பௌத்த மதத்தைப் பின்பற்றும் உலக மக்கள் அனைவரும், புனித வெசாக் தினத்தை மே மாதம் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் கொண்டாடுகின்றனர்.

வெசாக் பௌர்ணமி போயா தினமானது கௌதம புத்தரின் பிறப்பு, ஞானமடைதல், (பரிநிர்வாண நிலை) இறப்பு ஆகியவற்றைக் குறித்து நிற்கும் ஒரு தினமாக, கருதப்படுகின்றது.

இவ்வாறானதொரு பௌர்ணமி நாளிலேயே சித்தார்த்த கௌதமர் ‘லும்பினி’ (இன்றைய நேபாளம்) என்னுமிடத்தில் பிறந்ததுவும், ‘புத்தகயா’ எனும் இடத்தில் தவம் புரிந்து புத்த நிலை அடைந்ததுவும், இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ‘குஷிநகர்’ என்னும் இடத்தில் புத்த பெருமான் பரிநிர்வாணம் அடைந்ததுவும் இந்தப் புனித தினத்திலேயே ஆகும்.

உலகம் உன்னதமான நிலையை அடையவும், உலகில் காணப்படுகின்ற பல்வேறுபட்ட துன்பங்கள், துயரங்கள், வேதனைகள் அகல்வதற்காக,  இறைவனின் அவதாரமாக பல்வேறுபட்ட மகான்களும், ஞானிகளும், ரிஷிகளும், தோன்றிய நாடு பாரதம் ஆகும்.

மனிதனுக்கு ஏற்படுகின்ற  அனைத்து துன்பங்களுக்கும் காரணம் அவனது ஆசையே என்ற உண்மையை உணரச் செய்து, அவர்களின் ஆசைகளையும், பற்றுக்களையும் துறக்கச் சொல்லி நல்வழிப்படுத்திய மகானே கௌதம புத்தர்  ஆவார்.

இன்று ஸ்ரீலங்கா, பூட்டான், இந்தியா, மியன்மார், கம்போடியா, சீனா, ஹொங்கொங்,  ஜப்பான்,  திபெத், லாவோஸ்,  சிங்கப்பூர், தாய்வான், தாய்லாந்து, வியட்நாம், தென் கொரியா, பங்களாதேஷ், மொங்கோலியா, மலேசியா இந்தோனேசியா, நேபாளம், வட கொரியா  போன்ற பல நாடுகளில் வாழும் பௌத்தர்கள் இந்த தினத்தினை சமய அனுஷ்டானங்களுடன் அனுஷ்டிக்கின்றனர்.

மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் கூட வெசாக் தினம் கொண்டாடப்படுகின்றது.

இந்தியாவில் ‘புத்த பூர்ணிமா’ எனப் பெயரிடப்படுகின்ற இந்த தினமானது பீகார் மாநிலத்திலுள்ள ‘புத்தகயாவிலும்’, உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ‘சாரநாத்திலும்’ சிறப்பு வழிபாடுகளுடன் அனுஷ்டிக்கப்படுவதுடன், இந்த தினத்தில் பல நாடுகளிலுள்ள பௌத்த மக்களும் கலந்து கொள்வதுவும்  இதனது சிறப்பம்சமாகும்.

இந்த தினத்தின் முக்கியத்துவமானது இது ஒரு மத அனுஷ்டானங்களுடனான நிகழ்வாக மாத்திரமல்லாது, ஒரு கலாசார அம்சமாகவும் கருதப்படுகின்றது.

பௌத்த தர்மமானது இலங்கையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது இவ்வாறானதொரு பௌர்ணமி தினத்திலேயே ஆகும்.

பௌத்த மதம் உலகில் காணப்படுகின்ற  முக்கியமான மதங்களில் ஒன்றாகும்.

பிரித்தானிய ஆட்சி காலத்தில் அன்றைய சிலோனின் ஆளுநராக இருந்த சேர் ஆர்தர் ஹமில்டன் கோர்டன் என்பவர் வெசாக் போயாவை இருபத்தேழாம் திகதி மார்ச் மாதம்

1885 பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தினார். அவரது அறிவிப்பைத் தொடர்ந்து இருபத்தெட்டாம் திகதி  ஏப்ரல் மாதம் 1885 முதலாவது முழு பூரணை வெசாக் விடுமுறை இலங்கையில் அனுஷ்டிக்கப்பட்டது.

முதலாவது வெசாக் கொடியானது இருபத்தெட்டாம் திகதி மே மாதம் 1885இல் ஏற்றி வைக்கப்பட்டது.

அத்துடன், இலங்கை அரசாங்கத்தின் உன்னதமான முயற்சியின் காரணமாக,  1999 ஐக்கிய நாடுகள் சபை, அதனது  பொதுச்சபையினது 54ஆவது அமர்வில்,  54/ 115ஆவது தீர்மானப்படி,  மனிதகுலத்துக்கு கௌதம புத்தர் அவர்கள் ஆற்றிய பங்களிப்பினையும், பௌத்த மதம் உலகிற்கு ஆற்றிய பங்களிப்பினையும், மேன்மையாகக் கருதி, இத்தினத்தினை ஒரு சிறப்புத் தினமாக அறிவித்தது.

