மலையக மக்களை 'மலையக தமிழ் மக்கள்' என அரசியல் ரீதியாக அங்கீகரிப்பது, அந்த சமூகத்திற்கு
ஒரு மரியாதை, அங்கீகாரம் மற்றும் பெருமையைக் கொடுக்கும் செயலாகும்.
அதற்கான நடவடிக்கைகள் இனியும் தாமதப்படுத்தப்பட மாட்டாது என உறுதியளிப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட அறிக்கையில், “இந்த உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கு தேவையான சட்ட சீர்திருத்தங்களை அரசாங்கம் முறையாக மேற்கொண்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் என்ற ரீதியில் இந்தக் குறுகிய காலத்திற்குள், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான எங்கள் பொறுப்புடன் நாங்கள் முன்னேறி வருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் விஜித ஹேரத், 'மலையக மக்கள்' பிறப்புச் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களில் அதிகாரப்பூர்வமாக 'மலையகத் தமிழ் மக்கள்' எனப் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர்கள் நமது நாட்டின் பிரஜைகளாக முழுமையாக அங்கீகரிக்கப்பட வேண்டும், மேலும் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் சொந்த வீடுகள், நிலம், தரமான கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து வசதிகளைப் பெறத் தகுதியானவர்கள். இந்த நோக்கத்திற்காகவே ஹட்டன் பிரகடனம் முன்வைக்கப்பட்டது, அது முறையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பண்டாரவளையில் சுமார் 4200 குடும்பங்களுக்கு சட்டபூர்வமாக வீடுகளை வழங்க ஆகஸ்ட் 3ஆம் திகதி ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும், ஆனால் ஒரு தொழில்நுட்பத் தடையால் அந்த செயல்முறை ஓரளவு தாமதமானது என்றும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் நமது நாட்டில் நீண்டகாலமாக துன்பப்பட்ட மக்கள், வறுமை மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட கல்வி வசதிகளை எதிர்கொண்டவர்கள். இந்த யதார்த்தத்தை நாம் பல தசாப்தங்களுக்கு முன்பே ஒப்புக்கொண்டோம். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். எனவே, இதில் மேலும் தாமதங்கள் ஏற்படாது என நாங்கள் உறுதியளிக்கிறோம் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, பதுளை, நுவரெலியா, மாத்தளை, இரத்தினபுரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து மலையக மக்கள் தேசிய மக்கள் சக்தி இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.