அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடியேற்ற அதிகாரிகளின் (ICE) சோதனைகளுக்கு எதிராக நடைபெற்று வரும்
போராட்டங்கள் ஐந்தாவது நாளாக நீடித்து வரும் நிலையில், நகரில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
வன்முறை சம்பவங்கள் மற்றும் சுமார் 23 வணிக நிறுவனங்களில் கொள்ளை சம்பவங்கள் பதிவாகியுள்ளதால், லொஸ் ஏஞ்சல்ஸ் மேயர் காரன் பாஸ், டவுன்டவுன் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை பகுதிநேர ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்தார்.
போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இதனை "அமைதி மற்றும் பொது ஒழுங்கிற்கு எதிரான தாக்குதல்" என்று தெரிவித்துள்ளார். மேலும், நகரில் அதிக படைகளை நிலைநிறுத்த அவர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
டிரம்ப் நிர்வாகத்தால் ஏற்கனவே 4,000 தேசிய காவலர்கள் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய கட்டடங்கள் மற்றும் சட்டம் அமலாக்க அதிகாரிகளை பாதுகாப்பதற்காக சுமார் 700 அமெரிக்க கடற்படையினர் (US Marines) டவுன்டவுன் பகுதிக்கு வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலிபோர்னியா கவர்னர் கேவின் நியூகாம்ப், டிரம்ப் நிர்வாகத்தின் இந்த இராணுவ குவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது ஒப்புதல் இல்லாமல் தேசிய காவலர்கள் மற்றும் அமெரிக்க கடற்படையினர் லொஸ் ஏஞ்சல்ஸில் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலைநிறுத்தலை உடனடியாக தடுக்க கோரி டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றத்தை அவர் நாடியுள்ளார்.
"இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல், கலிபோர்னியா தொடர்ந்து போராடும்" என்று கவர்னர் நியூகாம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். "நாங்கள், பாதுகாப்பு படையினரை மதிக்கிறோம். ஆனால், அவர்கள் லொஸ் ஏஞ்சல்ஸில் இருக்கக்கூடாது" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, டிரம்ப் நிர்வாகத்தால் லொஸ் ஏஞ்சல்ஸில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 4,000 பேர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, லொஸ் ஏஞ்சல்ஸ் பெருநகரப் பகுதியில் சுமார் 2,100 தேசிய காவலர்கள் இருந்ததாக ஒரு அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், 700 கடற்படையினரை லொஸ் ஏஞ்சல்ஸ் டவுன்டவுனில் பென்டகன் நிலைநிறுத்தியுள்ளது. இவர்கள் மத்திய கட்டடங்கள் மற்றும் சட்டம் அமலாக்க அதிகாரிகளை பாதுகாக்க நகர் பகுதிகளில் நிறுத்தப்படுவதற்கு காத்திருக்கின்றனர். உள்நாட்டில் அமைதியின்மைக்கு பதிலளிக்கும் விதமாக, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அமெரிக்காவிற்குள் படைகள் அணிதிரட்டப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலைமை, அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கைகள் மற்றும் சிவில் உரிமைகள் குறித்த விவாதங்களை மேலும் அதிகரித்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸின் நிலைமை தொடர்ந்து உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை, லொஸ் ஏஞ்சல்ஸில் பெருமளவிலான குடியேற்றக் கைதுகள் தொடர்பாக போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிளர்ச்சிச் சட்டத்தைப் பயன்படுத்தக்கூடும் என்று கூறியுள்ளார்.
1807ஆம் ஆண்டு சட்டத்தின் அடிப்படையில் இயற்றப்பட்ட இந்தச் சட்டம், அமெரிக்க மண்ணில் தீவிரப் பணியில் உள்ள இராணுவத்தினரை நிலைநிறுத்த அனுமதிக்கிறது.
"ஒரு கிளர்ச்சி ஏற்பட்டால், நான் நிச்சயமாக அதை அழைப்பேன். பார்ப்போம். நேற்று இரவு பயங்கரமாக இருந்தது. அதற்கு முந்தைய இரவும் பயங்கரமாக இருந்தது" என்று, செவ்வாயன்று ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறியுள்ளார்.