இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த வரி விகித அறிவிப்பு குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையில் இருந்து ஜனாதிபதி அநுர குமாரவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கை உள்ளிட்ட மேலும் ஏழு நாடுகளின் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பி, அவர்களது நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த புதிய வரி கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை, பிலிப்பைன்ஸ், மொல்டோவா, ப்ரூனே, அல்ஜீரியா, லிபியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்க வர்த்தக துறையின் அறிக்கையின்படி, இலங்கை, மொல்டோவா, ஈராக் மற்றும் லிபியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட அளவைவிட குறைந்த வரி விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், பிலிப்பைன்ஸ் மற்றும் ப்ரூனே நாட்டுகளுக்கான வரி அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்ஜீரியாவிற்கு விதிக்கப்படும் வரி விகிதம் 30% ஆக தொடர்கிறது. வரிக்குப் பின்னால் உள்ள காரணம் அமெரிக்காவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையில் நிலவும் வர்த்தக இழப்புகளை (trade deficits) குறைப்பதுதான் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என ட்ரம்ப் எழுதியுள்ள கடிதங்களில் தெரிவித்துள்ளார்.
“மற்ற நாடுகளின் கொள்கைகள், அமெரிக்க பொருட்கள் உலக சந்தையில் செல்லும் பாதையைத் தடுக்கின்றன. இதற்கு பதிலடி அளிக்க வேண்டிய நேரம் இது” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அமெரிக்காவில் உற்பத்தி செய்யுங்கள், இல்லையெனில் கூடுதல் வரிக்கு தயாராகுங்கள்” என்று உலக நாடுகளுக்கு கடுமையான எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
ட்ரம்ப் இதுவரை 21 நாடுகளுக்கு வரி தொடர்பான கடிதங்கள் அனுப்பியுள்ளார். இந்தப் பட்டியலில் விரைவில் மேலும் சில நாடுகள் சேரக்கூடிய வாய்ப்பு உள்ளது.
ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கு விதிக்கப்படவுள்ள 25 வீத வரி, அமெரிக்காவின் முக்கிய இறக்குமதி மூலநாடுகளாக உள்ள இந்த இரு நாடுகளின் பொருட்களின் விலையை நேரடியாக பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இலங்கை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை!
அமெரிக்கா விதித்துள்ள வரிகளால் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கத்தைக் குறைக்க, உள்நாட்டில் ஏற்றுமதித் துறையை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதற்காக உள்நாட்டு பொருளாதார சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் பேராசிரியர் பிரியங்கா துனுசிங்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா போன்ற வல்லரசு நாடு இலங்கை போன்ற சிறிய நாட்டிற்கு வரி விதிக்கும் போது அதனை எதிர்ப்பதற்கு வழிகள் இல்லை. இதனால் அதனை இறுதியில் ஏற்றுக் கொள்ள தான் நேரிடும்.
எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் இறுதியில் இது தான் நடக்கும் என்பதனை தவிர்க்க முடியாது.
இவ்வாறான சூழ்நிலையில் உள்நாட்டில் ஏற்றுமதித்துறையை வலுப்படுத்துவதற்கு என்ன வழிமுறைகள் உள்ளதென்பதனை
முதலீட்டுகளை அதிகரிக்க அதனை ஈர்க்க கூடிய திட்டங்களை நாட்டில் முன்னெடுக்க வேண்டும். வெளிநாட்டு முதலீடுகளை அதிகரித்து பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.
அமெரிக்காவின் அல்லது வேறு எந்த நாட்டின் அனுதாபத்தை நம்பி நாட்டின் ஏற்றுமதித் துறையை உருவாக்குவதற்கு பதிலாக, அதைத் தாண்டி போட்டித்தன்மையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பேராசிரியர் பிரியங்க துனுசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.