வெளிநாட்டு படங்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை அவரது Truth Social தளம் வழியாக வெளியிடப்பட்ட இந்த முடிவு, “அமெரிக்க திரைப்படத் துறையைப் பாதுகாப்பதற்கான அவரது தொடர்ச்சியான முயற்சிகளில் ஒரு துணிச்சலான நடவடிக்கையாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கத் தயாரிப்பாளர்களும் நிறுவனங்களும் வெளிநாடுகளில் படங்களைத் தயாரிப்பதால் ஹொலிவூட் பேரிழப்பைச் சந்திக்கிறது. அதைச் சீராக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ட்ரம்ப், உலகின் பல நாடுகளுக்கு இதற்குமுன் பல்வேறு இறக்குமதி வரிகளை விதித்திருக்கிறார். உலகெங்கும் வரிகள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, சீனத் தயாரிப்புகளுக்கு ஆக அதிகமாக வரி விதிக்கப்பட்டது.
இதற்கு, சீனாவும் பதிலடி நடவடிக்கை எடுத்துள்ளது. குறைந்த அளவே அமெரிக்கத் திரைப்படங்களை நாட்டுக்குள் அனுமதிக்கப்போவதாகச் சீன அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.
டிரம்ப்பின் புதிய வரி திரைப்படத்துறையில் எப்படி நடைமுறைப்படுத்தப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இது பற்றி ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், "அமெரிக்க திரைப்படத் துறை (ஹொலிவூட்) மிக வேகமாக பேரழிவிற்குள்ளாகி வருகிறது. மற்ற நாடுகள் அதற்கான முயற்சியை ஒருங்கிணைந்து மேற்கொண்டுள்ளன. அது அமெரிக்க தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அனைத்துக்கும் மேலாக இந்தப் படங்கள் பிரச்சார பாணியில் உள்ளன.
“எங்களுக்கு வேண்டியதெல்லாம் மீண்டும் அமெரிக்காவில் திரைப்படங்கள் எடுக்க வேண்டும். இந்த புதிய கட்டண முறை திரைப்படத் துறையில் நிலவும் போட்டியை சமன் செய்வதையும், அமெரிக்க தேசத்தில் உள்ள ஸ்டூடியோக்கள் தங்கள் செயல்பாடுகளைத் தொடர ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.
ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பால் அமெரிக்காவில் திரையிடப்படும் ஏனைய நாடுகளின் திரைப்படங்களுக்கான டிக்கெட் கட்டணம் உயரும் என்று கூறப்படுகிறது. மேலும் 100 சதவீத வரி விதிப்பால் டிக்கெட் கட்டணம், படப்பிடிப்பு, தொழில்நுட்ப பணிக்கான கட்டணங்களும் உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.