நான்கு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபை (இ.போ.ச) ஊழியர் சங்கங்கள்
பல நேற்று (27) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
தனியார் பேருந்துகளுடன் ஒன்றிணைந்த கால அட்டவணைக்கு அமைய பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தும் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டதாக இ.போ.ச ஐக்கிய ஊழியர் சங்கத்தின் தலைவர் நிரோஷன் சம்பத் பிரேமரத்ன தெரிவித்தார்.
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒன்றிணைந்த கால அட்டவணை தொடர்பில் பல சிக்கல்கள் காணப்படுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் கருத்திற் கொண்டே ஒன்றிணைந்த கால அட்டவணை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால தெரிவித்தார்.
தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்படும் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த வேலைநிறுத்தம் நியாயமற்றது என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்த போதிலும், நேற்று நள்ளிரவு முதல் கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை ஆரம்பிக்கும் பேருந்துகள் வழமை போன்று பயணத்தை ஆரம்பித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
எந்தவிதமான பிரச்சினைகளுமின்றி இன்றைய தினம் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இ.போ.ச சாரதி ஒருவர் இதன்போது குறிப்பிட்டார்.