 இல் 60 ஆவது அமர்வோடு முடிவடைகின்றது. 

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு என்ற இரண்டு மாகாணங்களில் உள்ள ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட - தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற - முதன்மை அரசியல் கட்சி நாங்கள்தாம். 

(1949 இல் தொடங்கப்பட்டதிலிருந்து சமஷ்டிக் கட்சி என்று நம் கட்சி அழைக்கப்படுகிறது). அந்த வகையில் எங்கள் மக்களின் சில தீவிரமான கவலைகளை உங்கள் முன் வைப்பது எங்கள் கடமையாகக் கருதுகிறோம். வரலாற்று ரீதியாக நாட்டின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் நிலை கொண்டு தமிழ் மக்கள் இலங்கையில் முற்காலத்திலிருந்தே வாழ்ந்து வருகின்றனர், நாங்கள் எங்களுடைய சொந்த மொழி மற்றும் கலாச்சாரத்தைக் கொண்ட வேறுபட்ட மற்றும் தனித்துவமான மக்கள். 

பெரும்பான்மையான தமிழ் மக்கள் இந்துக்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள். அதே நேரத்தில் சிங்களவர்கள் பெரும்பாலும் பௌத்தர்கள். ஐரோப்பியர்கள் இந்தத் தீவை வெற்றிகொள்ள முன்பு இந்த தீவில் மூன்று ராஜ்ஜியங்கள் இருந்தன, அவற்றில் ஒன்று வடகிழக்கில் உள்ள தமிழ் ராஜ்ஜியம். பிரிட்டனிடமிருந்து (1833 இல் நிர்வாக வசதிக்காக மூன்று அலகுகளையும் இணைத்த பிரிட்டனிடமிருந்து) சுதந்திரம் பெற்ற நேரத்தில், ஒரு எளிய பெரும்பான்மை வகை அரசமைப்பு இங்கு இயற்றப்பட்டது. 

பின்னர் ஓர் அரசமைப்பால் அது மாற்றப்பட்டது. அது இலங்கையை ஓர் 'ஒற்றையாட்சி நாடாக' அங்கீகரித்து. பௌத்தத்திற்கு 'முதன்மை இடம்'வழங்கியது. 

மேலும் அது அரசமைப்பு ரீதியாக சிங்களத்தை மட்டுமே அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரித்தது. இவை மற்றும் அவ்வப்போது தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பிற பாகுபாடுகள் மற்றும் வன்முறைகள், காலனித்துவ சக்திகளிடம் இழந்த நமது இறையாண்மையை மீட்டெடுக்கக் கோருவதற்கு 1976 இல் எங்களைத் தூண்டின. இந்தக் கோரிக்கை பின்னர் அந்த நோக்கத்தை அடைவதற்கான ஆயுதப் போராட்டத்திற்கு வழிவகுத்தது. 

இருப்பினும், அந்த ஆயுதப் போராட்டம் பாதுகாப்புப் படைகளால் இழைக்கப்பட்ட கடுமையான போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் பிற சர்வதேச குற்றங்களுடன் 2009 இல் ஒடுக்கப்பட்டது. இந்த சர்வதேச குற்றங்களில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையும் அடங்கும். அது, பல தசாப்தங்களாக வேண்டுமென்ற நோக்கத்துடன் மக்கள் மீது நடத்தப்பட்டு, போரின் கடைசி கட்டத்தில் தொடர்ச்சியான நிகழ்வுகளில் உச்சக்கட்டத்தை அடைந்ததது. 

மிக சமீபத்தில் வடக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணியில் ஒரு மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. 150 எலும்புக்கூடு எச்சங்கள் - அவற்றில் 96 வீதமானவை ஒட்டுத் துணிகள கூட இல்லாமல் - ஒரு சிறிய சதுக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியை ஸ்கேன் செய்ததில் இன்னும் பல உடல்கள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளமை தெரிய வந்தது. 