அன்றிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்திலும், அதனது ஏனைய அலுவலகங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் அனுஷ்டிக்கப்படுவதோடு, இந்த வருடத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் இந்த தீர்மானமானது அதனது இருபத்தைந்தாவது வருடத்தினை பூர்த்தி செய்திருப்பதானது சிறப்பு மிக்க அம்சமாகும்.

“உலகளாவிய ரீதியில் பொதுமக்கள் பல்வேறு  நெருக்கடிகளுக்கு முகங் கொடுத்துக் கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் கௌதம புத்தரின் போதனைகளான சகிப்புத்தன்மை, கருணை, மனிதாபிமானம் ஆகிய பண்புகளைப் பின்பற்றி நடப்பது இன்றியமையாததாகும்” என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமான அன்ரோனியோ குட்டரஸ்  அவர்கள் வெசாக் தினத்தை முன்னிட்டு 2023இல் வெளியிட்டிருந்த விசேட செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

“மக்களுக்கிடையிலான புரிந்துணர்வு, நிலையான அமைதி, மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல்” போன்ற ஐக்கிய நாடுகள் சபையின் இலக்குகளுக்கும்,  இத்தினத்தைக் கொண்டாடுவதற்கான நோக்கத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சுட்டிக் காட்டி இருந்தார்.

இந்த உலகம் யுத்தங்களுக்கும், எதிர்பாராத அச்சங்களுக்கும், முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், புத்த பகவானது போதனைகள் இன்றைய காலகட்டத்தில் முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகின்றது.

இலங்கையில் அரச வெசாக் உற்சவமானது மே மாதம் 21ஆம் திகதியிலிருந்து  27ஆம் திகதி வரை ஒரு வார காலம் மாத்தளையில் நடைபெற உள்ளது. இந்த வருடத்திற்கான வெசாக் உற்சவ கருப்பொருளாக அமைவது, “மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்பதை பாராமல்,  நாம் என்ன செய்தோம்” என்பதாக அமைகின்றது.

நாடு அரசியல்,  பொருளாதார ரீதியாக ஸ்திர நிலைமை அடைந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில், இந்த வெசாக் தினமானது  இவ்வருடம் முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகிறது.

கௌதம புத்தர் அருளிச் சென்ற தத்துவங்கள் எண்ணிலடங்காதவை. அவைகள் எக்காலத்திற்கும், எல்லா மக்களுக்கும் பொருந்தக் கூடிய ஒன்றாகும்.

புத்தரின் நான்கு  முக்கிய போதனைகள்:

*துன்பத்தை மக்கள் எவராலும் தடுக்க முடியாது. பிறப்பு, நோய், முதுமை, இறப்பு, ஆசை, பசி,வெகுளி, பகை, மயக்கம் அனைத்தும் துன்பத்தைத் தருபவை.

* உலகில் மக்களின் துக்கத்திற்குக் காரணம் ஆசையும் பற்றுமே ஆகும்.

* ஆசையைத் துறப்பது துன்பத்தைத் தடுக்கும்.

* நற்காட்சி, நல்லெண்ணம், நன்மொழி, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடைபிடி, நற்தியானம் ஆகிய எட்டும் துக்கத்தைப் போக்கும் வழிமுறைகள் ஆகும் என்பதாகும்.

மனிதன்  உயர்வதும், தாழ்வதும் அவனது பிறப்பால் அன்றி, அவனது செயலாலேயே என்பதே புத்த பகவான் அருளிய போதனையின் அடிநாதமாகும்.

கௌதம புத்தரின் போதனைகள் மனிதனையும்,  சமூகத்தினையும் நல்வழிப்படுத்தும் உன்னதமான நற்கருத்துக்களைக் கொண்டவை.

இவரது போதனைகளைச் சரியாகப் பின்பற்றி வாழுகின்ற பொழுது மக்கள் மத்தியில் மன அமைதி, சகோதரத்துவம், மனித நேயம், ஒற்றுமை, நட்புணர்வு ஆகிய பண்புகள் உயர்ந்த நிலையில் மேம்படும் எனலாம்.

இந்த புனித வெசாக் தினத்துடன், சிவனொளிபாத மலைக்கு விஜயம் செய்கின்ற யாத்திரிகர்களது யாத்திரையானது,   நிறைவு பெறுவதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

“எல்லா உயிரினங்களும் பாதுகாப்பாக இருக்கட்டும்.

எல்லா மனிதர்களும் துன்பத்திலிருந்து விடுபடட்டும்.

எல்லா மனிதர்களும் நன்றாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும்.”

-பெரியசாமிப்பிள்ளை செல்வராஜ்

(முன்னாள் ராஜதந்திரி)

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி