ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்டன. அதற்கமைய இம்முறை 13 ஆயிரத்து 392 பேர் 9
பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்றுள்ளனர். அதேவேளை சுமார் 2 சதவீதமானோர் எந்தவொரு பாடத்திலும் சித்தி பெறவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள பரீட்சை திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
'கடந்த மார்ச் 17ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை 3 ஆயிரத்து 664 பரீட்சை மத்திய நிலையங்களில் ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைகள் இடம்பெற்றன. 3 இலட்சத்து 98 ஆயிரத்து 182 பரீட்சாத்திகள் பாடசாலை ஊடாகவும், 75 ஆயிரத்து 965 பரீட்சாத்திகள் தனிப்பட்ட ரீதியிலும் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்தனர்.
விண்ணப்பித்திருந்த 4 இலட்சத்து 74 ஆயிரத்து 147 பரீட்சாத்திகளில் 3 இலட்சத்து 75 ஆயிரத்து 244 பேர் பாடசாலை ஊடாகவும், 49 ஆயிரத்து 908 பேர் தனிப்பட்ட ரீதியிலும் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
அதற்கமைய ஒட்டுமொத்தமாக 425இ152 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். இவர்களில் 2 இலட்சத்து 37 ஆயிரத்து 26 பரீட்சாத்திகள் உயர்தரக் கல்வியைத் தொடர்வதற்குத் தகுதி பெற்றுள்ளனர். இது 73.45 சதவீதமாகும்.
13 ஆயிரத்து 392 பேர் 9 பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்றுள்ளனர். இது 4.15 சதவீதமாகும். மேல் மாகாணத்தில் 74 சதவீதமானோரும், மத்திய மாகாணத்தில் 73 சதவீதமானோரும், தென் மாகாணத்தில் 75 சதவீதமானோரும், வடக்கு மாகாணத்தில் 69 சதவீதமானோரும், கிழக்கு மாகாணத்தில் 74 சதவீதமானோரும், வடமேல் மாகாணத்தில் 71 சதவீதமானோரும், வடமத்திய மாகாணத்தில் 70 சதவீதமானோரும், ஊவா மாகாணத்தில் 73 சதவீதமானோரும் மற்றும் சப்ரகமுவ மாகாணத்தில் 73 சதவீதமானோரும் உயர்தரக் கல்வியைத் தொடர்வதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
ஆங்கிலப் பாடத்தில் 73 சதவீதமானோரும், விஞ்ஞான பாடத்தில் 72 சதவீதமானோரும், கணித பாடத்தில் 69 சதவீதமானோரும் சித்தியடைந்துள்ளனர்.
எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை பெறுபேறுகள் மீள் பரிசீலனைக்காக விண்ணப்பிக்க முடியும். 2 சதவீதமானோர் எந்தவொரு பாடத்திலும் சித்தி பெறவில்லை. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெறுபேறுகளில் பாரியளவில் முன்னேற்றம் இல்லை.
இவ்வாண்டுக்கான ஜி.சீ.ஏ. உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 10ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. அதேவேளை, இந்த வருடத்துக்கான ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைகளை 2026ஆம் ஆண்டு பெப்ரவரியில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் இருந்து பரீட்சைகளை உரிய மாதங்களில் நடத்துவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றோம்' என்றார்.