செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தின் சூத்திரதாரிகளில் ஒருவராகச் சந்தேகிக்கப்படும்
பிரிகேடியர் சசிந்திர விஜேசிறிவர்தன என்பவரை இலங்கை இராணுவத் தலைமையக இயக்குநரகத்தின் 34ஆவது பணிப்பாளராக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நியமித்திருக்கின்றார் என்ற அதிர்ச்சிச் செய்தி வெளியாகியிருக்கின்றது.
கிருஷாந்தி குமாரசாமி மீதான பாலியல் வல்லுறவு மற்றும் படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாயான சோமரத்தின ராஜபக்ஷ அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் செம்மணியில் மனிதப் புதைகுழிகள் தோண்டப்பட்ட போது 15 என்புக் கூடுகள் மீட்கப்பட்டிருந்தன. சோமரத்தின ராஜபக்ஷவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அப்பகுதியில் கடமையாற்றிய இலகு காலாட் படைப்பிரிவை சேர்ந்த கப்டன் தர அதிகாரியாக இருந்த சசிந்திர விஜேசிறிவர்தன (செம்மணிக் குற்றங்கள் நிகழ்ந்ததாகக் கூறப்படும் காலத்தில் அங்கு லெப்டினன்ட் தர அதிகாரியாக இருந்தவர்) மற்றும் லலித் ஹேவா, சசிக பெரேரா, யடகம ஆகிய இராணுவத்தினர் மார்ச் 13, 2000 அன்று, கைது செய்யப்பட்டு யாழ். நீதிமன்றத்தின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். (வழக்கு எண் டீ 28ஃ99).
இந்தக் கைதிகளின் பாதுகாப்புக்கு என்ற பெயரில் இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றில் இருந்து கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.
விளக்கமறியலில் வைக்கப்பட்ட சசிந்திர விஜேசிறிவர்தனவும் ஏனைய இராணுவத்தினரும் கொழும்பில் மேன்முறையீடு செய்து 2000 ஆம் ஆண்டு ஜூலை 06 அன்று பிணையில் வெளியே வந்தனர். வழக்கு நிலுவையில் இருக்கத்தக்கதாக மீண்டும் இராணுவதில் சேவையில் நீடித்த சசிந்திர விஜேசிறிவர்தன முல்லைத்தீவு இராணுவ முகாம் அதிகாரியாக நீண்டகாலம் பணியாற்றினார்.
பணாகொட இராணுவ முகாமிலும் பணியில் இருந்ததார். மேஜர், லெப்டினன்ட் கேணல், கேணல் ஆகிய பதவிநிலை உயர்வுகளைப் பெற்ற அவர் இப்போது பிரிகேடியராகி, இராணுவத் தலைமையக இயக்குநரகத்தின் பணிப்பாளருமாகிவிட்டார்.
அண்மையில் செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான நீதிமன்ற அமர்வில் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், மேற்படி சசிந்திர விஜேசிறிவர்தன உட்பட்ட படையினர் கைது செய்யப்பட்ட வழக்கை (வழக்கு எண்.டீ 28ஃ99 ஐ) மீண்டும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்திற்கு மாற்றி விசாரணையைத் தொடர வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்திருந்தார்.
அத்தோடு அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளோர் (பிரிகேடியர் சசிந்திர விஜேசிறிவர்தன போன்ற அடையாளம் காணப்பட்ட அதிகாரிகள்) வெளிநாடு தப்பி செல்வதை தடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கையையும் முன்வைத்திருந்தார்.
இந்த நிலையில்தான் பிரிகேடியர் சசிந்திர விஜேசிறிவர்தனவை இராணுவத் தலைமையக இயக்குநரகத்தின் பணிப்பாளராக ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க நியமித்திருக்கின்றார் என்ற அதிர்ச்சிச் செய்தி வெளியாகியிருக்கின்றது.
செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தில் இந்த அரசிடமிருந்து நியாயம் கிடைக்கும் என்று நம்புவது துர்லபமே.
-காலை முரசு