அமெரிக்காவின் புதிய வரிகளால், பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கத்தை ஈடுசெய்ய, இலங்கையுடனான
48 மாத நீடிக்கப்பட்ட நிதி வசதிக்காக, சர்வதேச நாணய நிதியத்திடம் சலுகைகளை அரசாங்கம் கோரும் என்று திறைசேரியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நிதியின் நான்காவது தவணை மே அல்லது ஜூன் மாதங்களிலும், ஐந்தாவது தவணை நவம்பரத்திலும் வழங்கப்படவுள்ளது.
இந்தநிலையில், அமெரிக்க வரிகளின் தாக்கத்தை அடுத்து, வருமான இலக்குகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திடம் சலுகைகளை அரசாங்கம் கோரும் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் 2023 இல் ஆரம்பித்ததில் இருந்து அனைத்து வருமான இலக்குகளையும் இலங்கை உரிய முறையில் கடைபிடித்து வருகிறது. எனினும் அமெரிக்க வரி விதிப்பின் கீழ் தற்போது சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத் திட்டம் 2025ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதி வருமானத்தில், கூடுதலாக 3 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை நிர்ணயித்துள்ளது. இதன்படி அமெரிக்க வரிகளை எதிர்கொள்ளும் நிலையில் இதனை அடைவது கடினம் என்று திறைசேரியின் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.