பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள உள்ளூராட்சிமன்றங்களில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக,
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், மலையக மக்கள் முன்னணியுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வி. ராதாகிருஸ்ணனுக்கும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இடையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
மலையக மக்கள் முன்னணியின் சார்பில் தனித்தனியாகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் உள்ளனர். இந்நிலையில், மேற்படி கலந்துரையாடல்கள் வெற்றி பெற்றால், தேசிய மக்கள் சக்தி, அவர்களின் ஆதரவைப் பெறும்.
இதன் காரணமாக, பெருந்தோட்டப் பகுதியில் உள்ள உள்ளூராட்சிமன்றங்களில் அதிகாரத்தை நிலைநாட்ட, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான் மற்றும் பழனி திகாம்பரம் மேற்கொண்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
மலையக மக்கள் முன்னணிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையே சிறிது காலமாக நெருங்கிய உறவு இருந்து வருவதாகவும், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கொட்டகலையில் நடைபெற்ற மலையக மக்கள் முன்னணியின் கட்சி மாநாட்டில், நளிந்த ஜயதிஸ்ஸ அழைப்பாளராகக் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பெருந்தோட்டத்துறை தொடர்பில் இந்தியாவுடனான அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலும் ராதாகிருஷ்ணன் ஈடுபாடு அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.