ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான சொகுசு வாகனங்களை விற்பனை செய்வதற்கான
இரண்டாம் கட்டத்தின் கீழ், 26 சொகுசு வாகனங்கள் மற்றும் பயன்படுத்தப்படாத வாகனங்களை விற்பனை செய்வதற்கான ஏலம் இன்று (15) நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர்களும் முன்னாள் ஜனாதிபதியும், தங்கள் பதவிக் காலத்தில் அரசியலமைப்பின் 41 (01) பிரிவின் கீழ் நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கிய 26 வாகனங்களே, இன்று ஏலம் விடப்பட்டன.
அவற்றில் 17 வாகனங்கள், இன்றைய தினமே விற்பனை செய்யப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஒரு BMW கார், 02 Ford Everest வாகனங்கள், ஒரு Hyundai Terracan வாகனம், 02 Land Rover Discovery வாகனங்கள், ஒரு Mitsubishi Montero வாகனம், 03 Nissan பெட்ரோல் வாகனங்கள், 02 Nissan வாகனங்கள், 05 Porsche Cayenne வாகனங்கள், 05 SsangYong Rexton ஜீப்கள், ஒரு Land Cruiser Sahara வாகனம், ஆறு V08 ரக வாகனங்கள் மற்றும் ஒரு Mitsubishi Rosa uக குளிரூட்டப்பட்ட பஸ் போன்றனவே இன்று ஏலத்திற்கு விடப்பட்டன.
அரசாங்க செலவினங்களைக் குறைத்து, நிதி பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் நோக்கில் ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான வாகனங்களின் விற்பனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த வாகனங்களை வாங்க சுமார் 108 தொழிலதிபர்கள் முன்வந்துள்ளனர். இதன் விளைவாக வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
அதன்படி, இன்று நடைபெற்ற ஏல வாகன விற்பனை மூலம் 200 மில்லியன் ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.