தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணால் அளவிடப்படும் இலங்கையின் ஒட்டுமொத்த
பணவீக்கம், மார்ச் 2025இல், ஆண்டு அடிப்படையில் -1.9 சதவீதமாக இருந்தது. இது, பெப்ரவரி 2025இல் பதிவான -3.9 சதவீதத்திலிருந்து அதிகரித்துள்ளது என்று, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில் உணவுப் பணவீக்கம் 0.8 சதவீதமாக உயர்ந்தது. இது, முந்தைய மாதத்தில் -1.1% ஆக இருந்தது. அதே நேரத்தில், உணவு அல்லாத பணவீக்கம் -4.1% என்ற அடிப்படையில் எதிர்மறையாக இருந்தது.
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (அடிப்படை ஆண்டு 2021=100) பெப்ரவரியில் 206.2 ஆக இருந்து மார்ச் மாதத்தில் 206.0 ஆக சற்றுக் குறைந்துள்ளது.
மாதாந்திர அடிப்படையில், உணவுப் பொருட்களின் விலைகள் குறியீட்டில் ஏற்பட்ட மாற்றத்திற்கு -0.10% பங்களித்த அதே நேரத்தில், உணவு அல்லாத வகை எந்த மாற்றத்தையும் காட்டவில்லை.
உணவு, எரிசக்தி மற்றும் போக்குவரத்து தவிர்த்து, முக்கிய பணவீக்கம் மார்ச் மாதத்தில் -0.6% ஆக பதிவாகியுள்ளது. இது, மாதத்திற்கு மாதம் -0.1% குறைவு.
குறுகிய கால பணவாட்டம் இருந்தபோதிலும், 2021 அடிப்படையுடன் ஒப்பிடும்போது சராசரி விலை நிலை 106% அதிகரித்துள்ளது.