செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகள் மற்றும் வடக்கு, கிழக்குத் தமிழர் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட வேறு பல மனிதப் புதைகுழிகளையும்
சேர்த்துக் கருத்திலெடுக்கும் போது, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களையும், இனவழிப்பு முயற்சிகளையும் வெளிப்படுத்தும் தெளிவான ஆதாரங்களாக அவை வெளிப்படுகின்றன என்று இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இன்று கடிதம் மூலம் அறிவித்திருக்கின்றனர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானமும், பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும்.
'செம்மணி மனிதப் புதைகுழி விசாரணையில் உண்மை கண்டறிதல், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் நீதியின் அவசியம்' - என்ற தலைப்பில் அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தின் முழு விவரங்களும் வருமாறு:-
'தற்போது நடைபெற்று வரும் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகள் தொடர்பில் எம் ஆழ்ந்த கரிசனையை வெளிக்காட்ட இலங்கைத் தமிழ்ரசுக் கட்சியின் சார்பில் இக்கடிதத்தை எழுதுகின்றோம். உண்மையை வெளிக்கொணரவும், தடயவியல் விசாரணைகளில் சர்வதேச ரீதியில் தரநிலைகளை பின்பற்றுவதை உறுதி செய்யவும், குற்றவாளிகளை நீதிக்கு முன்னிறுத்தவும் அவசரமானதும், தீர்மானமானதுமான நடவடிக்கைகளை எடுக்குமாறு இக்கடித்தத்தினூடு கேட்டுக்கொள்ள விழைகிறோம்.
இலங்கையில் 1990களின் நடுப்பகுதி வரை தொடர்ந்த வலுக்கட்டாயமான காணாமற் போக்கல்கள் மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகளின் நீண்ட, இன்றும் தீர்க்கப்படாத வரலாற்றையே செம்மணி பிரதிபலிக்கின்றது. 1998இல், தமிழ்ப் பள்ளி மாணவி கிருசாந்தி குமாரசாமி மற்றும் அவருடைய குடும்பத்தினரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாகத் தீர்க்கப்பட்ட லான்ஸ் கார்ப்ரல் சோமரத்ன ராஜபக் ஷ, தனது தண்டனை விசாரணையின் போது, குமாரசாமி குடும்பம் புதைக்கப்பட்ட இடத்தில் 300 - 400 தமிழ் பொது மக்கள் புதைக்கப்பட்டிருப்பதை நீதிமன்றில் வெளிப்படுத்தியிருந்தார்.
இந்தச் சாட்சியின் அடிப்படையில் 1999இல் அகழ்வு வேலைகள் மேற்கொள்ளப்பட்ட போது, 15 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் இரண்டு எலும்புக்கூடுகள் 1996இல் காணாமலாக்கப்பட்டவர்களது என உறுதி செய்யப்பட்டது. இவர்கள் உடல் ரீதியாகத் தாக்கப்பட்டு, கொலை செய்யபட்டதை தடய ஆதாரங்கள் உறுதி செய்திருந்த போதும், வழக்குகள் நடுநிலையிலேயே நின்றுவிட்டன. இதுவரை நீதியும் வழங்கப்படவில்லை.
2025 ஆரம்பத்தில், யாழ்ப்பாணத்தின் வட பகுதியில் அமைந்த செம்மணி - அரியாலை - சித்துப்பாத்தி இந்து மயானத்தை மறுசீரமைக்கும் பணிகளின் போது மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து யாழ். நீதிவான் நீதிமன்றம் அந்த இடத்தை அதிகாரபூர்வமாக ஒரு மனித புதைகுழியாக அறிவித்து, நீதித்துறையின் மேற்பார்வையில் அகழ்வுகளை மேற்கொள்ள உத்தரவிட்டது. இன்றுவரை, இரண்டு கட்டங்களாக நடந்து வரும் அகழ்வுப் பணிகளில் குழந்தைகளும் உட்பட சுமார் 65 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
இந்த மனித எச்சங்களோடு பள்ளிப்பை, பொம்மை, வளையல்கள், காலணிகள் மற்றும் உடைத் துணுக்குகள் போன்ற தனி உடமைகளும் சேர்த்தே மீட்கப்பட்டிருக்கின்றன. அனைத்து எலும்புக்கூடுகளும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தடய ஆய்வுகளுக்காக பேணப்பட்டு வருகின்றன.
