‘சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி!’ என்பார்கள். அந்த மாதிரி, தேவை இல்லாமல்
அவசரப்பட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைக் கைது செய்து, விளக்கமறியலில் அடைத்து, தனக்குத் தானே வினை தேடிக்கொண்டிருக்கின்றது தேசிய மக்கள் சக்தி அரசு என்றே தோன்றுகின்றது.
கடந்த நாடாளுமன்றத்தில் ஆக இரண்டு உறுப்பினர்களை மாத்திரம் கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தி, நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில். தொத்துப்பறியில்தான் வெற்றியீட்டியது. அந்த வெற்றிதான் நாடாளுமன்றத் தேர்தலில் அத்தரப்புக்கு தனித்து மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெறுவதற்கான வாய்ப்பை வழங்கியது.
ஜனாதிபதித் தேர்தலில் கூட, வழமைக்கு மாறாக இரண்டாவது சுற்று வாக்கு கணக்கெடுப்பிலேயே அநுரா குமார திஸாநாயக்கவினால் வெற்றி பெற முடிந்தது.
அதுவும் ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாஸவும் பிளவுபட்டு, ஆளையாள் எதிர்த்து போட்டியிட்ட காரணத்தினால் தான் இரண்டுக்கும் நடுவால் தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமார திஸாநாயக்காவினால் வெற்றி பெற முடிந்தது.
அதன் பின்னர் கூட, ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றுபட்டு நிற்கவில்லை. அதுவே நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு பெருவெற்றியை ஈட்டித் தந்தது.
அந்த வெற்றிக்குப் பின்னரும் கடந்த ஓராண்டாக ஆளுந்தரப்புக்குக் காத்திரமான எதிரணி ஒன்று நாடாளுமன்றுக்கு உள்ளேயும் வெளியேயும் இல்லவே இல்லை என்ற நிலையே நீடித்தது. இருக்கின்ற எதிரணிகள் பிளவுபட்டு, முரண்பட்டு, துண்டு துண்டாகி, வலுவிழந்து கிடந்தன.
இப்போது ஊழல், மோசடி, முறைகேடுகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் உப்புச்சப்பற்ற ஒரு விவகாரத்துக்காக ரணில் விக்கிரமசிங்கவைக் கைது செய்து எதிரணியை உசுப்பேத்தி விட்டி ருக்கின்றது தேசிய மக்கள் சக்தி.
ரணில் கைதுக்கு எதிராக அவரின் ஐக்கிய தேசியக் கட்சியும், அதிலிருந்து பிரிந்து போன ஐக்கிய மக்கள் சக்தியும் உறுப்பினர்கள் மட்டத்தில் தளத்தில் – களத்தில் - வீதியில் - ஒன்றித்துக் களமிறங்கிச் செயல்படுகின்ற வாய்ப்பை ரணிலைக் கைது செய்து வழங்கி இருக்கிறது அரசு.
பிணையில் வெளியில் வரும் ரணில் விக்கிரமசிங்க நிச்சயமாக அடங்கி இருக்கமாட்டார். இந்தத் தடவை சஜித்தை பழி வாங்குவதை விட, அவருக்கு வேறு வேலைகள் இருக்கின்றன. அதனால் சஜித்தையும் இணைத்து காத்திரமாக அவர் களத்தில் குதிக்கின்ற சூழல் ஏற்பட்டிருக்கின்றது.
69 லட்சம் வாக்குகளோடு பெருவெற்றியீட்டி ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷ, செயற்கை உரத்துக்கு ஒரேயடியாகத் தடைவிதிக்கும் அவசரப்பட்ட முடிவை தான்தோன்றித்தனமாக எடுத்துத் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டார். அங்கிருந்துதான். அவருக்கு எதிரான ‘கோட்டா கோ ஹோம்’ என்ற கோஷம் அவரின் சுமார் இரண்டு வருட ஆட்சியின் பின் சூடு பிடித்தது.
இப்போது ஜனாதிபதியாக ஆக 56 லட்சம் வாக்குகளோடு அதிகாரத்துக்கு வந்தவர் அநுரா. ஒரு வருடத்துக்கு இடையிலேயே ‘அநுரா கோ ஹோம்’ என்ற போராட்டம் தொடங்குவதற்கான வாசலை அவரது அரசு ரணிலைக் கைது செய்தமை மூலம் தேடிச் சென்று திறந்துவிட்டிருக்கின்றது.
அந்த வகையில் பார்த்தால் தனக்கு எதிரான - ஒன்றுபட்ட - காத்திரமான - வலிமையான - எதிர்க்கட்சி கூட்டு ஒன்றைத் தானே உருவாக்கி, களத்தில் இறக்க வழி வகுத்திருக்கிறார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க.
இப்போது சங்கை அவர் எப்படி ஊதிக் கெடுத்தார் என்பது புரியும் என நம்பலாம்.
-காலைமுரசு ஆசிரியர் தலையங்கம்