இலங்கையில் சிறுவர்களை கொண்டு பாதாள உலகக் கோஷ்டியொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பின் பிரதான போதைப்பொருள் வர்த்தகர்களில் ஒருவராகவும் பாதாள உலகக் கோஷ்டி செயற்பாட்டாளராகவும் கருதப்படும் பழனி ரிமோஷன் என்பவரினால் இவ்வாறு பாதாள உலகக் கோஷ்டி உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
18 வயதுக்கு குறைந்த இளையவர்கள் இந்த படையணியில் இணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 16ஆம் திகதி கொட்டாஞ்சேனை சுமித்ரா ராம வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 42 வயதான நபர் ஒருவரும் அவரது 70 வயதான பெரியம்மாவும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நபர் புகுடு கண்ணா என்ற பாதாள உலகக் குழு தலைவரின் சகாக்களில் ஒருவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் ஓராண்டுக்கு முன்னதாக ஜிந்துபிட்டி பகுதியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கின் சந்தேக நபர் என்பதுடன் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு இருப்பிட வசதிகளை செய்து கொடுத்தார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நபர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து கொட்டஞ்சனை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய மற்றும் அதற்கு உதவிய இருவரும் 17 மற்றும் 18 வயதுடைய சிறுவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்த இருவரும் சட்டத்தரணிகள் ஊடாக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முன்னிலை ஆகியிருந்தனர்.
இந்த இரண்டு சந்தேக நபர்களும் கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது இந்த விசாரணைகளின் போது 17 வயதான சிறுவன் தாம் பழனி ரிமோஷன் குழுவைச் சேர்ந்தவர் எனவும் அவரது வழிகாட்டலில் இந்த துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பாதாள உலக வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தான் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். பழனி ரிமோஷன் என்ற நபர், சிறுவர்களை குற்றச்செயல்களில் பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் கைதான மற்ற 18 வயதாக சிறுவன் இளைஞன் துப்பாக்கிச் சூடு நடத்தியவரையும் ஏனைய தரப்புகளையும் இணைப்பினை ஏற்படுத்தியவர் என தெரியவந்துள்ளது.