உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிக்கு பெரும்பான்மை வழங்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில்
அதிகாரத்தை நிறுவ, ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒப்புக்கொண்டுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (19) நடைபெற்ற கலந்துரையாடலின் போது, ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும், இந்த உடன்பாட்டை வெளிப்படுத்தின.
அந்த நேரத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி தலதா அதுகோரலவும் இது தொடர்பான கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டனர்.
இந்த சபைகளில் மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அதிகாரத்தை நிலைநாட்ட இரு கட்சிகளின் பொதுச் செயலாளர்களும் ஒரு உடன்பாட்டை எட்டினர்.
இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரகுமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.