திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடத்தினை அகற்றக்கோரி கட்டளை இடப்பட்டுள்ளது.
கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் ஆணையாளர் நாயகத்தினால் ஒப்பமிடப்பட்டு கட்டளை ஒன்று குறித்த பகுதியில் இன்று ஒட்டப்பட்டுள்ளது.
திருகோணமலை உட்துறைமுக வீதியில் மீன்பிடி படகுத்துறை பகுதியில் கட்டப்பட்டுள்ள 28.20 அடி நீளம் மற்றும் 09.10 அடி அகலத்தைக் கொண்ட கட்டடம், 44.7 அடி நீளம், 09.10 அடி அகலம் கொண்ட கழிப்பறை மற்றும் 17.5 அடி அகலம் கொண்ட கட்டிடம் ஆகியவற்றை அறிவிப்பு வெளியிடப்பட்ட திகதியில் இருந்து 07 நாட்களுக்குள் அகற்றுமாறும்,
குறித்த அறிவிப்பால் பாதிக்கப்பட்ட நபர் 3 நாட்களுக்குள் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் பொறுப்பான அமைச்சின் செயலாளரிடம் அதற்கு எதிராக மேன்முறையீடு செய்யலாம் எனவும் குறித்த கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1988 ஆம் ஆண்டின் 64 ஆம் எண் மற்றும் 2011 ஆம் ஆண்டின் 49 ஆம் எண் சட்டங்களால் திருத்தப்பட்ட, 1981 ஆம் ஆண்டின் 57 ஆம் எண் கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைச் சட்டத்தின் பிரிவு 31 (2) இன் கீழ் வெளியிடப்பட்ட உத்தரவின் பிரகாரம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான குறித்த பகுதியில் சில மீனவர்கள் மீன் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் அவர்கள் வெளியேற்றப்பட்டு சுற்றுலாத்துறையினரால் குத்தகைக்கு எடுக்கப்பட்டு தனியார் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும்,
இதில் உரிய அரச திணைக்களங்களில் சட்ட அனுமதி பெறப்படாத உணவு விடுதி ஒன்று இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த கட்டளை ஒட்டப்பட்டுள்ளது.