தண்டனை பெற்ற ஒரு சிப்பாய் 1999 இல் நீதிமன்றத்தில் இராணுவத்தால் இந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டன என்பதை வெளிப்படுத்தினார். 1990 களின் நடுப்பகுதியில் அந்தப் பகுதியில் காணாமல் போனவர்கள் குறித்து விசாரித்த மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கைகளும் உள்ளன. 

இவை அனைத்தும் இனப்படுகொலை செய்யும் நோக்கம் உண்மையில் இருந்தது என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன மற்றும் மேலும் அதற்கு வலு சேர்க்கின்றன. இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்துள்ள குற்றங்களின் அளவையும், அவற்றின் விஸ்தாரத்தையும் நீங்கள் புரிந்துகொள்ளும் பொருட்டு, மேற்கண்ட விஷயங்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம். மனித உரிமைகள் கவுன்சிலில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்த விஷயத்தை சர்வதேச கவனத்தின் கீழ் வைத்திருப்பதில் நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை நாங்கள் மிகவும் மெச்சுகிறோம். அக்டோபர் 2015 இல், கவுன்சில் HRC/30/1 இலக்கத் தீர்மானத்தை நிறைவேற்றியது. அதற்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்கியது, ஆயினும் பின்னர் அதிலிருந்து அது விலகியது. அந்தத் தீர்மானம் சர்வதேச நீதிபதிகளின் பங்கேற்புடன் ஒரு கலப்பின நீதிமன்றத்திற்கும், மீண்டும் நிகழாததற்கான உத்தரவாதமாக செயல்படும் ஒரு புதிய அரசியலமைப்பிற்கும் வழிவகுக்க முன்னெடுக்கப்பட்டது. 

இவ்விடயத்தை ஒட்டி தற்போது இலங்கையின் பொறுப்புக்கூறல் திட்டம் தொடர்பான அலுவலகம், இந்த விவகாரம் மேலும் தொடரப்பட வேண்டும் மற்றும் விரிவுபடுத்தப்பட வேண்டும், மற்றும் திட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆதாரங்களைச் சேகரித்து அவற்றைப் பாதுகாக்கிறது, அதன் பிறகு இந்த விஷயம் தீர்க்கமான நடவடிக்கைகளுக்காக பிற பொருத்தமான ஐ.நா. அமைப்புகளுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும். 

இலங்கை உரோம் சட்டத்தில் இன்னும் கையொப்பமிடவில்லை. எனவே விரைவில் அதை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தப்பட வேண்டும். இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் மாற்று அறிக்கை இதைச் செய்ய பரிந்துரைக்கிறது. இதேபோல், உயர்ஸ்தானிகரின் முற்கூட்டிய அறிக்கையின் நகலிலும் கூட அதே பரிந்துரை கவுன்ஸிலுக்குச் செய்யப்படுகிறது என்பதை நாங்கள் அவதானித்துள்ளோம். அந்த வகையில், பொறுப்புக்கூறல் பிரச்சினைகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்படலாம். மேலும் இனப்படுகொலை பிரச்சினையை சர்வதேச நீதிமன்றத்திலும் பொருத்தமான வழிமுறைகள் மூலம் எடுத்துக்கொள்ளலாம். 

பொறுப்புக் கூறல் விவகாரத்தில் உள்ளூர் வழிமுறைகள் மூலம் முன்னேற்றம் இல்லாதமை குறித்து உயர் ஆணையர் (தமது அறிக்கையில்) விமர்சன ரீதியாகக் கருத்து தெரிவித்திருந்தாலும், பாதிக்கப்பட்ட சமூகம் இந்த அறிக்கை இலங்கையில் பொறுப்புக்கூறலுக்கான உள்ளூர் வழிமுறைகளை - அவை ஒன்றரை தசாப்தங்களுக்கும் மேலாக பயனற்றவை என்று நிரூபிக்கப்பட்ட பின்னரும் - அவற்றை நம்பியிருப்பதாகத் தோன்றுவது குறித்து ஏமாற்றமடைகிறது. காணாமல் போனோர் அலுவலகம் போன்ற அமைப்புகளில் சர்வதேச பங்கேற்புக்கான யோசனை போன்றவை கூறப்பட்டுள்ளன. 

