ஊடக அறிவிப்பு 346
புதிய கல்விச் சீர்திருத்தத்தின் மூலம் பாடசாலையை விட்டு வெளியேறும் அனைத்து மாணவர்களுக்கும் தொழிலொன்றைப் பெறுவதற்கும், பட்டம் பெறுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய.
கஷ்டப் பிரதேசப் பாடசாலைகளின் மேம்பாட்டிற்காக தேர்ந்தெடுக்கும்போது நட்பின் அடிப்படையில் அல்லாமல் மாவட்ட மேம்பாட்டுக் குழுவின் அனுமதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், புதிய கல்விச் சீர்திருத்தத்தின் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் வேலையைப் பெறுவதற்கு அல்லது பட்டம் பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஜூலை 13 ஆம் தேதி கிழக்கு மாகாண சபையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.
இந்த நிகழ்வில் மேலும் கருத்துகளை வெளியிட்ட கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய:
இது நாம் அனைவருக்கும் கிடைக்கும் வரலாற்று வாய்ப்பு. உலகத்திற்கு ஏற்ற தரமான கல்வியை வழங்குவதற்கு கல்வி சீர்திருத்தத்தின் மூலம் நம்மால் முடியும். அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலைக் கல்வி முடிக்கும் போது வேலையைப் பெறுவதற்கு தேவையான வகையில் NVQ சான்றிதழ் கிடைக்கும்.
நிலவும் கல்வி முறையில் மாணவர்கள் வேலைக்குச் செல்லும்போது திறமைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் பல்கலைக்கழகங்களுக்கு மென்மையான திறமைகளை மேம்படுத்த வேண்டியதாக உள்ளது. அது பாடசாலைகளில் செய்யப்பட வேண்டும்.
9 ஆம் ஆண்டிலிருந்து மாணவர்களுக்கு எதிர்காலத்தில் அவர்கள் செய்ய வேண்டிய தொழில் என்ன என்பதை முடிவு செய்வதற்கும் அதற்கான அனுபவத்தைப் பெறுவதற்கும் புதிய சீர்திருத்தத்தின் மூலம் வாய்ப்பு கிடைக்கும். 11 ஆண்டுகளாக அல்லது 13 ஆண்டுகளாகக் கல்வி பெற்று பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு தேவையானால் வேலை செய்யவும் முடியும், தேவையானால் பட்டம் பெறவும் வாய்ப்பு உள்ளது. விரும்பினால் வேலை செய்யும்போதே பட்டம் பெறவும் வாய்ப்பு உள்ளது.
கல்வி சீர்திருத்தத்தினுள் பாடத்திட்டம் மட்டுமல்லாமல் பாடசாலை அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும், சீர்திருத்தம் பற்றி மக்களிடையே கருத்தாடலொன்றை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட பணத்தை சரியான முறையில் பயன்படுத்துங்கள். அதுபோல் கஷ்டப் பிரதேச ங்பாடசாலைகளின் மேம்பாட்டிற்காக தேர்ந்தெடுக்கும்போது கிராமத்தவர் என்ற முறையில் அல்லது தனிப்பட்ட உறவின் அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டாம். சரியான முறையைக் கடைபிடித்து மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதியுடன் செய்யுங்கள். கஷ்டப் பிரதேச பாடசாலைகளின் மாணவர்களைக் பின்தங்கிய கிராமங்களில் சிறைப்படுத்தி தரமான கல்வி வழங்க முடியாது.
கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகளில் கல்வி அமைச்சு மாகாண சபை, மாகாண கல்வித் திணைக்களம் போன்று வலய அலுவலகங்கள், கோட்டக் கல்வி அலுவலகங்கள் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கூறினார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஷான் அக்மீமன, எஸ். குகனாதன், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட பிரமுகர்களும் , கல்வி அமைச்சு, பரீட்சைத் திணைக்களம் , தேசிய கல்வி நிறுவகம், மாகாண கல்வித் திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், வலயக் கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானோர் பங்கேற்றனர்.
பிரதமர் ஊடக பிரிவு