இந்த அகழ்வுகள், வடக்கு, கிழக்கு தமிழர் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட வேறும் பல கூட்டப் புதைகுழிகளையும் சேர்த்துக் கருத்தில் எடுக்கும் போது, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களையும், இனவழிப்பு முயற்சிகளையும் வெளிப்படுத்தும் தெளிவான ஆதாரங்களாகும்.
(இலங்கை அரசானது தனது) இந்தத் தமிழர் விரோத கொடும் வரலாற்றை முழுமையாக ஏற்றுக்கொள்வது அவசியம். மாறும் நீதி செயல்முறையின் அடிப்படையாக உண்மைக்கான தேடல் அமைய வேண்டும். 2009இல் போர் முடிவடைந்த பிறகு பதினாறாண்டுகளுக்கு மேல் கடந்தும் நூற்றுக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் இன்னும் பதில்களைத் தேடியலைகின்றனர். இந்த குடும்பங்கள் தங்கள் காணாமல்போன உறவுகளின் நிலை குறித்து பதில்மறுக்க முடியாத கேள்விகளை எழுப்புகின்றனர். அடுத்தடுத்த அரசாங்கங்களின் தொடர் மௌனம் வெறும் அரசியல் தோல்வி மட்டுமல்ல, தீவிரமான தார்மீகத் தவறும்கூட. உண்மையை அறியாது கடக்கும் ஒவ்வொரு ஆண்டும் போரின் வடுக்களில் இருந்து நாடு குணமடைவதையும், தொக்கு நிற்கும் கேள்விகளின் முடிவையும் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கின்றது.
1999இல் அகழப்பட்ட பதினைந்து உடல் எச்சங்களும், இன்று அகழப்பட்டுக்கொண்டிருக்கும் எலும்புக்கூடுகளும் ஒரே குற்றவியல் சூழலுடன் தொடர்புபட்டவை. இருப்பினும், அன்றைய அகழ்தலைக் குறித்த கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இருக்கும் முடிவுறா வழக்கானது இன்றைய விசாரணைகளுடன் முறையாக இணைக்கப்படவில்லை. இவை இப்போது ஒரே குற்றவியல் நடவடிக்கையின் பகுதிகளாகக் கருதப்பட வேண்டும். இரு விசாரணைகளையும் ஒருங்கிணைத்தால்தான் தக்க பொறுப்புக் கூறல் ஏற்பட முடியும்.
இலங்கையின் குறைந்த உள்நாட்டு தடய ஆய்வுத் திறனும், முன்னைய புதைகுழி விசாரணைகளை நீதித்துறை வெளிப்படைத்தன்மையின்றிக் கையாண்ட வரலாறுகளும் நம்பகமான சர்வதேச மேற்பார்வையையும், தெளிவான ஒளிவு மறைவில்லாத விசாரணை நடைமுறைகளையும் அவசியமாக்குகின்றன. காவல் வரிசை மிகச்சரியாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். சர்வதேச அங்கீகாரம் பெற்ற சுயாதீன தடய ஆய்வு நிபுணர்கள் அகழ்தல், அடையாளம் காணல் மற்றும் பகுப்பாய்வு என்பவற்றை மேற்பார்வையிட வேண்டும்.
இடைக்கால மற்றும் இறுதி அறிக்கைகள் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், சிவில் சமூகம், சர்வதேச அவதானிப்பாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வாசனைக்காக வெளிப்படையாக பிரசுரிக்கப்பட வேண்டும். 1999இல் அகழப்பட்ட பதினைந்து உடல்கள் பகுப்பாய்வுக்காக க்ளாஸ்கோ பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டன எனத் தெரியவந்துள்ளது.
இதுவரை, அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்கள் எவையும் அந்த பூதவுடல்களை தாய்நாட்டுக்குத் திருப்பியெடுக்க, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண, அல்லது முறையான இறுதிச் சடங்குகளை ஏற்படுத்த எந்தவொரு பொருத்தமான நடவடிக்கையும் எடுத்ததில்லை. அந்த உடல்கள் அவசரமாக இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட வேண்டும். இவற்றை சர்வதேச கண்காணிப்பு நடைமுறைகளை இயக்கி, இன்று செய்யப்படும் செம்மணி அகழ்வுகளோடு இணைத்து விசாரணை செய்தால் மட்டுமே ஓர் ஒருங்கிணைந்த,தெளிவான உண்மைத் தேடல் செயல்முறையொன்று தோன்றலாம்.
