சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நெருங்கி வரும் வேளையில், சந்தையில் விற்கப்படும் தரமற்ற
பட்டாசுகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் பொதுமக்களை எச்சரித்து வருகின்றனர்.
கடைகளில் கிடைக்கும் பல பட்டாசுகள் தரமற்றவை என்பதால், அவற்றைப் பயன்படுத்துவதால் கடுமையான காயங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று, கொழும்பு தேசிய கண் மருத்துவமனையின் இயக்குநரும் சிறப்பு கண் மருத்துவருமான டாக்டர் ஜெயருவன் பண்டார கூறுகிறார்.
"பாதுகாப்பற்ற பட்டாசுகளால் கண் காயங்கள், தீக்காயங்கள் மற்றும் காது கேளாமை அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம். இந்தக் காயங்களில் பெரும்பாலானவை, குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே ஏற்படுகின்றன" என்று அவர் கூறினார்.
பட்டாசுகளைப் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்கவும், நம்பகமான விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே வாங்குமாறு, டாக்டர் ஜயருவன் பண்டார அறிவுறுத்துகிறார்.
"சிறு குழந்தைகளுக்கு பட்டாசுகளை கொடுக்க வேண்டாம். எப்போதும் வெளியில், மக்கள், வீடுகள் மற்றும் வாகனங்களிலிருந்து விலகி அவற்றைப் பற்றவைக்கவும். அவற்றைப் பற்றவைக்க ஒரு நீண்ட குச்சியைப் பயன்படுத்தவும். பின்னர் விரைவாக அந்தப் பகுதியை விட்டு வெளியேறவும்" என்று அவர் கூறினார்.
"பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்பு கண்ணாடிகளை அணிய வேண்டும். மேலும், மீண்டும் தீப்பிடித்தால் அருகில் ஒரு வாளி தண்ணீர் அல்லது மணல் வைத்திருக்க வேண்டும்" என்று டாக்டர் ஜயருவன் பண்டாரா மேலும் கூறுகிறார்.