இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்று மீள ஆரம்பமாகின. இதன் போது 7 என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன.
யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அபிவிருத்திப் பணிகளின் போது மனித என்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய கடந்த மே மாதம் 15ஆம் திகதி முதல் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின.
மொத்தமாக 9 நாள்கள் இடம்பெற்ற முதலாம் கட்ட அகழ்வுப் பணிகளின்போது 9 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தன.
செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளை 45 நாள்கள் மேற்கொள்வது எனவும், 15 நாள்களுக்கு ஒருமுறை சிறிய இடைநிறுத்தல்களுடன் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வது எனவும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டது.
அதன் பிரகாரம் செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட முதல் 15 நாள்களுக்கான அகழ்வுப் பணிகள் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக நடைபெற்று இடைநிறுத்தப்பட்டன.
முதலாம் கட்ட அகழ்வு மற்றும் இரண்டாம் கட்டத்தின் முதல் 15 நாள்கள் இடம்பெற்ற அகழ்வு என மொத்தமாக 24 நாள்கள் இடம்பெற்ற அகழ்வில் இருந்து 65 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 16ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று ஆரம்பமாகின.
நேற்று 'தடயவியல் அகழ்வாய்வுத் தளம் இலக்கம் 01' இல் இருந்து 4 மனித என்புத் தொகுதிகள் பகுதியளவில் அடையாளம் காணப்பட்டன.
மேலும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சந்தேகத்தின் அடிப்படையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட புதிய பகுதியான 'தடயவியல் அகழ்வாய்வுத் தளம் இலக்கம் 02' இல் இருந்து 3 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன.
அதன்பிரகாரம் நேற்று மொத்தமாக 7 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன. செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 72ஆக அதிகரித்துள்ளது.
யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணரும் பேராசிரியருமான ராஜ் சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் ஆணையாளர் மிராக் ரஹீம், காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி வவி.எஸ்.நிரஞ்சன், சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின் போதுமுன்னிலையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.