செம்மணி நிலம் மீண்டும் பேசுகின்றது. குழந்தைகள் உட்பட நாற்பது எலும்புக்கூடுகள், அவர்களின் தனிப்பட்ட பொருள்களுடன் வெளிப்பட்டுள்ளன. இது அவர்கள் படைத்துறை சாராத சிவில் மக்கள் என்பதையும், நிரபராதிகள் என்பதையும் வேதனையுடன் உறுதிப்படுத்துகின்றது. இப்படிப்பட்டவர்கள் புதைந்திருக்க, குற்றவாளிகளோ நாட்டில் சுதந்திரமாக உலவுகின்றனர். உறுதியான சட்ட நடவடிக்கை இல்லாமல் (அரசின்) நல்லிணக்கத் தோரணைப் பேச்சுக்கள் வெறுமையாகவே ஒலிக்கின்றன.
எனவே, பின்வரும் நடவடிக்கைகளை தாமதமின்றி முன்னெடுக்குமாறு ஜனாதிபதியாக உங்களை மரியாதையுடனும், உறுதியுடனும் நாம் கேட்டுக்கொள்கிறோம்:-
1. 1999 மற்றும் 2025 புதைகுழி அகழ்வுகளையும், அவை தொடர்பான விசாரணைகளையும், சட்ட வழக்குகளையும், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றங்களின் கீழ், ஒரே நீதிமன்ற மற்றும் தடய ஆய்வு விசாரணையாக ஒருங்கிணைக்க வேண்டும்.
2. விசாரணையின் அனைத்து நிலைகளையும் மேற்பார்வை செய்ய, சுயாதீனமான, சர்வதேச தடய ஆய்வு நிபுணர்களை ஈடுபடுத்தி, தடய ஆய்வின் உண்மைத் தன்மையையும், பொது மக்களின் நம்பிக்கையையும் உறுதி செய்யவேண்டும்.
3. இடைக்கால மற்றும் இறுதி தடய ஆய்வு அறிக்கைகள், பரம்பரையலகு விவரங்கள் மற்றும் ஆள் அடையாளம் காணல் முடிவுகள் அனைத்தையும் பொதுமக்களுக்கு வெளியிட்டு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், சிவில் சமூகம் மற்றும் சர்வதேச அவதானிப்பாளர்கள் ஆகியோருக்கு அவற்றை இலகுவாகப் பெற்றுக்கொள்ள ஆவனசெய்ய வேண்டும்.
4. தற்போது கிளாஸ்கோவில் இருப்பதாக நம்பப்படும் 1999இல் தோண்டியெடுக்கப்பட்ட சடலங்களை உடனடியாக மீளப்பெற்று, அவற்றை மேற்சொன்ன நடைமுறைகளின் கீழ் ஒரே விசாரணையின் கீழ் இணைத்து ஆய்வு செய்து, கூடிய விரைவில் அவற்றை குடும்பங்களிடம் சேர்க்க உரிய செய்ய வேண்டும்.
5. தற்போதைய அகழ்வுகள் சர்வதேச நியமங்கள் படி முழுமையடைய நிதி மற்றும் இதர வளங்களை அதிகரிக்க வேண்டும். நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இன்னும் காணாமல்போன தம் உறவுகளைத் தேடி வருகின்றனர்.
உண்மை மற்றும் பொறுப்புக் கூறல் இல்லாத நல்லிணக்கம் போலித் தோற்றம் மட்டுமே. இந்தக் கொடூரமான குற்றங்களை இழைத்தவர்களுக்கு எதிராக குற்ற வழக்குத் தொடருதல் நடவடிக்கைகளை மேற்கொள்வது தேசிய நல்லிணக்கத்துக்கு அத்தியாவசியமானதாகும்.
இந்த நடவடிக்கைகள் இலங்கையின் தார்மீக மற்றும் சட்டப் பொறுப்புகளை நிறைவேற்றவும், உண்மை மற்றும் நீதிக்கான நம்பகமான பாதையை உருவாக்கவும் அவசியமானவை. இந்த நடவடிக்கைகளை எளிதாக்குவதிலும், அவற்றின் காலமுறையான செயலாக்கத்தை உறுதி செய்வதிலும், எங்கள் ஆதரவைத் தர நாம் என்றும் தயாராகவே உள்ளோம்' என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-மாலை முரசு