எனவே அத்தகைய ஈடுபாட்டை பரிந்துரைப்பது பயனுள்ளதாக இருக்கும். இது போன்றவை எங்களுக்கு ஓரளவு நம்பிக்கையைத் தரும் சில ஏற்பாடுகளாகும். வரவிருக்கும் 60வது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய தீர்மானம், 'தமிழ் தேசியப் பிரச்சினையை' முறையாகக் கையாளும் அளவுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்க வேண்டும். எனவே, இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளாக, ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய தீர்மானத்தில் பின்வருவனவற்றை சாதகமாகக் கருத்தில் கொள்ளுமாறு நாங்கள் உங்களை வலியுறுத்துகிறோம், 

1. செம்மணி - சிந்துபாதி இந்து மயானத்தில் ஒரு சிறிய பகுதியில் 150 எலும்புக்கூடு எச்சங்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இன்னும் பெரிய அளவிலான அகழ்வாராய்ச்சிகள் செய்யப்பட வேண்டிய பகுதிகள் உள்ளன. அதன் மூலம் இனப்படுகொலை செயல்கள் மட்டுமல்ல, இனப்படுகொலை நோக்கத்திற்கான சான்றுகளும் பெருகி வருகின்றன. இந்த சூழலில், மியான்மர் வழக்கைப் போலவே விசாரணைகளை அமைப்பதற்காக இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதை தீவிரமாக பரிசீலிக்குமாறு உறுப்பு நாடுகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். 

2. போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், சர்வதேச மனித உரிமைகள் சட்ட மீறல்கள் போன்றவற்றைத் தவிர, அதற்கு மேல் இனப்படுகொலை மற்றும் இனப்படுகொலை நோக்கத்தை சுட்டிக்காட்டும் ஆதாரங்களை சேகரிப்பதையும் இலங்கை பொறுப்புக் கூறல் திட்ட அலுவலகத்தின் நோக்கமாக விரிவுபடுத்த வேண்டும். இலங்கை பொறுப்புக் கூறல் திட்ட அலுவலகத்தின் இந்த ஆதாரங்களை சேகரித்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவை விசாலமான நோக்கத்துடன் தொடரப்பட வேண்டும். மேலும் திட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட வேண்டும். 

3. பாதுகாப்பு கவுன்ஸில் தீர்மானத்தின் மூலம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்றாலும், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் பரிந்துரைத்தபடி ரோம் சட்டத்தில் கையெழுத்திட்டு அங்கீகரிக்க இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும். 

4. மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, தமிழ் மக்களுடன் புதிதாக பேச்சு நடத்தி, இணக்கம் கண்டு, வடக்கு - கிழக்கில் விரிவான அதிகாரப் பகிர்வுடன் கூடிய புதிய சமஷ்டி அரசமைப்பை இயற்ற இலங்கையை தொடர்ந்து வற்புறுத்த வேண்டும். உடனடி நடவடிக்கையாக, மாகாண சபைத் தேர்தல்களை மேலும் தாமதமின்றி நடத்த இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். 

நன்றி, 

சி.வி.கே. சிவஞானம் தலைவர், அவைத் தலைவர்,வடமாகாண சபை 

எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதி சட்டத்தரணி பொதுச் செயலாளர் 

எஸ். ஸ்ரீதரன் (எம்.பி.) பாராளுமன்ற குழு தலைவர் 

ஜி. ஸ்ரீநேசன் (எம்.பி.) 

கே.கோடீஸ்வரன் (எம்.பி.) 

சாணக்கியன் ராசமாணிக்கம் (எம்.பி.) 

கே.எஸ். குகதாசன் (எம்.பி) 

து. ரவிகரன் (எம்.பி.)


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி